Monday, February 8, 2010

புலிகள் ஆதரவு சிடி விற்ற மூவர் கைது

கோவையில் நடைபெற்ற உலகத்தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு சிடி விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வஉசி பூங்கா மைதானத்தில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரசாரம் நடக்கும் என்று கருதி போலீசார் அனுமதி மறுத்தனர். இக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி வழங்கினர்.

மாநாடு துவங்கிய நாளிலேயே மாநாட்டு வளாகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக சிடி, உருவப்படங்கள் விற்பனை நடந்ததைக் கண்ட போலீசார் எச்சரித்தனர். நிறைவு நாளான நேற்றும் தடை மீறி சி.டி விற்பனை நடந்தது. அவற்றை ரேஸ்கோர்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தடையை மீறி விற்ற விழுப்புரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஆதம்(53), மதுரை நேதாஜி நகரைச் சேர்ந்த பரமன்(43), மதுரை திருநகரைச் சேர்ந்த தமிழரசன்(32) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்பனையில் ஈடுபட்ட சரவணன், தயாளன், இளங்கோ, டார்வின், கரையான் செல்வராஜ், சுப்பு ரெட்டியார் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்கள் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment