கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் நிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "ஐஎன்எஸ் சுகன்யா" என்ற இந்தப் போர்க்கப்பல், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் கமாண்டர் பரீஷ் சௌனி தலைமையிலான 110 க்கும் அதிகமான கடற்படையினர் பணியாற்றுகின்றனர். இந்தியப் போர்க்கப்பலுடன், மாலத்தீவுக் கடற்படையின் கடலோரக் காவல் கப்பல் ஒன்றும் கொழும்புக்கு வந்துள்ளது.
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க,நேற்று இந்தியப் போர்க்கப்பலான சுகன்யாவை பார்வையிட்டு அதன் கட்டளை அதிகாரியுடன் பேச்சு நடத்தியிருந்தார். இவருடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும், இந்தியத் தூதரகத்திலுள்ள பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் பிரதீப் சிங்கும் இந்தப் போர்க்கப்பலுக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களுக்கு சுகன்யா போர்க்கப்பலில், இந்தியக் கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கியிருந்தனர்.
இந்தியப் போர்க்கப்பலும், மாலத்தீவுக் கடலோரக் காவல் கப்பலும் இன்று கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. அப்போது இலங்கை கடற்படையின் நான்கு அதிகாரிகள்,கூடுதல் பயிற்சிகளுக்காக இந்தியப் போர்க்கப்பலில் புறப்பட்டுச் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment