Thursday, February 11, 2010

இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செயல்படமாட்டோம்: இலங்கை

இந்தியாவின் நலன்களுக்கு பங்கம் எற்படும் வகையில் சிறிலங்கா ஒருபோதும் செயற்படாது என்று ஐ.நா.சபைக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே படகுசேவையை தொடங்குவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்கு இந்தியா சென்றுள்ள அவர், அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பது குறித்தும், அது இந்தியாவின் நலன்களை அச்சுறுத்தும் வகையில் வளர்ச்சியடைந்து வருவது குறித்தும் கேட்டபோது," சீனா எமது பழைய நட்புநாடு. இந்தியா எமது பழம்பெரும் மூத்த நட்புநாடு.

இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவு இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்டது.அப்படிப்பட்ட நெருக்கமான உறவுகொண்ட இந்தியாவின் நலன்களுக்கு சிறிலங்கா ஒருபோதும் எதிராக செயற்படாது" என்று பதிலளித்தார்.

சிறிலங்காவில் போருக்கு பின்னரான காலப்பகுதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், "விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை சிறிலங்காவில் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பம்.

அதனை பயன்படுத்து தேசிய நல்லிணைக்கத்தை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்.

ஆனால், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கமுடியாது. தற்போதைக்கு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் அரசு கவனம் செலுத்திவருகிறது" என்று கூறினார்.

No comments:

Post a Comment