விடுதலைக்காக கெஞ்சமாட்டோம். அனோமா பொன்சேகா பேட்டி.
பாதுகாப்பு அமைச்சின் செயலரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி கண்டிருந்த ஸ்ரேய்ட் ரைம் பத்திரிகையின் ஊடகவியலாளர் ரவி வேலூர் ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகவை அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து பேட்டி கண்டுள்ளார். பேட்டியின் முழுவடிவம் கீழே.
கேள்வி : ராஜபக்சக்களுக்கும் உங்களுக்குமிடையே எவ்வாறு பிணக்கு உருவானது?
பதில் : எனக்கு புரியவில்லை. நாம் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் நான் சிலவற்றை உணர ஆரம்பித்தேன். அங்கே சில தவறான புரிதல்கள் இருந்தன. யுத்தத்தின் பின்னர் சில கசப்பான அனுசரிப்புக்கள் காணப்பட்டது. சரத்துக்கு இராணுவத்தளபதியாக தொடரவேண்டிய தேவையிருந்தது. அவர் பாதுகாப்பு பிரதானியாக விரும்பவில்லை. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களது நலன்தொடர்பாக சில வேலைகளை புரியவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. இராணுவத் தளபதியாக தொடரலாமா என கோத்தபாயவை கேட்டிருந்தார், அவர்கள் அதற்கு இடம்கொடுக்கவில்லை. இதுவே அவர் இரவுகளில் பேசும் பிரதான விடயமாக இருந்தது.
இதுவே எனக்கு தெரிந்தவை வேறுவிடயங்கள் பற்றி எதுவும் தெரியாது. இராணுவத்தினர் ஒவ்வொரு வீடுகளைக் கொண்டிருக்கவேண்டும், அவர்கள் மரங்களின் கீழ் இருக்கமுடியாது என்பதே சரத்தின் பிரதான பிரச்சினையாக இருந்தது.
கேள்வி : அவர் சேவையில் இருக்கும்போது தனது அரசியல் எதிர்காலத்திற்காக சதிகளை செய்தார் என கூறப்படும் செய்திகளில் உண்மைகள் உண்டா?
பதில் : சீருடையை கழற்றி வைத்துவிட்டு மிகவும் ஒழுக்கத்துடனேயே அவர் அரசியலுக்குள் நுழைந்தார். கடந்த நவம்பரில் அவர் ஓய்வு பெற்றதிலிருந்து அவர் ஒர் சிவில் பிரஜை. ஆனால் அவர்கள் அவரை இராணுவச் சட்டத்தின் கீழ் மிரட்டுகின்றார்கள்.
கேள்வி : இராணுவப் புரட்சி ஒன்றை மேற்கொள்ளும் திட்டங்களை அவர் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருந்தீர்களா?
பதில் : அவ்வாறான ஒன்றை செய்யவேண்டிய தேவை ஒன்று அவருக்கு இருந்திருந்தால் அதை அவர் மிகவும் நேரத்திற்கு செய்திருப்பார். அதாவது பிரபாகரன் கொல்லப்பட்டவுடன் அதை அவர் செய்திருக்கமுடியும் ஏனென்றால் அப்போது அவர்தான் இந்நாட்டின் கதாநாயகனாகவிருந்தார். இங்கே பல புனைக்கதைகள் உண்டு. அவர் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் தனது முழு மரியாதையையும் செலுத்தியிருந்தார். மற்றவர்களுக்கு அல்ல. அவர்களுக்கு கிழ்படிந்தவராக 100 விழுக்காடு நம்பியிருந்தார். பின்நாட்களில் அவர் ஏமாற்றம் அடைந்தார். ஜனாதிபதியையும் பாதுகாப்புச் செயலாளரையும் சுற்றியுள்ளவர்கள் சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தார்கள்.
கேள்வி : தனக்கு எதிரானை ஊடகவியாளர்களை கொன்றார், துன்புறத்தினார் என சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக என்ன கூறுவீர்கள்?
பதில் : இது எப்போதும் நடைபெறவில்லை. லசந்த விக்கிரமதுங்கவின் சம்பவம் இடம்பெற்றபோது (ஜனவரி 2009) அவர் யுத்த நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தார், நான் உங்களுக்கு உறுதி கூறுகின்றேன், அச்சமயத்தில் அவருக்கு வேறுவிடயங்களுக்கு நேரமிருக்கவில்லை. அவர் எப்போதும் வரைபடங்களுடனனேயே இருந்தார். நிலம் வரைபடங்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது. சாப்பிடும்போதும், நடக்கும்போதும் அவற்றையே பார்ப்பார். அவரது ஞாபகத்தில எப்போதும் வரைபடமே இருந்தது. எவரும் ஓர் யுத்தத்தை செய்து கொண்டு அதேநேரத்தில் சிவிலியன்களை கொல்லும் சதியை செய்யமுடியாது. அவர்கள், அவரது கனிஸ்ட அதிகாரிகளில் ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு அவரை எனது கணவனுக்கு எதிராக சாட்சி சொல்லுமாறு வற்புறுத்துகின்றார்கள். இந்த அதிகாரிகள் யுத்தகாலத்தில் எனது கணவனுக்கு சிறந்த சேவையினை வழங்கியிருந்தார்கள். 100 வீதம் நிச்சயமாக என்னால் கூறமுடியும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை.
கேள்வி : இடைத்தங்கல் முகாம் மக்களை விரைவாக குடியமர்த்தும் திட்டத்தினை அவர் எதிர்த்ததது தொடர்பாக என்ன கூறுவீர்கள்?
பதில் : வடக்கு மிதிவெடிகளால் நிரப்பப்பட்டிருந்தது. அங்கு மிதிவெடிகள் 100 வீதம் அகற்றப்படவேண்டும் என்ற தேவை அவருக்கு இருந்தது. அதற்கு நேரம் எடுத்திருக்கும். ஆகவேதான் அவர் அம்மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் வைத்திருக்கவேண்டும் என கூறியிருந்தார். இப்போதும் அவர் என்னிடம் கூறுவார், இவர்கள் மிகவும் வேகமாக மீள் குடியேற்றுகின்றார்கள். அது அவருக்கு வேதனையாக இருந்தது. அவர்கள் தேர்தல் காரணமாகவே மிகவும் விரைவாக செய்தார்கள். அது அவ்வாறு செய்யப்படவேண்டியது ஒன்றல்ல.
கேள்வி : அவருடைய மனநிலை எவ்வாறு உள்ளது?
பதில் : உளரீதியாக அவர் மிகவும் தைரியமாகவுள்ளார். அவருள்ளே பிரமாண்டமான சக்கிகள் உண்டு. அவற்றை எவராலும் எடுத்துவிடமுடியாது.
கேள்வி : அவருடைய சிறைச்சாலை தராதரங்கள் எவ்வாறுள்ளது?
பதில் : திருமணமான கனிஸ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இருப்பிடத்தொகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர்கள் கூறுவதுபோல் சொகுசு இருப்பிடமல்ல. எனக்கு தெரியும் ஏனென்றால் நான் இராணுவத்தினனின் மனைவி. அங்கே இரண்டு அறைகள் உண்டு. குளிருட்டிகள் இல்லை. காற்றாடிகள் மட்டுமே. பொதுவான மலசலகூடம்.
கேள்வி : என்ன சாப்பிடுவார்?
பதில் : சோறு , கறி தேங்காய்பூச்சம்பல். அவருக்கு அறுக்குளா மீன்கறி, பிலாப்பழம் என்பன பிடிக்கும். வெண்ணை எடுக்கப்பட்ட பாலை நான் அவருக்கு கொண்டு செல்வேன் ஏனென்றால் இறுதியாக அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் அவரால் முழுப்பால் குடிக்கமுடியாது. அவருடைய உயிரை காப்பாற்றியமைக்காக நான் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நன்றி கூறுவேன். இல்லாவிட்டால் அவர் இன்று இங்கிருக்கமுடியாது. அவர் சிங்கப்பூர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது நாமும் அங்கு ஒருமாதமளவில் இருந்தோம். அவருடைய நுரையீரல் பகுதியில் ஒரு மோட்டார் குண்டுத்துண்டும் இரண்டாவது துண்டு சிறுநீரக பகுதியிலும் உள்ளது. இறுதியாக இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குலில் அவரது குதப்பகுதியும் பாதிப்படைந்துள்ளது.
கேள்வி : நீங்களும் ராஜபக்சக்களும் யுத்தநிறுத்தம் ஒன்றை அல்ல இடைக்கால சமாதானம் ஒன்றை செய்துகொள்ள வாய்ப்புகள் உண்டா?
பதில் : நேரான வழியில் வெளியே வரவேண்டும் என்பதே அவரது தேவை. சட்டம் சரியான பதிலைச் சொல்லும். அவர் எவ்வித தவறுகளையும் செய்யவில்லை. நாம் ஏன் அவர்களிடம் கெஞ்சவேண்டம். நான் கூட அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டேன். உண்மைகள் ஒருநாள் வெளிவரும்.
கேள்வி : அவருக்கு தமிழர்கள் மீது வெறுப்பா?
பதில் : எமக்கு மிக நல்ல தமிழ் நண்பர்கள் இருக்கின்றார்கள். இன்று அவர்கள் எங்களுக்கான உணவினைக்கூட வழங்குகின்றார்கள். அவருடைய சிறுபராயத்தில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்களுடனிருந்துள்ளார். என்னுடைய தந்தை யாழ்பாணத்தில் நல்ல நண்பர்களைக் கொண்டிருந்தார். நாம் காதலர்களாக இருந்தபோது கொழும்பு சென்றால் கிறீன்லான்ட், சரஸ்வதி போன்ற சைவ உணவகங்களிலேயே உணவுண்போம். அப்போது நான் ஒரு மாணவி, அவர் சிங்க ரெஜிமென்டில் லெப்டினட்டாக இருந்தார்.
கேள்வி : அவர் கைது செய்யப்பட்டபின்னர் நீங்கள் திருமதி ராஜபக்சவுடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுவது உண்மையா?
பதில் : ஆம். நாம் நல்ல சினேகிதிகளாக இருந்திருக்கின்றோம். நான் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது அவர் மொஸ்கோவில் இருந்தார், பின்னர் இரு மணிநேரத்தில் அவர் எனக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். நான் எனது கணவர் கைது செய்யப்படவில்லை கடத்தப்பட்டுள்ளார் என்பதை கூறியிருந்தேன். அவர்கள் அவரை மிருகத்தைப்போல் இழுத்து தூக்கியிருந்தார்கள். நான் அவரிடம் எனது கணவரின் உயிரைக்காப்பாற்றுமாறு கேட்டிருந்தேன். தான் ஏதாவது செய்வதாக திருமதி ராஜபக்ச கூறியிருந்தார். அவ்வாறு அவர் செய்திருக்கின்றார் என நான் நம்புகின்றேன். நாம் பெண்களாக எம்மிடையே இன்னும் தொடர்புகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் துணைவியர்களும் தாய்மாருமே. நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
0 comments :
Post a Comment