சிட்னியில் மலேசியர் தாக்கப்பட்டு கொலை
சிட்னியில் வசித்து வந்த மலேசியர் ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் சுத்தியலால் கடுமையாகத் தாக்கி கொலை செய்ததாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய தூதரக ஊழியரான 43 வயதான அந்த மலேசியர், சிட்னியில் உள்ள அவரது வீட்டுக்கு முன் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக துப்பறியும் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஷேன் வூல்பேங்க் கூறினார்.
சிட்னியில் மேரியன் தெருவிலுள்ள அவரது வீட்டுக்கு வெளியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். காரிலிருந்து அவர் இறங்கியதும் அவரை இருவர் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாகத் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட அந்த மலேசியர் முகம்மது ஷா சைமின் என்று ஆஸ்திரேலியப் போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிட்னியில் வசித்து வந்ததாகவும் அவர் அண்மையில்தான் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றார் என்றும் கூறப்படுகிறது.
அவர் தாக்கப்படுவதற்கு முன்பு சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் அவர் ஓட்டி வந்த கார் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலிசார் கருதுகின்றனர். அவரது காரை இருவர் காரில் துரத்தி வந்தததை சிலர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த அந்த இடத்தில் சுத்தியல் உள்ளிட்ட சில ஆயுதங்களை போலிசார் கைப்பற்றியுள்ளனர். காரில் தப்பிச் சென்ற கொலைகாரர்களை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அத்தாக்குதலை நேரில் பார்த்தவர்களை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சைமின் தாக்கப்பட்டபோது அதை நேரில் பார்த்த ஒரு பெண் தைரியமாகத் தலையிட்டு அவரை காப்பாற்ற முயன்றிருக்கிறார். அந்தப் பெண் தற்போது போலிசாரின் புலன் விசாரணைகளுக்கு உதவி வருவதாக போலிஸ் இன்ஸ்பெக்டர் வுல்பேங்க் கூறினார். சிட்னியில் கொலை செய்யப்பட்ட சைமின், மலேசிய தூதரக ஓட்டுநராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் என்று மலேசிய தூதரக அதிகாரி முகம்மது நசீர் அபு ஹசன் கூறினார். இந்த துயரச் செய்தி தங்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment