Monday, February 1, 2010

இனந்தெரியாத நபர்களால் லங்கா ஈ நீயூஸ் இணைய அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

லங்கா ஈ நீயூஸ் இணையத்தளத்தின் அலுவலத்தினுள் கடந்த 28ம் திகதி புகுந்த இன்தெரியாத நபர்கள் அலுவலகத்தினுள் சல்லடைபோட்டு தேடுதல் நடாத்திவிட்டு அலுவலகத்தின் பிரதான கதவினை இரும்புச் சங்கிலியுடனான பூட்டொன்றினால் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இணையத்தள நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கையில் ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்தவண்ணமே சென்று கொண்டிருக்கின்றது. லங்கா இரிதா பத்திரிகை நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரம ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். லங்கா ஈ நியூஸ் இணையத்தின் ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களாக காணாமல் போயுள்ளார். அவருக்கு நேர்ந்த கதி என்னவென இதுவரை எந்த தகவல்களும் இல்லை. அதே நேரத்தில் அலுவலகத்திற்கு இனந்தெரியாக நபர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அலுவலகத்தை சுற்றி 21-3450 எனும் இலக்கம் கொண்ட முச்சக்கர வண்டி ஒன்றில் எந்த நேரமும் இருவர் சுற்றி திரிவதாக அவ்விணையம் தெரிவிக்கின்றது.

அத்துடன் லங்கா ஈ நியூஸ் உட்பட சில இணையத்தளங்களை ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பார்வையிடமுடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளது. அரசின் உயர் மட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற வாய்மூல உத்தரவை அடுத்தே அவ்வாறு ஸ்ரீ லங்கா ரெலிக்கொம் மேற்படி இணையங்களை அதன் வாடிக்கையாளர்கள் பார்வையிடமுடியாதவாறு தடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment