Monday, February 22, 2010

போர்த்துக்கல் தீவில் வெள்ளம், மண் சரிவு

போர்த்துக்கல் நாட்டில் உள்ள மெடிரா தீவில் தொடர்ந்து பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் மண் சரிவினாலும் அத்தீவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்திலும் மண் சரிவிலும் சிக்கி அங்கு குறைந்தது 32 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மெடிரா தீவுக்கு போர்ச்சுகல் ராணுவம் இரு கப்பல்களையும் ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளது. மீட்புப் பணிகளுக்கு உதவ கூடுதலாக மீட்புக் குழுவினரும் தீயணைப்பாளர்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியது.

பல வீடுகளும் கட்டடங்களும் மண்ணுக்குள் புதைந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டன. பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

போர்ச்சுகல் பிரதமர் ஜோஸ் சாக்கிரேட்ஸ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மெடிரா தீவை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பிரபலமான இடம் மெடிரா தீவு. 1993-ம் ஆண்டுக்குப் பிறகு அத்தீவை இயற்கைப் பேரிடர் வாட்டுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

No comments:

Post a Comment