Monday, February 8, 2010

ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். (2 வது இணைப்பு)

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ ரகசியங்களை வெளியிட்டார் , நாட்டின் ஜனாதிபதி உட்பட அவரது குடும்பத்தினரை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படவுள்ளார் என பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில் ரஜகீத மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளமை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாட் சமரசிங்கவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக சில்வா அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக தகவல்கள் தொடரும்

ஜெனரல் பொன்சேகாவின் கைது தொடர்பாக அரச தொலைக்காட்சியில் தோன்றி கருத்து தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல, அரசினை கவிழ்பதற்காக எதிர்கட்சிகள் மேற்கொண்ட சதிகள் தொடர்பாகவும், சரத்பொன்சேகா சேவையில் இருந்த போது இராணுவத்தினுள் ஏற்படுத்தியுள்ள பிரிவுகள் தொடர்பாகவும் விசாரணை செய்யப்படவுள்ளதாகவும், இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் தனது காரியாலயத்தில் எதிர்கட்சிகளின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும்போது ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜேவிபி பா.உ சுனில் கண்டுநெந்தி, பா.உ மனோ கணேசன் , பா.உ றவூப் ஹக்கீம் ஆகியோர் உடனிருந்துள்ளனர். இச்செய்தி வெளிவரும் வரையில் அவர்கள் ஜெனரலின் காரியாலய பிரதேசத்தை விட்டு வெளியேறவில்லை. காரியாலய பிரதேசம் படையினரால் முற்றாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் கைது செய்யப்படும் நிகழ்வை டெய்லி மிரர், ஏஎஃ;பி போன்ற ஊடகங்கள் வீடியோ மற்றும் படம் செய்த போதும் அவர்களது டிஜிரல் கமராக்களின் சிப் கள் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவருடன் இணைந்து செயற்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருடன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பேசிய ஜெனரல் பொன்சேகா, இராணுவ புரட்சி ஒன்றை செய்ய முயற்சி செய்திருப்பேனானால் அரசாங்கம் என்னை எப்போதோ கைது செய்திருக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இதுவரை என்னை கைது செய்யாமைக்கு காரணம் நான் அவ்வாறு செய்யவில்லை என்பதை உணர்த்துகின்றது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com