Tuesday, February 2, 2010

சரியான நேரத்தில் சரியான இடத்தில் நிற்பது அறிவு. கனகண்ணா லண்டன்

கவியரசு பாரதிதாசன் அவர்கள், எப்படிப்பட்ட கொள்கைகளை முன்னைய ஆட்சியாளர்கள் கொண்டு இருந்தார்கள் என்பதற்கு ஒரு கதை கூறி விளக்கியிருந்தார். ஒருவன் இரு பசுக்களை வளர்த்து வந்தான். அவன் தனது அயலவரின் நிலைமை அறிந்து அவருக்குத் தனது பசுவில் ஒன்றைத் தானம் செய்து அயலவரின் வாழ்க்கையை வளம்பெற வைத்தால் அதைச் சோசலிசம் என்று கூறலாம். அந்தப் பசுவை அவனிடம் கொடுக்காமல் அப்பசுவை விற்று ஒரு காளை மாட்டை வாங்கி இனப் பெருக்கம் செய்து வியாபாரம் ஆக்கிக் கொண்டால் அது கப்பிற்றலிசம் என்று கூறலாம். அதே இரு பசுக்களையும் அரசாங்கம் அவனிடம் இருந்து எடுத்து அவன் தேவைக்குப் பால் இலவசமாகக் கொடுத்தால் அதை கம்யூனிசம் என்று கூறலாம். அதே இரு பசுக்களையும், அரசு அவனிடம் இருந்து கட்டாயமாகப் பறித்து அவனுக்குப் பாலை விலை பேசி விற்றால் அதை பாசிசம் என்று கூறலாம். அதே இரு பசுக்களையும் அரசு அவனிடம் இருந்து பறித்து அவனயும் கொன்று விட்டு தனக்கு தேவையானவர்களை மட்டும் கவனித்துக் கொண்டால் அது நாசிசம் என்று கூறலாம். இதில் நாம் எந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை ஆராய்வோம். ஆராய்ந்தால் நாம் யார் யாருடன் கூட்டு வைத்து இருந்தோம் என்பதை நாம் சுலாபமாக அறிந்து கொள்ளலாம். கைப் புண்ணுக்கு கண்ணாடியும் வேண்டுமோ?

நமக்கு இப்போ தேவை இன ஒற்றுமையும், அதன் பலன்களும். உறவுகள் தொடரவேண்டும் என்றால், பிரிவினை எண்ணங்கள் அழிக்கப்படல் வேண்டும், ஒற்றுமை வேண்டும் என்றால் வேற்றுமையை மறக்கப்பட வேண்டும். ஏற்கெனவே 22.01.2010 தில் வெண்ணை திரண்டு வரும் போது குடம் உடைந்த கதையின் படிப்பனை பற்றி எழுதியிருந்தேன், எங்களின் அபிலாசைகள் நிறைவேற்றப் பட வேண்டும். அதற்கு நாம் பாடுபட வேண்டும், “ தெய்வததால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்” இரு வறிய வரிகள், ஆனால் அதன் கருத்து மிக ஆழம் உள்ளது. அதே நேரம், “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்,” என்றும் கூறியதும் வள்ளுவனே. இரண்டையும் தந்தது தமிழ்தானே? இதைப் படித்தவர்களும் நாம்தனே? பாவலன் பாமரன் ஆகியதா? பாமரன் பாவலன் ஆகியதா? இதில் இரண்டாவதுதானே முன்னேற்றம்.

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு அமிர்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும். என்று எழுதப்பட்ட வரிகட்கு அவன் இலக்கணம் ஆவதுதான் முறை. அதைப் பரீட்சித்துப் பார்க்குமிடம் இலங்கையாக இருக்க வேண்டும், அதற்குரிய சந்தர்ப்பமு இப்போ தோன்றியுள்ளது. சந்தர்ப்ப வாதிகளின் சமரசம் இல்லாமல் தனியே ( அவர்க்கொரு குணம் ) என்று கூறப் பட்டது போல், அவர் குணங்கள் பாதுகாக்கப் பட்டால், விடிவு தோன்ற வழி வகுக்கும்.

1948 ற்கும் 2010 க்கும் இடையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், நம் மக்கள் சந்தித்த இடம் பெயர்வுகள், பட்டினிகள், போர்களும் அதனால் அவலச் சாவுகளும், அவயவ இழப்புகளும், கூட்டாய் இருந்த குடும்பங்களின் தந்தை அல்லது தாய் அல்லது சொந்தங்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள மனம் இருந்தும்; முடியாமை, இவையாவும் மனத்தில் விரக்தியை ஏற்படுத்தியதா? குரோத மனப்பான்மையை ஏற்படுத்தியதா? அல்லது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினார்களா? துன்பத்தில் இருப்போர்க்கு ஆறுதல் சொல்வதுதான் முறை, அதை விட்டு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுதல், காப்பாற்ற அல்ல அது இனத்தை மேலும் அழிக்க. சில வேளைகளில் எரிகின்ற வீட்டினுள் புடுங்கியது மிச்சம் என்று எண்ணுபவரும் உண்டு. எல்லவற்றையும் விட நடந்தவைகளை நாம் ஒரு அனுபவமாக ஏற்று எஞ்சிய வாழ்வை மலரச் செய்யும் வழியை நாம் ஏன் கற்றுக் கொள்ளல் ஆகாது? தாரை வார்த்த 571077 க்கும் கூடிய வாக்குக்களை பொன்னான இடத்தை அடைய வேண்டிய எண்ணத்தைச் சிந்தியுங்கள். அவை இனிமேலாவது போக வேண்டிய இடத்திற்குப் போக வேண்டிய சந்தர்ப்பத்தில் போனாலே உங்களுக்கு முதல் வெற்றி.

தோல்விகள்தான் வெற்றியின் முதல் படி என்ற அனுபவத்தைப் பாவித்து, ஜனநாயக வழியில் சென்று வாழ்வைச் செப்பம் செய்வோம். அதுதான் முயற்சி, ஜனநாயகத்திற்கும் எல்லையுண்டு அதை மீறினால் முயற்சி பயனளிக்காது. இலங்கையில் பெரும்பான்மை மொழி பேசும் மக்கள் அனைவரையும் இனவாதம் கொண்டவர்கள் என்று எண்ணுதல் “கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” போன்றதாகும். அவர்களில் இனவாதம் இல்லாரும், எது சரி எது பிழை என்று பகுத்து அறியத் தெரியாதோரும் உண்டு. இவர்களின் கூட்டுத்தொகை பெரும்பான்மை மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மை ஆக்குகிறது. அவர்களின் வாக்குரிமைகளை எமது உரிமைக்காக ஒரு ஒற்றை ஆட்சியின் கீழ் அளிக்கக் கோரினால் அதைத் தர அவர்கள் மறுக்க மாட்டார்கள், அவர்கள் அகிம்சையே வழி வந்த புத்தரைத் தொழுபவர்கள். (அவர்களில் அனைவருமே புத்தரின் போதனைகளை பின்பற்றுபவர்கள் அல்லர்) நாமும் அன்பே எமது வழியாகக் கொண்டு கூறப்பட்ட பெரும்பான்மை மக்களின் உறவை நாட வேண்டும். சமாதானத்தையும், உரிமைகளையும் அப்போதுதான் அடையலாம்.

ஜனாதிபதி மகிந்த ரஜபக்க்ஷா ஒரு செவ்வியில் “பெரும்பான்மையினர் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளதவரை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார். இறைமைப் பிரயோகித்தல் என்ற அரசியல் அமைப்பு கூறுகிறது, “ மக்களது சட்டமாகற்றத்துவம், மக்களால் தெரிவு செய்யப் பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாரளுமன்றத்தினாலும் மக்கள் தீர்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப் படுதல் வேண்டும்,” என்றால் ஜனாதிபதி தருவதை எதிர்க இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே! ஆகையினால் நாம் நாட வேண்டியது யாரை என்பதை அரசியல் அமைப்புக் கூறுகிறது. உரிமைக்கான நேரம் நெருங்கும் மணி அடிக்கிறது, ஒற்றுமையை வளருங்கள், வேற்றுமை கூறுபவர்களை வெறுங்கள். நல்ல நேரம் தோன்றும் போது நாமும் கைகொடுப்போம் இலங்கையை முதல் உலகமாக்குவோமாக


No comments:

Post a Comment