Friday, February 26, 2010

இடைத்தங்கல் முகாம் மக்களை விடுவிக்க பொன்சேகா முட்டுக்கட்டையாக இருந்தாராம்.

இடம்பெயர்ந்த தமிழர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா முட்டுக்கட்டையாக இருந்தார் என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோரை அரசு விடுதலை செய்த போதிலும், அவர்களை மீண்டும் முகாம்களில் தடுத்து வைக்குமாறு பொன்சேகா உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் "தெகல்கா" ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் கோத்தபாய.

ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட ஏனைய உலக நாடுகள் இடம்பெயர் மக்களை விடுதலை செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுத்த போதிலும், பாதுகாப்பு குறித்து பொன்சேகா தர்க்கம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20000 தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்ற போது சரத் பொன்சேகா உரிய பாதுகாப்பை வழங்குவதனை விடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாதம் செய்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையிட்டு இந்த விவகாரத்திற்கு தீர்வு வழங்கியதாகவும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment