Sunday, February 28, 2010

இனப்பிரச்சினையின் தீர்வுக்கு கொள்கை எதுவும் இல்லாமலே கூட்டமைப்பு போட்டி

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரிய தலைவர்கள் இனப் பிரச்சினையை வைத்தே அரசியலில் வாழ்ந்தார்கள். இவர்களின் தவறான முடிவுகள் காரணமாக இனப்பிரச்சினை காலத்துக்குக் காலம் புதிய பரிமாணம் பெற்று வளர்ந்ததேயொழியத் தீர்வை நோக்கி நகரவில்லை.

பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. கட்சிகளின் ‘பிரசார போர்’ இனி உச்ச கட்டத்தை அடையப்போகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றது. சென்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தடவை வேட்பாளர்களாக இல்லை. உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவை சேனாதிராசாவையும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். அ. விநாயகமூர்த்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்தான். ஆனால் சென்ற தேர்தலில் அவர் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவில்லை. வன்னியில் போட்டியிட்டுத் தோற்றவர்.

கூட்டமைப்புப் பட்டியலில் சேர்க்கப்படாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பழிவாங்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற முடிவைக் கட்சிக்குள் எதிர்த்தவர்களையும் பொன்சேகாவுக்காகப் பிரசாரம் செய்யாதவர்களையுமே கூட்டமைப்புத் தலைமை ஓரங்கட்டியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் வேறு காரணங்களைக் கூறியிருக்கின்றார்கள். பழைய தமிழரசுக் கட்சிக் காரருக்கே நியமனம் என்பதும் சென்ற தேர்தலில் புலிகளால் நிறுத்தப்பட்டவர்களை நியமிக்கவில்லை என்பதும் தமிழ்த் தேசியம் பற்றிப் போதுமான அளவு பேசாதவர்களை நியமிக்கவில்லை என்பதுமே அக் காரணங்கள்.

இக்காரணங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரிக்கின்றார்கள். இக் காரணங்களை மக்கள் ஏற்கப்போவதில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே தேசியம் பேசியவர்கள்தான். ஓரங்கட்டப்பட்ட எம். பிக்களில் சிலர் எல்லோரிலும் பார்க்கக் கூடுதலாகத் தேசியம் பேசியவர்கள்.

பழைய தமிழரசுக் கட்சிக்காரருக்கே இடம் என்றால் சுரேஷ் பிரேமச்சந்திரன் எந்தக் காலத்தில் தமிழரசுக்கட்சியில் இருந்தவர் என்ற கேள்வி எழலாம். ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிலும் பலர் தமிழரசுக் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்களே.

புலிகளால் நிறுத்தப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என்பது ‘பூச்சுற்றும்’ கதை. சென்ற பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்களாகப் போட்டியிட்ட எல்லோரும் புலிகளால் நிறுத்தப்பட்டவர்களே. முழு உலகத்துக்கும் இது தெரியும்.

பழையவர்களை நீக்கியதற்கான உண்மைக் காரணம் மூன்று பேருக்குத்தான் தெரியும் என்கிறார்கள் நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள். சம்பந்தனும் சேனாதிராசாவும் பிரேமச்சந்திரனும் தான் அந்த மூன்று பேருமாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகப்பட்ட புதுமுகங்களைக் களத்தில் இறக்கியிருக்கின்றது. கூட்டமைப்பின் மீது மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியைப் புதுமுகங்களின் மூலம் மறைப்பதற்கான முயற்சி என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

புதுமுகங்களை நியமிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் எந்தக் கொள்கையும் இல்லாமல் புதுமுகங்களை நிறுத்துவதால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ்த் தலைமைக்குப் பாரம்பரிய உரிமை கோரலாம். தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாம் ஒரே பாரம்பரியத்தில் வந்தவையே. ஆனால் கொள்கையைப் பொறுத்தவரையில் பாரம்பரிய உரிமை கோர முடியாது. இனப்பிரச்சினை தொடர்பாகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் காலத்திலும் கொள்கை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி சமஷ்டியை முன்வைத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. பின்னர் மாவட்ட சபையை ஏற்றுச் செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டது. இப்போது எந்தக் கொள்கையும் இல்லாமல் நிற்கின்றது.

புலிகளின் ஆயுதப் போராட்டத்தோடு தனிநாட்டுக் கோரிக்கையும் தோல்வியடைந்துவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கின்றார்கள். தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாக இன்று வரை அவர்களால் கூற முடியவில்லை. ஆனால், தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்று பல மாதங்களாகச் சொல்கின்றார்கள். அத்திட்டம் இப்போதும் தயாரிப்பு நிலையிலேயே இருக்கின்றது. தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்க முடிந்தது. ஆனால் பல மாதங்களாகியும் தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக கொள்கை எதுவும் இல்லாமலே கூட்டமைப்பு வேட்பாளர்கள் களமிறங்குகின்றார்கள்.

தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கும் அருகதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று ஆனந்தசங்கரி அண்மையில் கூறினார். அவர் என்ன அடிப்படையில் அப்படிக் கூறினாரோ தெரியாது. ஆனால் கூட்டமைப்புக்கு அருகதை உண்டா என்ற கேள்வியைப் பலர் கேட்கின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோருபவர்கள் யாராக இருந்தாலும், இனப் பிரச்சினைக்குத் தெளிவானதும் சாத்தியமானதுமான கொள்கைத் திட்டமொன்றை முன்வைக்காமல் மக்களின் வாக்குகளைக் கேட்கும் அருகதை இல்லை. கூட்டமைப்பு கொள்கை இல்லாமலே வாக்குக் கேட்கின்றது.

அடுத்ததாக, அறுபது வருட காலமாக எதையும் சாதிக்காதவர்கள் எப்படி வாக்கும் கேட்பது? கூட்டமைப்பும் அதன் முன்னோடிக் கட்சிகளும் இனப்பிரச்சினை தொடர்பாக இதுவரை சாதித்தது என்ன என்ற கேள்விக்கு எதுவும் இல்லை என்பதே பதில்.

இக் கட்சிகளின் தலைவர்கள் இனப் பிரச்சினையைத் தவிர வேறெதையும் பேசவில்லை. இப் பிரச்சினையை அரசியலில் வாழ்ந்தார்கள். இவர்களின் தவறான முடிவுகள் காரணமாக இனப் பிரச்சினை காலத்துக்குக் காலம் புதிய பரிமாணம் பெற்று வளர்ந்தது. இறுதியில் தமிழ் மக்களின் அழிவுக்கும் இவர்கள் புலிகளுடன் சேர்ந்து வழிவகுத்தார்கள்.

தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் இத் தலைவர்கள் மோசமாகத் தோல்வியடைந்து விட்டார்கள். இத் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு இவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்குவதன் மூலம், நடைமுறைச் சாத்தியமான வழியில் தீர்வை நோக்கிச் செல்வதற்கேற்ற புதிய தலைமைக்கு வழிவிட வேண்டும்.

கூட்டமைப்புத் தலைவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது பற்றிச் சில வாரங்களுக்கு முன் பேசினார்கள். ரவூப் ஹக்கீமும் சம்பந்தனும் கூட்டாக ஊடகவியலாளர் மகாநாடும் நடத்தினார்கள். இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இணைந்து செயற்படப் போவதாக அப்போது இருவரும் கூறினார்கள். இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இரண்டு கட்சிகளிடமும் கொள்கை இல்லாத போது எப்படி இணைந்து தீர்வு காண்பார்கள் என்று இப்பத்தி கேள்வி எழுப்பியது.

கூட்டாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் கதை அவ்வளவுதான். முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் போய்விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாக நிற்கின்றது.

மர்ஹும் அஷ்ரஃப்பின் மரணத்துக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸில் ஆரம்பித்த சீரழிவு தொடர்கின்றது என்று முஸ்லிம் காங்கிரஸ் அனுதாபி ஒருவர் கூறுகின்றார். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அது உண்மை என்பது புரியும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எப்போது முஸ்லிம் காங்கிரஸ் உறவு வைக்கத் தொடங்கியதோ அன்றே சீரழிவு தொடங்கிவிட்டது எனலாம். மரம் சின்னம் இப்போது மெல்லமெல்ல மறைந்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் போட்டியிடுவதற்கு இடம்தேடி அலையும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. எங்கே போட்டியிட்டாலும் வெல்ல முடியும் என்று ஒரு காலத்தில் மார்தட்டியவர் இப்போது எங்கே போட்டியிட்டால் வெல்லலாம் என்று தேடும் நிலை வந்திருக்கின்றது.

திருகோணமலை, வன்னி, மட்டக்களப்பு என்று ஆராய்ந்து பார்த்துவிட்டுக் கொழும்பில் போட்டியிட முன்வந்தார். ரஜாப்தீன் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. மீண்டும் சொந்த இடமான கண்டியில் போட்டி. அங்கேயும் எதிர்ப்பு. காதர் ஹாஜியார் எதிர்க்கிறார். ஒறிஜினல் ஐக்கிய தேசியக் கட்சிக்காரருக்கே ஆதரவு என்று காதர் ஹாஜியார் பத்திரிகைகளுக்குக் கூறியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சிச் சின்னத்தில் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ்காரருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பதாகும்.

நன்றி தினகரன்


1 comments :

Anonymous ,  February 28, 2010 at 8:25 PM  

It's really big foolishness to have a trust on TNA,because they have dramatized the tamil people for long long years,still they do the same.They are the real political acrobats,their main idea or motivation to enjoy the whole life as parliamentarians,enjoying all the concessions etc and NOT for the sake of the tamil people.Valuable votes of the tamils should not be thrown before........?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com