தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு ‘ரிக்கற்’ வழங்காததால் ஒதுங்கியுள்ளனர்.
தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கு ‘ரிக்கற்’ வழங்குவது யாருக்கு வழங்குவதில்லை எனத் தீர்மானிப்பதற்குக் கூட்டமைப்பின் தலைமைக்கு உள்ள உரிமையைக் கேள்விக்கு உட்படுத்தும் நோக்கம் எமக்குச் சிறிதளவேனும் இல்லை.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘ரிக்கற்’ வழங்காததற்குக் கூட்டமைப்புத் தலைமை கூறிய காரணம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவான விடயமாக இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியம் பற்றிப் போது மான அளவு பேசாததாலேயே ‘ரிக்கற்’ மறுக்கப்பட்டதெனக் கூட்டமைப்புத் தலைமை கூறியதெனச் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள்.
தமிழ்த் தேசியம் என்பது கூட்டமைப்பினரது ஏகபோக உரித்தான பதமல்ல. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் எழுந்த கருத்துருவமே தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஐம்பதுகளிலேயே உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது. அதன் பின் வேறு பல அரசியல் கட்சிகளும் குழுக்களும் தேசிய இனக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டடன.
ஒரு இனத்தைத் தேசிய இனமாக அங்கீகரித்துச் செய ற்படும் அரசியல் தலைமை அந்தத் தேசிய இன அந்தஸ்தை உறுதிப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே யொழிய, வாக்குகளுக்காகத் தேசிய இனக் கோட் பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் முன்னோடிக் கட்சிகளும் வாக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்பட்டதால் இன்று தமிழினம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. தேசியம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலும் தூரநோக்கற்றும் கூட்டமைப்பு செயற்பட்டதன் விளைவாகத் தமிழ் மக்கள் இன்று தங்கள் வரலாற்று ரீதியான வாழ்புலங்களிலிருந்து இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் தேசிய இன அந்தஸ்தை உறுதிப்படுத்துவதற்கான வளர்ச்சிப்போக்கல்ல.
கூட்டமைப்புத் தலைவர்கள் புலிகளின் செயலாணைக்கு உட்பட்டுச் செயற்படத் தொடங்கிய பின்னரே தேசியம் என்ற பதத்தை அடிக்கடி பயன்படுத்தினார்கள். புலிகளின் அகராதியில் தேசியம் என்பது தனிநாடு. கூட்டமைப்பினரும் அந்த அர்த்தத்திலேயே இப்பதத்தைப் பயன்படுத்தினார்கள். இப்போது மீண்டும் அவர்கள் தேசியம் பற்றிப் பேசுவதைப் பார்க்கும் போது தனி நாட்டு மாயையிலிருந்து விடுபடவில்லை என்றே தோன்றுகின்றது.
தனிநாட்டுக் கொள்கை காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும் அழிவுகளும் இனி மேல் தொடரக் கூடாது. இந்த அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் காரணமான தலைவர்களை மக்கள் இனங்காண வேண் டும். பிரச்சினைகளின் தீர்வுக்காக ஆக்கபூர்வ மாகச் செய ற்படுபவர்களையே தலைவர்களாக ஏற்க வேண்டும்.
0 comments :
Post a Comment