வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி?
வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்குவார் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையாளரை கோரியது அதற்கு ஆணையாளர் சாதகமான பதில் வழங்குவார் என நம்புவதாகவும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
இதன்போது கடந்த ஜனாதிபதித் தேரதல் குறித்தும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது பற்றியும், வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்தே வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு தமது அமைப்பு ஆணையாளரை கோரியதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தமது கோரிக்கைக்கு ஆணையாளர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆணையாளருடனான பேச்சின் படி வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அமைதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் அமைப்புக்கும், சி. எம். ஈ. வி நிறுவனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட அதிகமான வட பகுதி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வகையில் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படாமையால் பலருக்கு வாக்களிக்க முடியாமல் போனதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.
பாராளுமன்றத் தேர்தலில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்துள்ளார். வடக்கிலுள்ள வாக்காளர்களை மீள்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணையாளர் இணங்கியுள்ளார்.
அரச உடமைகளை பாவிப்பது, ஊடகங்களின் செயற்பாட்டை கவனிப்பது பொலிஸ் விடயங்கள் என்பன தொடர்பில் முறையிட தனித்தனிக் குழுக்கள் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment