ஹமாஸ் தலைவர் கொலை : மொசாத் தலைவரைக் கைது செய்யக்கோரும் துபாய்.
ஹமாஸ் இயக்க தலைவர் மஹமூத் அல் மபூவாவைக் கொலை செய்தது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பினர்தான் என்பது நிரூபணமானால் மொசாத்தின் தலைவர் மெயர் டேகனைக் கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துபாய் போலீஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி 20ம் தேதி துபாய்க்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஹமாஸ் இயக்கத் தலைவர் மபூவா அவரது ஹோட்டல் அறையில் கொல்லப்பட்டார்.
ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.
அவரை எந்தவித ஆயுதமம் இல்லாமல், தரையில் தள்ளி மூச்சுத் திணறடித்துக் கொன்றனர். இந்தக் கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மொத்தம் 11 இஸ்ரேலியர்கள் இந்தக் கொலைச் சதியில் இடம் பெற்றிருந்ததாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் பெண் ஆவார். இந்தக் கும்பல், 11 ஐரோப்பியர்களின் பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தி துபாய்க்கு வந்துள்ளது. அவர்களில் 6 பேர் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டுகளில் முறைகேடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மபூவா கொலை வழக்கில் மொசாத்துக்குத் தொடர்பு இருந்தால், மொசாத் தலைவருக்கு எதிராக இன்டர்போர் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துபாய் காவல்துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டாஹி கல்பான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மபூவா கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பது உறுதியானால், மெயர் டேகனுக்கு எதிராக இன்டர்போல் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்து துபாயிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தக் கொலையில் இஸ்ரேலுக்குத் தொடர்பு இருப்பதாக 99 சதவீதம் நான் நம்புகிறேன்.
மொசாத் இந்த குற்றத்தின் பின்னணியில் இருந்தால் நிச்சயம் அது தண்டிக்கப்பட வேண்டும். அதன் தலைவர் கொலையாளியாக கருதப்பட வேண்டும் என்றார்.
இதற்கிடையே மபூவா படுகொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 11 இஸ்ரேலியர்களின் புகைப்படங்ளையும் துபாய் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களைக் கைது செய்ய ரெட் அலர்ட் உத்தரவை இன்டர்போல் பிறப்பித்துள்ளது. இந்த 11 பேருமே தற்போது இஸ்ரேலில் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இந்த கூற்றுகளையெல்லாம் இஸ்ரேல் நிராகரித்துள்ளது. சம்பந்தமே இல்லாத நபர்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது. மேலும், துபாய் காவல்துறை தலைவர் மொசாத் குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமே இல்லை. அடிப்படையற்ற புகார் கள் இவை என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மபூவா முதலில்எந்தச் சூழ்நிலையில் இறந்தார் என்பதையே துபாய் காவல்துறை விளக்கவில்லை. வெறும் கண்காணிப்பு காமராவில் பதிவான சில வீடியோ படங்களை மட்டுமே அது காட்டி வருகிறது. அதில் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர், சிலர் நடந்து கொண்டுள்ளனர். இதை ஆதாரமாக கருத முடியாது என்றார்.
இதற்கிடையே பாஸ்போர்ட்டில் மோசடி செய்தது தொடர்பாக இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உரசல்கள் தொடங்கியுள்ளன.
சந்தேகப்படும் 11 பேரில் 6 பேர் இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆறு பேரும், பிரிட்டிஷ் இஸ்ரேலியர்கள் ஆறு பேரின் பாஸ்போர்ட்டுகளைத்தான் மோசடியாக திரித்து துபாய் போயுள்ளனர். இதுதவிர 3 அயர்லாந்து பாஸ்போர்ட்டுகள், ஒரு பிரெஞ்சு மற்றும் ஒரு ஜெர்மனி பாஸ்போர்ட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கான விமான டிக்கெட்டை வாங்குவதற்கு அமெரிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்தும் துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடி செய்தது உண்மையாக இருக்குமானால் இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கும் என்று இங்கிலாந்து தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இஸ்ரேலோ இந்த விவகாரம் குறித்து சற்றும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
0 comments :
Post a Comment