Monday, February 22, 2010

நான் யாரையும் அடித்ததில்லை : பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், அவரது அலுவலக ஊழியர்களைக் கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்படும் வேளையில் அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். “என் வாழ்நாளில் நான் யாரையும் அடித்ததில்லை,” என்றும் திரு பிரவுன் கூறினார்.

பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது :

சில சமயங்களில் தனக்கு கோபம் வரும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் தான் என்றுமே வன்மையாக நடந்து கொண்டதில்லை என்று அவர் சொன்னார். “எனக்கு கோபம் வரும்போது அதை என்னிடமே காட்டிக்கொள்வேன். பத்திரிகைகளைத் தரையில் வீசுவது போன்ற செயல்களில் எனது கோபத்தை வெளிப்படுத்துவேன். மற்றபடி யாரிடமும் வன்மையாக நடந்து கொண்டதில்லை,” என்றார் அவர்.

பிரதமரைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தீய எண்ணத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவை என்றும் பிரதமரின் பேச்சாளர் கூறினார்.

பிரதமர் பிரவுன் அவரது அலுவலக ஊழியர்களைக் கொடுமைப்படுத்துவதாக அமைச்சரவைச் செயலாளர் சர் குஸ் டோனலுக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து அவர் தனிப்பட்ட முறையில் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக பத்திரிகைத் தகவல் கூறியது ‘ஆப்சர்வர்’ பத்திரிகையின் ஆண்ட்ரு ரவுன்ஸ்லி எழுதிய புத்தகத்தில் திரு பிரவுனைப் பற்றிய புகார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திரு பிரவுனின் நடத்தையும் அவரது கடும் கோபமும் அவரது ஊழியர்களை அச்சம் அடையச் செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அரசாங்கச் சேவைத் தலைவர் டோனல், திரு கார்டன் பிரவுனை கடுமையாக எச்சரித்திருப்பதாகவும் அப்பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

திரு பிரவுன் அவரது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று டோனல் எச்சரித்திருப்பதாகவும் கூறப்பட்டது. திரு பிரவுனின் கோபத்தால் யார், யார் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரங்களையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பிரவுன் மீது இத்தகைய புகார்கள் கூறப்பட்டுள்ளன.

மேலும் ஒரு தவணைக் காலத்திற்கு திரு பிரவுன் போட்டியிடுவார் என்று தொழிற்கட்சி அறிவிக்கவிருந்த நேரத்தில் அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகளால் திரு பிரவுன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகளும் திரு பிரவுனை எதிர்ப்பவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளக்கூடும் என்று தெரிகிறது. மேலும் 5 ஆண்டு காலத்திற்குப் பதவியில் நீடிக்க பிரவுன் தகுதியற்றவர் என்று அவர்கள் குரல் எழுப்பக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment