Friday, February 12, 2010

தேர்தலில் போட்டியிட்டதற்காக பொன்சேகாவுக்கு சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை.


வாதங்களை முன்வைக்கவும், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுண்டு. நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ அரசியல் காரணங்களுக்காகவோ சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமனாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவருக்கு விசேட சலுகை எதனையும் வழங்க சட்டத்தில் இடமில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சட்டம் 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஒழுக்கவிழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ தலையீடோ கிடையாது. இந்த வழக்கில் தமது தரப்பு சாட்சியங்களையும் ஆவணங்களையும் முன்வைக்கவும் அரச தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் பொன்சேகா தரப்புக்கு அவகாசம் உள்ளது.

இங்கு மனித உரிமை மீறல் தொடர்பாக எதுவித பிரச்சினையும் எழாது. பொன்சேகா தரப்பிற்கு தமது தரப்பு வாதங்களை முன்வைக்க முழுமையான அனுமதியும் வழங்கப்படும். தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. பொன்சேகாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இராணுவத்தில் இருந்தபோது செய்த தவறுகள் தொடர்பிலேயே இராணுவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவை கைது செய்ததால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ குழப்பம் ஏற்படும் என்பதாலோ சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க முடியாது.

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் எதிராக மாத்திரமே வழக்குத் தொடர்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இடம்பெறாது. இராணுவம் சுயாதீனமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்கிறது.

பொன்சேகா விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தவறான கருத்தை உருவாக்கவும் இலங்கையை மோசமான நாடாக காட்டவும் முயற்சி செய்யப்படுகிறது. இலங்கையுடனான கொடுக்கல் வாங்கலை யும் ஜி.எஸ்.பி. சலுகையையும் நிறுத்தவும் முதலீடுகளை தடுக்கவும் பொருளாதார ரீதியில் இலங்கையை மட்டந்தட்டவும் சதி செய்யப்படுகிறது. இந்த நோக்கங்களை அடைய ஒருபோதும் இடமளியோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் மட்டுமன்றி எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டை சுமத்த சில நாடுகள் முயற்சி செய்கின்றன. இதற்கு சாட்சி வழங்க பொன் சேகா தயாராகிறார். ஆனால் இராணுவ ரகசியங்களை ஓய்வுபெற்ற பின்னரும் வெளியிட முடியாது என்றார்.

நன்றி தினகரன்

1 comments :

Anonymous ,  February 12, 2010 at 3:52 PM  

GL may talk anything time to time to keep his pocket filled. unless he won't get seat or national list. Don't trust this professor at all.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com