Thursday, February 11, 2010

தாய்லாந்தில் அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்.

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா மீதான சொத்து வழக்கின் தீர்ப்பு வரும் பிப்ரவரி 26-ம் தேதி வெளிவரவுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு தக்சினுக்கு பாதகமாக இருந்தால் அவரின் ஆதரவாளர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து அரசாங்கம் நாடு முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது.

தக்சினின் 2.2 பில்லியன் யுஎஸ் டாலர் சொத்தினை நீதிமன்றம் பறிமுதல் செய்தால் நாட்டில் பெரிய அளவில் கலவரங்கள் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற போதிலும் வன்முறைச் சம்பவங்கள் நடக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நீதிமன்றத் தீர்ப்புக்காக முன்னதாகவே தக்சின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு பாதுகாப்பை இன்னும் தீவிரப்படுத்தவிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் பனிதன் வாட்டன்யாகோன் கூறினார்.

தக்சின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் 13,300-க்கும் அதிகமான ராணுவ வீரர்களும் பேங்காக்கிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் குறைந்த 6,500 வீரர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். முக்கிய தெருக்களில் கூடுதல் போலிசாரும் ராணுவ வீரர்களுமாக 35,000 பேர் பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த தேவை ஏற்பட்டால் கூடுதலாக பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்று அரசாங்கப் பேச்சாளர் கூறினார். தாய்லாந்தில் 2006-ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சி மூலம் தக்சின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவரது சொத்துகளை நீதிமன்றம் முடக்கி வைத்தது.

இதற்கிடையில் தாய்லாந்து-கம்போடிய எல்லையில் அதிகரித்திருந்த பதற்றம் தற்போது சற்று தணிந்துள்ளது. கம்போடியப் பிரதமர் ஹூன் சென் தாய்லாந்திலுள்ள டா முவன் தோம் கோயிலுக்குச் செல்லாமல் கம்போடியாவுக்குத் திரும்பியதையடுத்து பதற்றம் தணிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment