மனிதனுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் அருகிச் செல்கின்றனவா?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் நடையும் நடைப்பழக்கம் நட்புந் தயையும் கொடையும் பிறவிக்குணம் - தமிழ் மூதாட்டி அவ்வையின் வரிகள் இவை!
கருணை, கொடை, தயை ஆகியவை பிறவிக்குணம் என்கிறார் அவ்வை. பிறவிக் குணமோ அல்லது பின்னால் வந்த குணமோ எதுவாக இருந்தாலும் மனிதனிடம் மற்றவர்களுக்கு உதவும் பண்பு இருக்க வேண்டும்.
பணம் ஒருபோதும் பாகுபாடு காட்டுவதில்லை. அது பண்புள்ளவர் கையிலும் இருக்கிறது. பண்பில்லாதவர்கள் கையிலும் அடைபட்டுக் கிடக்கிறது. பண்புள்ளவர்கள் தனது பணத்தை ஒரு நல்ல நண்பன் போல் கையாண்டு அடுத்தவர்களுக்கும் அறிமுகம் செய்துவைக்கிறார்கள்.
அவதாது அடுத்தவர்களுக்கும் பணத்தைக் கொடுத்து உதவுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ ஒரு உதவியை செய்து விட்டு பதிலுக்கு வாழவைக்கும் தெய்வம், வள்ளல், வாழும் கர்ணன் என்றெல்லாம் மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் நிரந்தரமாக தனக்கு ஜால்ரா அடிக்க குழு ஒன்றை உருவாக்கிக் கொண்டு போலியாகவும், செயற்கையாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
உடல் ஊனமுற்றவர்கள் கலைகளில் மற்றவர்களுக்கு சவால் விடும் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். திரைப்படம் ஒன்றில் கண்பார்வையற்றவர்களின் இசைக்குழு ஒன்று தன்னம்பிக்கையூட்டியது. அதன் மூலம் அவர்கள் மிகுந்த திறமைசாலி என்பது நிரூபிக்கப்பட்டது.
அப்போதே அவர்களையும், அவர்களைப் போன்ற திறமை சாலிகளையும் ஆதரிக்க வேண்டும் என்ற பண்பு நம்மிடம் உருவாகியிருக்க வேண்டும்.
வீட்டு விழா, கோவில் விழா என்று பலவற்றுக்கும் அழைத்து அவர்களை கை தூக்கிவிட்டிருக்க வேண்டும். அந்த பண்பை நாம் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதால், பார்வையற்ற இசைத் திறமைசாலிகள் சிலர் சாலை ஓரங்களிலும், சிக்னல்களிலும் பாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நம் மனதில் இருந்து இன்னும் மாயாத சோகம், கும்பகோணம் பள்ளி தீ விபத்து! கால் முளைத்த ரோஜாக்களாக புத்தக பையோடு பள்ளிக்கு சென்றவர்கள், கரிக்கட்டைகளாக கரிந்து போய், உலகையே கண்ணீர்விட வைத்த சோகம் அது. அந்த சம்பவத்தை தொடர்ந்து
எங்கு பார்த்தாலும் இரங்கல் நிகழ்ச்சிகள் நடத்தினர். குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு பண உதவிகள் செய்வதாகவும் அறிவித்தனர். ஆனால் பலவும் அறிவிப்போடு அழுங்கிவிட்டது. சொன்னதைச் செய்யவில்லை.
அதன் பின்பு நாம் என்ன செய்திருக்க வேண்டும்? அவரவர் பகுதிகளில் இருக்கும் அடிப்படை வசதியற்ற அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாமல் பணத்திற்காக மட்டுமே இயங்கும் பள்ளிகளை கண்டுபிடித்து மூடு விழா பண்ணியிருக்க வேண்டும்.
இதை எல்லாம் செய்யாமல் வெறுமனே கூட்டம் போட்டு உணர்ச்சி வசப்படுவதும், போஸ்டர் ஒட்டுவதும் எதிர்கால குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதமா என்ன? சும்மா பேச்சுக்கு உதவி செய்வதாக அறிவிப்பதும், அந்த நேரத்தில் டி.வி. காட்சிகளுக்காக கண்ணீர் வீட்டு உருகுவதும் நல்ல பண்பா?!
பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைவிட கீழ் நிலையில் இருப்பவர்களுக்கும் உதவும்போது அதன் பின்னணியில் எந்த எதிர்பார்ப்பு சிந்தனையும் இருக்கக்கூடாது. ‘நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களுக்கு மனப்பூர்வமாக வழங்குகிறோம்’ என்ற ஆத்ம திருப்தி மட்டும் இருக்க வேண்டும். அதுதான் உயர்ந்த பண்பு. அந்த உதவியை செய்தால், அதைவிட பல மடங்கு நம் செல்வாக்கு உயரும் என்று நினைப்பது சரியானதல்ல. செல்வாக்கு தேட, மன சாட்சியை விலை பேசக்கூடாது!
மனித பண்புகளை மூன்று வித மரங்களோடு ஒப்பிடலாம்.
தோட்டங்களில் செழித்து வளருவது மாதிரி மரம். இது பூக்கும். ஆனால் காய்க்காது. பூவாகி, மற்றவர்கள் பார்வையை ஈர்க்கும், ஆனால் காயாகி மனிதர்களுக்கு பலன்தராது. காரியம் எதுவும் செய்யாமல் வெறும் விளம்பரத்திற்காக அறிவிப்பு மட்டும் செய்பவர்கள் இந்த மாதிரி மரத்தைப் போன்றவர்கள்.
மாமரம் நன்றாக பூக்கும், நிறையவே காய்க்கும். பளமாக கனியவும் செய்யும். செய்வதை மட்டுமே தெளிவாகச் சொல்லி அதன்படி உதவும் உண்மை உள்ளம் கொண்டவர்கள், இந்த மாமரம் போன்றவர்கள்.
பலாமரம் பூக்காது, ஆனால் காய்க்கும். கனியும். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சத்தமில்லாமல் உதவும் பண்பு உடையவர்கள் பலாமரம் போன்றவர்கள். இவர்களை உயர்ந்த மனிதர்கள் என்கிறோம்.
சிலர் சோகம் எங்கே நிகழும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். சோக சம்பவம் நடந்தது உடனே ஓடிச் சென்று மற்றவர்கள் முன்னிலையில் தங்களை கருணையே வடிவானவர்கள், இரக்கமே உருவானவர்கள், சமூகத்தின் துயரத்தை போக்கவே மனித உருவெடுத்தவர்கள் என்று காட்டிக் கொள்வார்கள். அதன் மூலம் தேவையான பப்ளிசிட்டி கிடைத்ததும், அடுத்த சோகம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள்.
சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது, நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் ஒரு ஆக்கபூர்வமான யோசனையைச் சொன்னார். ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒவ்வொருவரும் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளைத் செய்தால் அதுவே பெரும்பயன் அளிக்கும்’ என்றார்.
அப்படி யாரும் செய்யவில்லை. ஆனால் சுனாமியின் பெயரால் வாரிச்சுருட்டிக் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் ஏழைகளின் கண்ணீரிலும் குளித்துவிட்டார்கள். சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கோடி கோடியாக நன்கொடை பெற்று அதை தங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டார்கள். அவர்கள் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலரை தூரத்தில் இருந்து பார்க்கும் போது நற்பண்புகளின் சிகரம் போல் தென்படுவார்கள். அவர்கள் தன்னிடம் இல்லாததை இருப்பதுபோல் காட்டி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அருகில் சென்று பார்த்தால் தான் அது பிறருக்காக உருவாக்கப்பட்ட செயற்கை பண்பு என்று தெரியவரும். அவர்களை வைத்துதான் “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் கூட்டம்” என்று கவியரசு கண்ணதாசன் பாடல் எழுதியிருக்கிறார்.
சிலைகள் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பொன்னாடைகளை போர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். மாலைகளையும், கேடயங்களையும் மலிவாக வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் என்ன பயன்? சிலைகளுக்கு பதில் மரங்கள் வைத்தால் உலகமே பயனடையும்.
மாலைகளும், கேடயங்களும் குப்பைகளாக வசதிபடைத்தவர்கள் வீடுகளில் குவிந்து கிடப்பது ஏழைகளின் வயிற்றுப் பசியை தீர்க்குமா? அல்லது அறிவுப் பசிக்கு களம் அமைத்துக் கொடுக்குமா? என்ன பலன் என்று தெரியாமலே ஏனோதானோவாக இன்றும் எத்தனை காலம் வாழ்வோம்? எப்போது நம்மிடம் உள்ள நல்லபண்புகளை நிலை நிறுத்துவோமோ, அந்நாளே நமக்கு பொன்நாள்.
0 comments :
Post a Comment