Monday, February 1, 2010

கத்தியைத் தேடும் கடின முயற்சியில் போலீஸ்…

கடந்த புதன்கிழமையன்று கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொல்ஸ்ரபோ நகரத்தில் உள்ள யொப் சென்டரில் பணியாற்றிய பியற்றா கிறிஸ்டியான்சனின் கொலையில் முக்கிய தடயமாகக் காணப்படும் கத்தியைத் தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 28 வயதுடைய சோமாலியர் குற்றத்தை மறுத்துள்ளார். பனிக்குவியல்கள் நிறைந்து, அதை ஒழுங்குபட வழிக்காமல் இருக்கும் இக்காரியாலயப்பகுதியில் கத்தியை தேடுவது மிகவும் சிரமமாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உலோகங்களை கண்டறியும் இயந்திர உபகரணம் மூலம் தேடுதல் நடைபெறுகிறது. அத்தோடு இப்பகுதியை சுற்றியுள்ள பற்றைகளில் தேடுதல் நடைபெறுகிறது. நேற்று நோரலான்ட் பாடசாலையை அண்மித்த பற்றைப் பகுதியில் உடையொன்று கண்டெடுக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க கொல்ஸ்ரபோவில் கத்தியால் குத்தப்பட்ட ஒருவர் அங்குள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் கேர்னிங் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டது ஏன் என்றும் சிலர் விசாரித்துள்ளனர். கேர்னிங் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவு சுமார் ஒன்றரை மணி நேரம் இவருடைய உயிரைக் காப்பாற்ற போராடியமை குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளித்த கொல்ஸ்ரபோ வைத்தியசாலை அதிகாரி மிகச்சிக்கலான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளும் வசதி தமது வைத்தியசாலையில் இல்லை என்றார்.

No comments:

Post a Comment