Thursday, February 4, 2010

62ஆவது சுதந்திர தின பிரதான வைபவம்: கண்டியில் இன்று கோலாகலம்.

பொலிஸ், முப்படைகளின் அணிவகுப்பு.
கலை, கலாசார நிகழ்ச்சிகள்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஆரம்பம்.

இலங்கையின் 62 வது சுதந்திர தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை கண்டி, தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதான வைபவம் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு கண்டி நகரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸாரும் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் அசோக்க டி. சில்வா, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படை சார்பில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப் படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். சம்பிரதாய முறைப்படி இம் முறையும் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் மரியாதை அணி வகுப்புக்கள் இடம் பெறவுள்ளன.

இன்றைய சுதந்திர தின பிரதான வைபவத்தின் மரியாதை அணி வகுப்பில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2514 பேர் பங்கு கொள்ளவுள்ளனர்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 1450 வீரர்களும், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 250 வீரர்களும், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 314 வீரர்களும், பொலிஸார் 250 வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 250 வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 21 கலாசார மத்திய நிலையங்களைச் சேர்ந்த 1000 நடன மற்றும் நாட்டிய கலைஞர்களும், ஆயிரம் மாணவ, மாணவியரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரினதும் வருகையைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பிரதான நிகழ்வு ஆரம்பமாகும்.

முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரினால் பிரதான மேடைக்கு அழைத்து வரப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 8.50 மணிக்கு மங்கள வாத்தியங்களுக்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதான நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.

8.52 மணிக்கு 12 பாடசாலைகளைச் சேர்ந்த நூறு மாணவியர் தேசிய கீதம் பாடுவார்கள். கண்டி மஹமாய தேவிபாலிகா வித்தியாலயம், பதியுதீன் மஹ்மூத் பெண்கள் வித்தியாலயம், புனித அந்தோனி பெண்கள் வித்தியாலயம், தர்மராஜ வித்தியாலயம், புனித சில்வெஸ்டர் மகா வித்தியாலயம், உயர் மகளிர் கல்லூரி, பேராதனை இந்து மகா வித்தியாலயம், தங்காலை பெண்கள் வித்தியாலயம், யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளிர் கல்லூரி, மஹியங்கனை தேசிய பாடசாலை, ஸ்ரீஜயவர்தன புறக்கோட்டை ஆனந்த மகளிர் வித்தியாலயம் மற்றும் கொழும்பு-7 பிரிஜட் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த நூறு மாணவியரே இதில் பங்குகொள்ளவுள்ளனர்.

8.59 மணிக்கு 07 பாடசாலைகளைச் சேர்ந்த 21 மாணவியரால் ஜயமங்கள கீதம் பாடப்படும். அதனைத் தொடர்ந்து 9.07 மணிக்கு தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. காலை 9.09 மணிக்கு ஜனாதிபதிக்கான மரியாதை வழங்கப்படவுள்ளதுடன் 9.11 மணிக்கு மரியாதை நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன.

காலை 9. 15 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்காக சுதந்திர தின உரை நிகழ்த்தவுள்ளார். 9.45 மணி தொடக்கம் மரியாதை அணிவகுப்பு ஆரம்பமாகவுள்ளது.

இராணுவம்
பிரிகேடியர் உபய மெலவக்க தலைமையில் இராணுவ மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. 1450 வீரர்கள் இதில் பங்குகொள்ளவுள்ளனர். சகல படைப் பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இதில் பங்கு கொள்ளவுள்ளனர். கனரக வாகன பவணி இம்முறை தவிர்க் கப்பட்டுள்ளது.

கடற்படை
கொமாண்டர் அக்ரம் அலவியின் தலைமையில் கடற்படையின் மரியாதை அணி வகுப்பு இடம்பெறவுள்ளது. 314 வீரர்கள் இதில் பங்கு கொள்ளவுள்ளனர். 18 அதிகாரிகளும், 296 வீரர்களும் இதில் அடங்குவர். கொமடோர் சில்வர் வாகன அணிக்கு தலைமை வகிக்க உள்ளார்.

கடற்படையின் அதிவேக படகு பிரிவு, விஷேட படகு பிரிவு, சுழியோடி பிரிவு, பொறியியல் விநியோக பிரிவுகளைச் சேர்ந்த படை வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

விமானப்படை
எயார் கொமடோர் சுமங்கள டயஸ் தலைமையில் விமானப் படையின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. 25 அதிகாரிகள் 50 பெண் படை வீரர்கள் இவற்றில் அடங்குவர். விமானப் படைக்கு கிடைக்கப் பெற்ற ஜனாதிபதி வர்ண கொடிகளும் அணிவகுத்து செல்லவுள்ளது. விமானப் படையின் விஷேட படைப் பிரிவுகளும் பங்கு கொள்ளவுள்ளனர்.

பொலிஸ்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யு. கே. திஸாநாயக்க தலைமையில் பொலிஸ் மரியாதை அணிவகுப்பு . நான்கு ஆண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஒரு பெண் அதிகாரி உட்பட 6 அதிகாரிகளும் 244 பொலிஸாரும் கலந்துகொள்ள வுள்ளனர். பொலிஸாரின் இரண்டு வாத்தியக் குழுக்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஒரு குழுவில் 60 பொலிஸார் வீதம் பங்குகொள்ளவுள்ளனர்.

எமது நாட்டில் மூன்று தசாப்தகாலமாக நிலவிய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது சுதந்திர தினம் இதுவாகும். இம்முறை சுதந்திர தின வைபவத்தில் பெருந்தொகையான பொது மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி
கண்டி பள்ளேகலயில் நடைபெறும் ‘தெயட கிருள’ (தேசத்தின் மகுடம்) தேசியக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 4.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இன்று ஆரம்பமாகும் ‘தெயட கிருள’ கண்காட்சி தொடர்ந்து எதிர்வரும் 10ம் திகதி வரை நடைபெறும். காலை 9.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை மக்கள் இதனைக் கண்டுகளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியையொட்டி கண்டி பள்ளேகல, குண்டசாலை உட்பட அதனை அண்டிய பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் பொலிஸாரும் இராணுவத் தினரும் இணைந்து பாதுகாப்புக் கடமை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டி பள்ளேகலயில் ஸ்ரீதலதா மாளிகைக்குச் சொந்தமான சர்வதேச பெளத்த ஆய்வு நிலையம், மத்திய மாகாண சபைக்கான புதிய கட்டிடப் பிரதேசம் பள்ளேகலயில் நிலமாணிக்கப்பட்டு வரும் பொது சிறைச்சாலைக் காணி உட்பட 60 ஏக்கர் விஸ்தீரண நிலப்பரப்பில் மேற்படி கண்காட்சி நடைபெறுகிறது.

இக் கண்காட்சியையொட்டியதாக குண்டசாலை உள்ளிட்ட பிரதேசங்கள் பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 130 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை நாட்டு மக்கள் கண்டுகளிப்பதற்கு வசதியாக விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து விசேட ரயில் சேவை யொன்றும் மாத்தளை, கம்பளை, நாவ லப்பிட்டி பகுதிகளிலிருந்து பிரதேச ரயில் சேவைகளும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் சகல முக்கிய நகரங்களிலுமிருந்து விசேட பஸ் சேவைகள் நடைபெறுமென இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் லிவினிஸ் ஆரச்சி தெரிவித்தார். இந்த போக்குவரத்து ஏற் பாடுகள் இன்று முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை இடம்பெறுமென போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment