Wednesday, February 3, 2010

ஜனாதிபதி படுகொலை சதி முயற்சி: விசேட பொலிஸ் குழுவால் 37 பேர் கைது

பொன்சேகா அலுவலகத்திலிருந்து சதித்திட்ட ஆவணங்களும் மீட்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீதான படுகொலை சதி முயற்சி குறித்து விசாரணைகளை நடத்தி வரும் விஷேட பொலிஸ் பிரிவினர் இதுவரை 37 முக்கிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கொழும்பிலுள்ள சரத் பொன்சேகா அலுவலகத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதன் மூலம் சதித்திட்டம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பொலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் ஆகியோரின் பங்களிப்புக்களுடன் பல்வேறு கோணங்களில் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட பொலிஸ் குழுவுக்கு தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமை தாங்கி வருகின்றார்.

இராணுவ மேஜர் ஜெனரல், பிரிகேடியர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற பலர் கைது செய்யப்பட்ட 37 பேரில் அடங்குவர். இந்த விசாரணைகள் முடிவுறும் வரை அனைவரும் அவசரகால சட்ட விதிகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தை சோதனைக்குட்படுத்திய போது மாத்திரம் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைக்காக பொன்சேகாவின் அலுவலகத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார், அலுவலகம் மூடியிருந்ததை அடுத்து கதவைத் தட்டிய போது உள்ளே இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அலுவலகத்தின் உள்ளே மறைத்திருந்த 23 பேரை கைது செய்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள், பெயர் விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் நால்வரைத் தவிர ஏனைய 19 பேரும் முன்னாள் இராணுவத்தினராவார்கள்.

இதேவேளை தேர்தல் காலத்தின் போது கொழும்பிலுள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருப்பவர்களின் பாவனைக்காக 500 கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுக் கொடுத்த முன்னாள் ஜெனரல் ஒருவர் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொன்சேகாவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரே கொழும்பிலுள்ள ஹோட்டலில் அறைகளை பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்காக ஹோட்டல் முகாமைத்துவத்திற்கு பொய்யான பெயரும், விலாசமும் கொடுக்கப்பட்டுள்ளமையும் இதற்கான முழுக்கொடுப்பனவுகளும் பணமாக செலுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பிலுள்ள இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் 70 ற்கும் அதிகமான அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் பல அறைகள் பாவிக்காமல் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் பாவித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்களில் பல போலியான இலக்கத்தகடுகளை கொண்டவை. சில வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹோட்டலின் மூன்றாவது மாடியை முழுமையாக ஒதுக்கியிருந்த பொன்சேகாவின் குழுவினர் அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்பு கமராக்களை செயலிழக்கச் செய்துள்ளதுடன் அறை உதவியாளர்கள் வருவதையும் தடை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை மாளிகாவத்தை பிரதேசத்தில் பெளத்த விகாரையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன கொழும்பிலுள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதத்தை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றை விநியோகிக்க எட்டு இலட்சம் ரூபா ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முற்பணமாக கொடுக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நன்றி தினகரன்

No comments:

Post a Comment