Wednesday, February 3, 2010

சிறுமி வைஷ்ணவியை கொல்ல 3 மாதமாக திட்டம் வகுத்தோம்:

கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
ஆந்திர மாநலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பிரபாகர்ராவ். கோடீஸ்வரரான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி வெங்கடராமம்மா. இவருக்கு துர்காபிரசாத் (16) என்ற மகன் இருக்கிறான். 2-வது மனைவி நர்மதாதேவி. இவருக்கு சாய்தேஜா (12) என்ற மகனும், நாகவைஷ்ணவி (9) என்ற மகளும் உண்டு.

வைஷ்ணவி பிறந்த பிறகுதான் பிரபாகர் ராவுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அவர் தனது 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். முதல் மனைவியையும், மகனையும் தனியாக வைத்து பராமரித்து வந்தார்.

கடந்த 30-ந்தேதி வைஷ்ணவி, சாய்தேஜா இருவரும் காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் காரை வழிமறித்து நிறுத்தி டிரைவரை கத்தியால் குத்தி கொன்றனர். இதைப்பார்த்து சாய்தேஜா காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டான்.

பின்னர் 2 பேரும் வைஷ்ணவியை காரில் கடத்தி சென்றனர். வழியில் அவளது கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பிணத்தை பாய்லரில் போட்டு எரித்து விட்டனர். இதை அறிந்த வைஷ்ணவியின் தந்தை பிரபாகர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தார்.

வைஷ்ணவியை கொலை செய்ததாக பிரபாகரின் முதல் மனைவியின் தம்பி வெங்கட்ராவ், கூலிப்படை தலைவன் சீனிவாசராவ், ஜெகதீஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பிரபாகர்ராவுக்கு அரசு அனுமதி பெற்ற சாராய ஆலை உள்ளது. மிகப்பெரிய கோடீஸ்வரர். 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நர்மதாதேவியை 2-வது திருமணம் செய்ய விரும்பினார். அதற்கு முதல் மனைவி வெங்கடராமம்மாவிடம் அனுமதி கேட்டார். அவரும் சம்மதித்துவிட்டார்.

எனவே பிரபாகர் தன்னிடம் இருந்த ரூ.4 கோடி சொத்தில் ரூ.2 கோடியை முதல் மனைவிக்கும், அவரது மகனுக்கும் பிரித்துக் கொடுத்தார். பின்னர் நர்மதாதேவியை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தினார்.

அவர்களுக்கு முதலில் சாய்தேஜா என்ற மகன் பிறந்தான். அதன்பிறகு 3 வருடம் கழித்து நாக வைஷ்ணவி பிறந்தாள். அவள் பிறந்த பிறகுதான் பிரபாகருக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அவர் கோடி கோடியாக சம்பாதித்தார்.

தற்போது அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இதனால் மகள் வைஷ்ணவி மீது பாசத்தை பொழிந்தார். அத்துடன் முதல் மனைவியையும் அவரது மகனையும் சரியாக கண்டு கொள்வதில்லை.

இதுபற்றி முதல் மனைவி வெங்கடராமம்மா தனது தம்பி வெங்கட்ராவிடம் தெரிவித்தார். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார். 2-வது மனைவியின் மகன் சாய்தேஜாவையும், மகள் வைஷ்ணவியையும் கடத்தி கொன்றுவிட்டால் சொத்து முழுவதும் தனது சகோதரிக்கே வந்து விடும் என்று கருதினார்.

கடந்த 2004-ம் ஆண்டு வெங்கட்ராவ் கூலிப்படை மூலம் சிறுமி வைஷ்ணவியை கடத்திச் சென்றார். அப்போது பிரபாகர் கூலிப்படைக்கு பணம் கொடுத்து மீட்டு வந்தார். சிறுமி கடத்தலுக்கு வெங்கட்ராவ்தான் காரணம் என்று உறவினர்கள் பிரபாகரிடம் கூறினார்கள். அவர் மீது போலீசில் புகார் செய்தால் குடும்ப மானம் போய்விடும் என்று கருதி பிரபாகர் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிட்டார்.

அதன்பிறகு வெங்கட்ராவ் தனது ஆட்கள் மூலம் பிரபாகரின் 2-வது மனைவியை 4 முறை தாக்கினார். ஒருமுறை ஆசிட் வீசவும் முயற்சி செய்தார். அப்போதும் பிரபாகர் போலீசில் புகார் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி சிறுமி வைஷ்ணவியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது வைஷ்ணவிக்கு பிரபாகர் ரூ.1 கோடி மதிப்புள்ள வைரநகையை பரிசாக கொடுத்தார். அத்துடன் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தையும் வழங்கினார். வைஷ்ணவி தனது அதிர்ஷ்ட மகள் என்று பிறந்தநாளின்போது அனைவரது மத்தியிலும் கூறினார்.

இதைப்பார்த்து பிரபாகரனின் முதல் மனைவி வெங்கடராமம்மா கதறி அழுது தனது தம்பி வெங்கட்ராவிடம் கூறினார். எனவே அவரது ஆத்திரம் அதிகரித்தது. வைஷ்ணவி, சாய்தேஜா இருவரையும் தீர்த்துக்கட்ட அவர் திட்டம் வகுத்தார்.

இதற்காக குண்டூரை சேர்ந்த சீனிவாசராவ் என்பவரது உதவியை நாடினார். சீனிவாசராவும் ஒருவகையில் பிரபாகருக்கு உறவினர்தான். குண்டூரில் இரும்பு உருக்கு தொழிற்சாலை நடத்தி வந்தார். கூலிப்படை தலைவனாகவும் இருந்தார்.

வைஷ்ணவி, சாய்தேஜா இருவரையும் கொல்ல சீனிவாசவராவுக்கு வெங்கட் ராவ் ரூ.50 லட்சம் பணம் தருவதாக கூறினார். பணத் துக்கு ஆசைப்பட்டு இருவரை யும் கொல்ல சீனிவாசராவ் சம்மதித்தார். இருவரும் 3 மாதமாக சதித்திட்டம் வகுத்தனர்.

வைஷ்ணவி, சாய்தேஜா இருவரும் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் பின் தொடர்ந்து சென்று கண்காணித்தனர். பள்ளிக்கு செல்லும்போது வழிமறித்து 2 பேரையும் கடத்தி கொல்ல முடிவு செய்தனர்.

கடந்த 30-ந்தேதி வைஷ்ணவி, சாய்தேஜா இருவரும் காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். டிரைவர் லட்சுமண்ராவ் காரை ஓட்டினார். அப்போது சீனிவாசராவ் தனது கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெகதீஷ் என்பவரை அழைத்துச் சென்று குழந்தைகளை கொல்ல திட்டமிட்டார்.

குழந்தைகள் பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஷ் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து சென்று கார் கண்ணாடி மீது கல்வீசி தாக்கினார்.

உடனே டிரைவர் காரை நிறுத்திவிட்டு என்ன என்று பார்த்தார். அப்போது சீனிவாசராவும், ஜெகதீசும் டிரைவர் லட்சுமண்ராவை கத்தியால் குத்திக் கொன்றனர். இதைப் பார்த்த சிறுவன் சாய்தேஜா கார் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடினான். ஆனால் சிறுமி வைஷ்ணவி கொலையை பார்த்து அப்படியே அதிர்ச்சியில் உறைந்து காருக்குள் பதுங்கினாள்.

பின்னர் கொலையாளிகள் சிறுமி வைஷ்ணவியை காரில் கடத்தி சென்றனர். அவர்கள் கார் குண்டூர் நோக்கி சென்றது. பயந்துபோன சிறுமி வைஷ்ணவி என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள், எனது அப்பாவிடம் என்னை கொண்டு செல்லுங்கள். அவர் உங்களுக்கு நிறைய பணம் கொடுப்பார் என்று கெஞ்சினாள். ஆனால் அவர்கள் வைஷ்ணவியை விடவில்லை.

இதற்கிடையே சிறுமி கடத்தப்பட்டதாக சாய் தேஜா தனது தந்தையிடம் தெரிவித்தான். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது வெங்கட்ராவும் அவர்களுடன் இருந்ததால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

சிறுமியை கண்டுபிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் நெடுஞ்சாலை பகுதிகளில் தேடுதல் வேட்டையை தீவிரமாக்கினர். இதுபற்றி வெங்கட்ராவ் கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்தார். நெடுஞ்சாலை பகுதிக்கு செல்லவேண்டாம். கிராமங்கள் வழியாக புகுந்து குண்டூருக்கு செல்லும்படி தெரிவித்தார்.

இதையடுத்து கொலையாளிகள் சிறுமியை காலை 9 1/2 மணியளவில் வேறு காருக்கு மாற்ற முடிவு செய்தனர். குண்டூருக்கு செல்லும் வழியில் தாங்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த காருக்கு சிறுமியை மாற்றினார்கள். அப்போது அவள் கத்தி கூச்சலிட்டாள். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமி வைஷ்ணவியை கழுத்தை நெரித்து கொன்றனர்.

போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரமாக நடப்பதை அறிந்த அவர்கள் ஒரு “பிளாஸ்டிக் டப்” வாங்கி அதற்குள் சிறுமி பிணத்தை போட்டு மூடினார்கள். பின்னர் நள்ளிரவு 12 மணி வரை காரில் பிணத்தை வைத்துக்கொண்டே கிராமங்கள் வழியாக சுற்றினார்கள்.

இரவு 12 மணிக்கு பிறகு குண்டூர் ஆட்டோநகர் பகுதியில் உள்ள சீனிவாச ராவுக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலைக்கு சிறுமி பிணத்தை கொண்டு சென்றனர். அங்கு மின்சார பாய்லரில் சிறுமி பிணத்தை “பிளாஸ்டிக் டப்”புடன் தூக்கிப் போட்டு சுவிட்சை ஆன் செய்தனர். 1440 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் சிறுமி உடல் எரிந்து சாம்பலானது.

இதையடுத்து சீனிவாச ராவ் விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் பிணம் நன்றாக சாம்பலாகி விட்டதா என்பதையும் பார்க்க வந்தார். மறுநாள் காலையில் பிரபாகரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். சிறுமி பற்றி எந்த துப்பும் துலங்காததால் இதில் உறவினர்களுக்கு ஏதும் தொடர்பு இருக்குமா? உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்று விசாரித்தனர்.

அப்போது ஏற்கனவே ஒருமுறை வெங்கட்ராவ் சிறுமியை கடத்தியது பற்றி பிரபாகர்ராவ் தெரிவித்தார். இதையடுத்து வெங்கட்ராவை பிடித்து போலீசார் விசாரித்தபோது உண்மையை அவர் கக்கிவிட்டார். இதையடுத்து சீனிவாசராவ், ஜெகதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com