Thursday, February 18, 2010

இந்தியாவில் 110 போலி கிரடிற் காட்டுக்களுடன் இலங்கை இளைஞர் கைது : பல கோடி மோசடி.

போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பல கோடி பணத்தை மோசடியாக எடுத்த இலங்கையைச் சேர்ந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலி கார்டைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கிய சஞ்சீவ் காந்த் என்பவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அவர் வைத்திருந்த போலி கிரெடிட் கார்டுகளை கைப்பற்றினார்கள். அவர் வசித்த சென்னை ஆலப்பாக்கம் கணபதி நகரில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அங்கு அங்கு ஏராளமான போலி ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் மலேசியாவில் போலியாக தயாரிக்கப்பட்டவையாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களின் ஏ.டி.எம்.கார்டுகளை குறி வைத்து இந்த போலி கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பிடிபட்ட சஞ்சீவ்காந்த் சென்னையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து கோடிக்கணக்கில் சுருட்டி உள்ளது தெரிய வந்தது. அவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை போட்டு ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு செல் போன், 110 போலி ஏ.டி.எம். கார்டுகளையும் கைப்பற்றினார்கள். பணத்தை எண்ணுவதற்காக மெஷின் ஒன்றையும் வாங்கி வைத்திருந்தார்.

சஞ்சீவ்காந்த் இலங்கை வவுனியாவைச் சேர்ந்தவர்.பி.காம். படித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். சென்னையில் தங்கி இருந்து போலி கிரெடிட் கார்டுகள் தயாரிப்பில் ஈடுபட்ட போது, வசீகரன் என்பவரோடு கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த வசீகரன் லண்டன் தப்பி ஓடி விட்டார்.

வசீகரன்தான் போலி ஏ.டி.எம். கார்டுகளுக்கான ரகசிய குறியீடு நம்பர்களை லண்டனில் இருந்து அனுப்பி வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். சஞ்சீவ் காந்தின் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. அந்த கும்பலை கூண்டோடு மடக்கி பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

கைதான சஞ்சீவ் காந்த்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com