Monday, February 1, 2010

1000 பிரபாகரன் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் விடாது - இளங்கோவன்

பழ.நெடுமாறன் மீது எனக்கு மதிப்பு, மரியாதை உண்டு. அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். கண்டிப்பாக வருவார் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறார். இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தாலும், பிரபாகரனை போல் 1,000 பேர் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் அவர்களை விடாது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை, அனைத்து சட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஈரோடு சி.எஸ்.ஐ. திருச்சபை அரங்கில் வன்முறை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,

காங்கிரஸ் கட்சியினர் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு பேசி கொண்டே இருக்க கூடாது. நாங்கள் திருப்பி பேசினால் என்ன ஆகும் என்பது தெரியாது. என்னுடைய வீட்டிலும், முன்னாள் எம்.பி. கார்வேந்தன் வீட்டிலும் வெடிகுண்டு வீசப்பட்டது. இதை கண்டு பயப்பட மாட்டோம்.

இதைப் போன்ற சம்பவங்கள் மூலம் மரணம் வந்தால் அதை கொடுத்து வைத்ததாக நினைப்போம். உயிருக்கு பயந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல. தீவிரவாதத்தை தடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் உதவியுடன், முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆந்திராவில் காங்கிரஸ்கட்சி செய்த காப்பீட்டு திட்டம், இலவச டி.வி.திட்டம், ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் ஆகியவை தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதை வரவேற்கிறோம்.

நல்ல திட்டங்களை தமிழக அரசு செய்கிறது. இந்த திட்டங்கள் மக்களை சென்று அடைய தமிழ்நாட்டில் அமைதி வேண்டாமா?.

சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். நளினி தனிப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தால் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் நளினி வன்முறை கும்பலில் அங்கமாக உள்ளார்.

நாடாளுமன்றத்தை தாக்கியவன், பாதிரியார் மற்றும் அவருடைய குழந்தைகளை உயிருடன் எரித்தவர் என 22 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். இதில் 23வதாக நளினி உள்ளார்.

நளினியை விடுதலை செய்வது, தீவிரவாதத்தை விடுதலை செய்வது போன்றதாகும். அவரை விடுதலை செய்தால், அவரை போன்று விடுதலை கேட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்தால், இந்தியாவில் தீவிரவாதம் அதிகமாகும்.

பழ.நெடுமாறன் மீது எனக்கு மதிப்பு, மரியாதை உண்டு. அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். கண்டிப்பாக வருவார் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறார். இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தாலும், பிரபாகரனை போல் 1,000 பேர் வந்தாலும் இந்திய அரசும், ராணுவமும் அவர்களை விடாது என்றார் இளங்கோவன்.


No comments:

Post a Comment