Friday, January 1, 2010

கிழக்குக் கடற்பகுதியில் மீன்பிடித் தடை நீக்கத்திற்கு மக்கள் வரவேற்பு

கிழக்குக் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியமைக்கு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு இதன்மூலம் சுமுக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆந் திகதி சுமார் 450 பேர் கலந்துகொண்ட விசேஷ கூட்டத்தில் கிழக்கு மாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.எம்.டி.வீரசேகர விளக்கம் அளிக்கையில் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதத்தால் மீன்பிடிக்கச் செல்லவிடாமல் தடை செய்யப்பட்டிருந்த பிரதேசங்களில் இப்பொழுது தாராளமாக மீன்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தார். இந்த விஷேட கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் ஏ மஜீட், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம இவர்களோடு பல்வேறு உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபை அங்கத்தவர்களும் மூதூர் பிரதேசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

25 மீன்பிடிச் சங்கங்களின் சார்பில் சுமார் 450 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மூதூர் பிரதேசத்தில் ஏறக்குறைய 1,798 மீன்பிடியாளர்கள் 500 வள்ளங்களின் மூலமும் 221 டிங்கிப் படகுகள் மூலமும் மீன்பிடிக்கின்றார்கள். இதேவேளை கிண்ணியாப் பிரதேசத்தில் ஏறக்குறைய 2,661 மீன்பிடியாளர்கள் 945 வள்ளங்களின் மூலமும் 84 டிங்கிப் படகுகளின் மூலமும் மீன்பிடித்து வருகிறார்கள். பிரதேச சபை உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மற்றும் சில பொதுமக்களும் தாங்கள் இவ்வளவு காலம் பட்ட இன்னல்களையும் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழிலையும் கொண்டிருந்தவர்கள் தடைகள் காரணமாக தாம் பட்ட இன்னல்களையும் கூறி மீன்பிடித்தடையை நீக்கியதற்கு கடற்படையினர் சார்பில் கலந்து சிறப்பித்த தளபதிகளுக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தின் கடற் பிரதேசத்தில் மீன்பிடித் தடையை நீக்கியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிதும் வரவேற்றுள்ளது. கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் கருத்துக் கூறுகையில் கிழக்குப் பிரதேசத்தில் மக்கள் கூடுதலாக கடல் உணவையே பெரும் வாழ்வாதாரமாக நம்பியிருக்கின்றார்கள். அவர்களின் ஜீவனோபாயம் முற்றிலும் மீன்பிடியிலேயே தங்கியுள்ளது. எனவே எமது ஜனாதிபதியின் ஆலோசனைப்படி இந்தத் தடைநீக்கம் பெரிதும் வரவேற்கத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுகங்களை அண்டிய உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மீனவர்கள் தங்குதடையின்றி மீன்பிடிக்கலாம். இவ்வாறு கடற்படைப் பிரிவு ஊடகப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.



No comments:

Post a Comment