Saturday, January 9, 2010

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்குரிமை: மன்மோகன் சிங்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அடுத்த பொதுத் தேர்தலின்போது வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தில்லியில் வெள்ளிக்கிழமை வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும். இதற்கு அரசியலிலும் அவர்கள் ஈடுபடுவது அவசியம். இதற்கு வசதியாக 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நடப்பு ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும். இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டியது மிகவும் அவசியம்.

இந்தியாவை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பது பற்றி தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் நியாயமான விருப்பத்தை அரசு அங்கீகரிக்கும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.

இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 1,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வர்த்தகம் மற்றும் கல்வித் துறையில் ஈடுபடும்போது அரசியலில் ஏன் ஈடுபடுவதில்லை என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டி வரும் மனப் போக்கு உள்ளது. ஆனால் இப்போது இந்நிலை மாறியுள்ளது. தற்போது முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா விளங்குகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுவது தவறு. அரசின் அனைத்து செயல்பாடுகளும், திட்டங்களும் விரைவாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. மேலும் நாட்டின் வளர்ச்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அரசு மெதுவாக செல்லும் யானை போல இருந்தாலும், வலுவான தடத்தைப் பதித்துச் செல்லவே விரும்புகிறது.

சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போதிலும் இந்தியா 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. அத்துடன் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் மூலம் நாட்டில் பல லட்சம் மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கட்டுமானம், வேளாண்துறை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

No comments:

Post a Comment