Monday, January 4, 2010

ஜே. வி. பி. முன்னாள் எம்.பி ஜனாதிபதிக்கு ஆதரவு.

மேலும் சில எம்.பிக்களும் விரைவில் இணைவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பொல்கம்பொல தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி இம்முறை மேற்கொண்ட தவறான தீர்மானத்தால் மேலும் சில எம்.பிக்களும் பெருந் தொகையான கட்சி ஆதரவாளர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பதவியிலிருந்தே ஜனாதிபதிக்கு தனது ஆதரவுகளை வழங்குவதாக தெரிவித்த அவர், ஜே. வி. பி. தற்பொழுது முன்னெடுத்துவரும் செயற்பாடுகளிலிருந்து இன்று முதல் (நேற்று) விலகிக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, ஜானகி ஹோட்டலில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஜே. வி. பி.யின் கேகாலை வலய அமைப்பாளர் தரங்க பிரேமசிங்க, தொழிலாளர் பிரிவின் கொழும்பு மாவட்ட உறுப்பினரான சுதத் திக்வெல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனுர பொல்கம்பொல இங்கு மேலும் உரையாற்றுகையில்,

சரத் பொன்சேகாவுடன் எந்தவித ஒப்பந்தமும் நிபந்தனைகளும் இல்லாத நிலையில் ஜே.வி.பி. தலைமைத்துவம் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் எமது வரலாற்றில் எந்தவொரு தேர்தலுக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தாலும் நாங்கள் பொது சம்மேளனத்தை கூட்டி எமது யோசனைகளை முன்வைத்து ஆதரவாளர்களின், கட்சி முக்கியஸ்தர்களின் சம்மதத்துடன் உரிய தீர்மானினதை எடுத்து அதன்படி செயற்படுவோம்.

சம்மேளனத்துக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் சோமவன்சவினதும் சிலரதும் தனிப்பட்டதும் இரகசியமானது மான தீர்மானங்களுக்கு அமைய இம்முறை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிரிவினைவாதத்தை உருவாக்கியவர்களுடனும் முதலாளித்துவவாதிகளுடன் ஜே.வி.பி. இம்முறை இண¨ந்து செயற்படுகின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

கட்சிக்குள் இன்று பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. முன்வைக்கப்படும் யோசனைகள் தட்டிக்களிக்கப்படுகின்றன.

ஐ. தே. க. இம்முறை தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயமாக தோல்வியடையும் என்பதை தெரிந்து கொண்டே சரத் பொன்சேகாவை களத்தில் இறக்கியுள்ளது. ஐ. தே. க.வை பாதுகாக்க எடுத்த முயற்சிக்கு ஜே.வி.பி.யும் ஒத்துழைப்பு வழங்குகின்றது.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாக கூறிய ஜனாதிபதி இன்று இதனை நிறைவேற்றியுள்ளார். அடுத்து எம்முன் உள்ளது பொருளாதார மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி துறை மேம்பாடு மற்றும் அபிவிருத்தி போன்ற சவாலாகும். அதனை நிறைவேற்றுவதாயின் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும். அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் தவறான தீர்மானத்தால் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் தமது அரசியல் செயற்பாடுகளையும் கைவிட்டு ஒதுங்கியுள்ளனர்.

எமது கட்சி ஆதரவாளர்களை இவ்வாறு அநாதைகளாக்க முடியாது. அவர்களது நொந்துபோன மனத்திற்கு ஆறுதலாகவே இந்த தீர்மானத்தை எடுத்தோம் என்றார்.

நன்றி: தினகரன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com