Sunday, January 17, 2010

வடகிழக்கு இணைப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் இல்லை. சரத் என் சில்வா.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக இரு பிரதான வேட்பாளர்களும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருந்தபோதிலும் ஜெனரல் பொன்சேகாவிற்கு த.தே.கூ, தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்ததையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கையைவிட இழக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்கட்சிகளின் கூட்டிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக தெரிவித்ததையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைபினூடாக கிடைத்திருக்கக்கூடிய வாக்குகளை விட அதிகமான வாக்குகளை சிங்கள மக்கள் மத்தியில் பெற்றுக்கொள்வதற்காக ஆழும் தரப்பினர் மீண்டும் இனவாத பேயை சிங்கள கிராமப்புறங்கள் எங்கும் ஓடவிட்டுள்ளனர்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாகவும், ஜெனரல் பொன்சேகாவும் கூட்டமைப்பும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் பிரிக்கப்பட்டுள்ள வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமெனவும், தமிழ் மக்களுக்கு மாகாண சுயாட்சி வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறானதோர் பிரச்சாரத்தினை அரச தரப்பினர் முன்னெடுப்பர் என்பதை அறிந்திருந்த எதிர்கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரியப்படுத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் எவ்வித நிபந்தனைகளுமின்றியே கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்றது என்ற விடயத்தை கூறியிருந்தது. அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாம் எவ்வித நிபந்தனைகளுமின்றியே ஆதரவு வழங்குகின்றோம் என பல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தபோதும் , அரசின் பிரச்சாரம் சிங்கள கிராமப்புறங்கள் எங்கும் காட்டுத்தீயாக பரவியுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் இப்பிரச்சாரத்தினை முறியடிப்பதற்கு எதிர்கட்சிகள் பலமுயற்சிகளை மேற்கொண்டுவருவதை காணமுடிகின்றது. வடகிழக்கு மாகாணத்தை பிரிப்பதற்கு நீதிமன்ற தீர்பினை வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற புத்திஜீவிகள் மாநாடொன்றில் வடகிழக்கு இணைப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள முன்மொழிவை தானே வரைந்ததாகவும் , அதில் வடகிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாடப்பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளுமே பேசப்பட்டுள்தாகவும் கூறியுள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நேரடியாக கண்டிறியும் பொருட்டு அம்மக்கள் மத்தியில் தமது நேரடி முகவர்களை நியமித்து பிரச்சினைகளை கையாளமறுக்கும் மேற்படி பிரதான கட்சிகள் இரண்டும் கபடநோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களுடாக தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதனை பழக்கத்தில் கொண்டுள்ளது. இன்றைய அரசில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் அன்றாட வாழ்கைப்பொருட்களின் அதி உச்சவிலை என்பவற்றை கருத்தில் கொண்டுள்ள பெரும்பாண்மையின மக்கள் நாட்டில் ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்ற விடயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தநிலையில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் இத்தேர்தலில் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்பட்டபோதிலும் , தெருவால் போன பாம்மை சீலைக்குள் விட்டாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான கூட்டு வெற்றியை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது.



No comments:

Post a Comment