Sunday, January 31, 2010

வடகிழக்கு தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை அரசுக்கு வெற்றியா? தோல்வியா?

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். –திருக்குரல்-(சிறிய அளவே நல்லது செய்யப்பட்டாலும் அதனை பெரியதாக கருதுவார்கள் அதன் பயனை அறிந்தவர்கள்)

நடந்து முடிந்த இலங்கையின் 06 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கு உட்பட மலையகத்திலும் மக்கள் வாக்களித்த வீதம் மிகவும் குறைவாக உள்ளதுடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிக்கு அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் இடத்திலேயே இலங்கையின் மக்களின் மனங்களில் என்றும் வாழும் ஜனாதிபதி அவர்கள் உள்ளார்.

இதனை தமிழ் எதிர் கட்சிகள் தாங்களின் சொற்படியே வடகிழக்கில் மக்கள் ஜனாதிபதியை நிராகரித்துள்ளனர் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை திசைதிருப்பி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள முற்படுகின்றனர். எது எப்படியாயினும் உண்மையில் மக்கள் தற்போதைய தமிழ் கட்சிகளுடன் உள்ளார்களா அல்லது அவர்களை வெறுக்கிறார்களா என்பதே நமது கேள்வி.

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தமிழ் எதிர்கட்சிகளுடன் அல்லது ஆட்சியில் பங்கு பற்றும் கட்சிகளுடன் இருந்திருந்தால் முடிவு எப்படி இருந்திருக்க வேண்டும். எந்தவொரு வேட்பாளர்களுக்கேனும் தமிழ் பேசும் மக்கள் முழுமையாக வாக்களித்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் தடுக்கக்கூடிய எந்த அதிகாரப் பிரயோகங்களும் வட கிழக்கில் உண்மையில் இருக்கவில்லை. அப்படியானால் வடக்கில் ஒருவேளை இருந்ததா என்றால் நிச்சயமாக வாக்களிக்கும் தினத்தன்று இருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் அதிகமானவர்கள் தற்போதைய தமிழ் கட்சிகள் எதனையும் நம்பத் தயாராக இல்லை என்பதாலேயே அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

இதற்கு உள்ளும் புறமும் பல காரணிகள் உள்ளன. அவைகளை நாம் நோக்குவோமாயின்

* மக்கள் தமது இழப்புகளில் இருந்து இன்னும் விடுபடாமையும் வாழ்வதற்கான சரியான ஆதரங்கள் இல்லாமலும் இருக்கும் சூழல்.

* இலங்கையின் அரசியல் ரீதியான ஏமாற்றங்களும் தமிழ் இயங்கங்களின் போராட்ட ரீதியாக கிடைத்த துன்பங்களும் தங்களுக்கான உணவுத் தேவையே பாரிய போராட்டமான சூழலில் தேர்தல் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

* மக்கள் யுத்த சூழலிருந்து வெளிவர போதிய அவகாசம் வழங்கப்படாமை.

* வடகிழக்கில் தொடரும் உணவு, மற்றும் சுகாதராப் பிரச்சினைகள்.

* தற்போதைய தமிழ் கட்சிகளில் போராட்டப் பின்புலத்தைக் கொண்டவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதால் மீண்டும் ஏதாவது நடந்துவிடும் என்ற பயமும் அவர்களை மக்கள் நம்ப யோசிக்கும் சூழலும்.

* பழம்பெரும் அரசியல் வாதிகளின் அரசியலில் நம்பிக்கை இழந்த மக்களின் பார்வை.

இவ்வாறு பல காரணங்கள் இருந்தாலும் சாதாரண தமிழர்களை திருப்திப்படுத்தும் அளவு கூட தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் இருக்கவில்லை. இதற்கு உதாரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சோகாவிற்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவைக் (Unconditional Support) எடுத்துக் கொள்ளலாம்.

சரத்பொன்சேகா ஒருபெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் புலிகளை அழிக்கும் போரில் தலைமைதாங்கியது மட்டுமல்லாது அந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் அவரே தலைமை கட்டளை அதிகாரியாக இருந்தார். இவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தமிழர்களுக்கு அவர் செய்தது என்ன? இவரை முழுமையாக தமிழ் மக்கள் ஆதரித்தால் அவர் மீண்டும் கடந்தகால பெரும்பான்மை அரசியல் வாதிகளைப்போல் நடந்தால் அவரைக் கட்டுப்படுத்த திரு.சம்மந்தனால் முடியுமா? வட்டுக் கோட்டை பிரகடனத்தின்போது கூட இருந்த பழம்பெரும் அரசியல்வாதி இப்படியொரு நிலையை எடுத்தது தமிழ் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

அடுத்து தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முதல் சுவிஸர்லாந்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பெரும்பான்மையினருக்கு அரசியல் தீர்வில் அழுத்தம் கொடுக்கபோவதாக மூடிய அரைகளுக்குள் நாள் கணக்காய் பேசி விட்டு இலங்கையில் ஆளுக்கொரு கொடி கோஷம் என தங்களின் சுயரூபத்தைக் காட்டியது மக்கள் இவர்களின் நம்பகத்தன்மை தொடர்பான மீண்டும் ஒரு முறை சிந்தித்தக் தூண்டியது.

அடுத்த பிரதானமான விடயம் தமிழர்கள் தேசிய அரசியலில் தம்மால் எதையும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையற்ற மனநிலையில் இருப்பதாகும். இதற்கு வடகிழக்கில் செல்வாக்குச் செலுத்திய புலிகள் இயக்கம் அரசியிலிருந்து மக்களை தூரப்படுத்தி தங்களின் சுயநலத்திற்காக மக்களை பாவித்தது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சுழலில் மொத்த வட கிழக்கு தமிழர்களில் பெரும்பாண்மையானோர் வாக்களிக்காததை தங்களுக்கு சாதகமாக எதிர்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் காட்டுவது அவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையே காட்டுகிறது என்பதுடன் அது தமிழ்களை பெரும்பான்மை மக்களிடமிருந்தும் தேசிய அரசியலிருந்தும் தூரப்படுத்தும் செயலாகும்.

அந்த மக்கள் நிராகரித்து முதலில் இவர்களைதான் என்பதை அவர்கள் ஏற்க்க மறுக்கின்றனர். புரிந்தும் புரியாததுபோல் நடிக்கின்றனர். காரணம் இவர்களின் சொந்தப்பிரதேசத்தில் அளிக்கப்படாத வாக்குகளின் வீதம் அறுவது (60%) ஆகையால் இவர்களின் கொள்கைகளையும் இவர்களையும் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பது அதன் அர்த்தம்.

காரணம் அவர்களின் சொந்தப் பிரதேசத்தில் அவர்களை மக்கள் நிராகரித்து வாக்களிப்புக்குச் செல்லாமல் இவர்கள் திருந்தி செயற்பட ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த தேர்தல்களில் தகுதியான புதியவர்கள் முன்வந்தால் இவர்கள் தூக்கியறியப்படுவர் என்பது திண்ணம்.

அத்துடன் மகிந்த மற்றும் இந்திய கூட்டு இராஜதந்திரம். புலிகளை யுத்தத்தில் தோற்கடித்தது போன்று தற்போதைய தமிழ் அரசியல் கட்சிகளை அரசியலில் தோற்கடிக்க முயற்சிப்பது இன்னோரு திட்டமாகத் தெரிகிறது. காரணம் இந்த இயக்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய (கருணா தவிர) அரசியல் வாதிகள் அரசியில் தொடர்வது தொடர்ந்து இந்தியாவிற்கு அச்சுருத்தலாகவே இருக்கும் இதனை நிரூபிக்கும் வகையிலேயே இந்திய அரசு தமிழர் விடுதலை கூட்டணியுன் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது.

இதற்குப் பிரதான காரணமாக அமைவது இவர்கள் வடகிழக்கு அரசியலில் தொடர்நதால் தொடர்ந்தும் தமிழ் நாட்டில் மத்திய மானில அரசுகளை வேண்டாத அசௌகரியங்களை ஏற்படுத்துவர் இத்தகைய செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டின் அரசியலில் சில சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். எனவே இவர்களை இதைச் சந்தர்பமாகப் பயன்படுத்தி மக்களிடமிருந்து பிரிக்கும் தந்திரமாகவே யுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதி தேர்தலை நடத்தவைத்து வடகிழக்கு தமிழர்களின் அரசியலில் ஒரு மாற்று சிந்தனையை உருவாக்கி அவர்களின் பாதையை மாற்றும் முதல் பணியில் வெற்றி கண்டுள்ளனர்.

அதனாலேயே நேற்று நடந்த ஐ.பி.என் சி.என்.என். நேர்காணலில் ஜனாதிபதி அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை விட அவர்கள் வாக்களித்தார்கள் என்பதே பெரிய விடயம் என இதனை எதிர் மறையாகச் சொன்னார். அதாவது இவர்களில் பெரும்பாலானோரை சிந்திக்க வைத்ததன் காரணமாக அவர்கள் தாங்கள் ஆதரித்துவந்த தமிழ் கூட்டமைப்பைபின் வேண்டுதலை நிராகரிக்க வைத்துள்ளோம் என்பதை பெருமையாகச் சொன்னார். அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த வாக்களிக்காத 60% மக்களை நேரடியாக தேசிய கட்சிகளில் நம்பிக்கை கொள்ள வைக்கும் செயற்பாடுகளில் அரசு இறங்கும் அதற்காக அபிவிருத்தி மற்றும் பொருளாத உதவி என்பதுடன் வேலை வாய்ப்புக்கள் துரும்புச் சீட்டாக பயன்படுத்தப்படும்.

இவைகள் அனைத்தையும் அரசு இனி நேரடியாகவோ அல்லது மக்கள் வெறுக்காத ஒரு தமிழ் தரப்பை உருவாக்குவனூடாகவோ மட்டுமே வழங்கும். இதுவே எதிர்காலத்தில் சிறுபான்மை மக்கள் அரசை விமர்சிக்காமல் பாதுகாக்க சிறந்த வழியாகும். அரபு நாடுகளில் ஒரு தந்திரம் பொது மக்களை அரசின் பக்கம் பார்க்காமலிருக்க அரசு கையாளும் அது மக்களுக்கு தேவைக்கு அதிகமாக அனைத்தையும் வழங்கும் இதனால் அந்த நாட்டு மக்கள் அந்த முடியாட்ச்சியின் தீமைகள் அதிகாரம் பற்றி சிந்திப்பதில்லை.

இதேபோன்று வட கிழக்கை முற்று முழுதாக இந்திய, சீன உதவியுடன் தெற்கைவிட அபிவிருத்தி செய்து பொருளாதார ரீதியில் மீட்சியை வழங்கிவிட்டால் இலங்கையின் தேசிய அரசியலுக்கு எதிராக மக்கள் கொதிக்க மாட்டார்கள்.

இதனால் அரசியல் தீர்வு என்று வரும்போது இணைந்த இலங்கைக்குள் சில இனங்காணப்பட்ட அடிப்படைப்பிரச்சினைகளுக்கு மட்டும் விசேட அம்சங்களை வழங்கிவிட்டு தற்போதைய யாப்பை அழகாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை பாதுகாக்கலாம் என்பது தற்போதைய அரசின் அல்லது பெரும்பான்மை அரசியிலில் புதிய பார்வை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதையே முந்தநாள் நடந்த ஐ.பி.என் சீ.என்.என் பேட்டியில் ஜனாதிபதி சொன்னார். “தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்குவேன் ஆனால் அது என்னைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வதாகவே இருக்கவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்”

ஆகவே இத்தகைய ஒரு அரசியல் தீர்வை மிகக் குறைந்த அதிகாரங்களை உடையதாக 13ம் திருத்தச் சட்டத்தின்கீழ் வழங்கி அதேநேரம் அதனை முழு நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் செய்யவேண்டும் என்றால் இத்தகைய செயற்பாடுகளில் வெற்றி பெற்றுத் திகழும் இந்திய அரசியல் மூளை(லை)களையே பயன்படுத்த வேண்டும். இந்திய அரசியல் அமைப்பில் மானிலங்களுக்கு பூரண அதிகாரம் உள்ளது என்று நீங்கள் கூறுபவராயின் அது எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.

எனவே இந்திய மூளைகளைப் பயன்படுத்தி இலகுவாக இதனைச் செய்துவிடும் சந்தர்ப்பம் அரசுக்கு கிடைத்துள்ளது. இதற்கு உதாரணமாக திருகோணமலையில் அனல் மின்னிலையம் அமைக்கப்பட்டுவரும் சம்பூர் பிரதேச மக்களை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் பி.பி.சி தமிழோசை பேட்டி கண்டபோது பசில் ராஜபக்ஷ சொன்ன “ மூன்று மாதத்துக்குள் உங்களை மீள்குடியேற்றம் செய்வதாக கூறியதை பற்றி கேட்டபோது” மக்கள் “அவர்கள் ஏன் இந்த நான்கு வருடங்களும் எங்களை மீள்குடியேற்ற வில்லை” என்று கேட்டதுடன் செய்தபின் நம்புகிறோம் என்று பதிலளித்தனர்.

அதேபோல் சம்பந்தனும் ரவூப் ஹக்கிமும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீள் குடியேற்றுவதாக சொன்னதை பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்க “அவர்கள் தேர்தல் வந்தபோதுதான் எங்களைப்பார்க்கவே வந்துள்ளனர்” என்று கூறி அவர்களையும் நம்ப மறுத்துள்ளனர்.

இதன் பிரதிபலிப்பாகவே திருகோணமலையில் 43% வாக்குகள் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்டுள்ளதை நாம் நோக்கலாம். ஆகவே வடகிழக்குத் தமிழர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளை நம்புவதில் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொள்பவர்களுக்கே இலங்கையின் ஆட்சியும் அதிகாரமும் நிரந்தரமாக அமையும் அந்த இடத்தை இந்திய உதவிகளுடன் மிகவிரைவில் தற்போதைய ஆளும் கட்சி நிரப்ப முயற்சிப்பதை நாம் சில அவர்களின் செயற்பாடுகள் ஊடாக ஊகிக்க முடிகிறது.

இத்துடன் இனி மற்றைய தமிழ் கட்சிகள் அதனை நிரப்ப சந்தர்ப்பத்தையும் அரசு இனி அவர்களுக்கு வழங்காது. காரணம் தற்போது தமிழ் மக்களின் பாரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுவது அவர்களின் வாழ்வாதாரங்களும் வருமானமும் இதனைச் செய்ய பாரிய அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்புத் திட்டங்கள் அவசியம் அவைகளை மட்டும் ஒரு புதிய சாரார் ஊடாக அரசு செய்து விட்டால் அந்தத் தரப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்றுவிடக்கூடிய சாத்தியங்களே உண்மையாக வட கிழக்குப் பிரதேசங்களில் உண்டு. இதனை பிரச்சாரப்படுத்தி மக்களை ஒரு தரப்பு உரிமைக்கோஷத்துடன் குழப்ப முற்பட்டால் விளைவுகள் தமிழ் தரப்புக்கு பாரிய தோல்வியாக அமையும். ஏனெனில் அபிவிருத்திசார்ந்த வாழ்வியல் மற்றும் அன்றாடப்பிரச்சினைகள் அற்ற சூழலை உருவாக்குகின்ற தரப்புடன் கிழக்கு மக்கள் முற்று முழுதாக சென்றுவிடுவர்.

ஆனால் உரிமைக் கோஷம் வடக்கில் எடுபட வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் வடகிழக்கு தமிழர்கள் என்ற நிலை இலங்கையிலிருந்து நீங்கிவிடும். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதுவே உண்மை.

இதற்கு ஒரு உதாரணம் மலையகம் என்பது 1980 ஆண்டுகளில் வடகிழக்கு தமிழர்கள் அரசியல்வாதிகளின் ஒரு பிரதான அங்கமாகவே இருந்தது. இங்கே போராட்டம் என்ற கோஷம் வலுப்பெற்றவுடன் அங்கே அன்றாட வாழ்கைப்பிரச்சினை என்ற விடயம் வலுப்பெற்றது இதனால் வடகிழக்கு அரசியில் தலைவர்களிடமிருந்து மலையகம் தனியாகச் சென்றது. இதே நிலை வடகிழக்கிற்கு ஏற்படும் இதனையே பெரும்பான்மை மற்றும் உலக இந்தியத் தரப்புக்கள் விரும்புகின்றன.

இதனால் பல நன்மைகளும் அதைவிடக் கூடிய தீமைகளும் தமிழர்களுக்கு உண்டு ஆனால் தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு இது அவ்வளவு அச்சுருத்தலாக அமையாது காரணம் கிழக்கில் முஸ்லீம்களின் கை ஓங்கி நிற்க அது வாய்ப்பாக அமையும் அத்துடன் இலங்கை முழுவது பரந்து முஸ்லீம்கள் வாழ்வதனால் அவர்களுடன் இணைந்து தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தி தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இது சந்தர்ப்பம் அளிக்கும்.

வடக்கு கிழக்கு இணைந்திருந்தபோதும் அது கிழக்கு முஸ்லீம்களுக்கு சில அசெளகரியங்களையே ஏற்படுத்தியிருந்தது இதற்கு புலிகளின் அராஜக செயற்பாடுகளும் அடக்கு முறைகளும் வழி வகுத்தன. இதனை நாடிபிடித்தே ஜே.வி.பி யூடாக வட கிழக்கை அரசு பிரித்தது. இனி வடகிழக்கு இணைப்புக்கு சாதாரண கிழக்கு முஸ்லீம்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது அரசுக்குத் தெரியும். முஸ்லீம்கள் மீது புலிகள் பலப்பிரகயோகம் செய்தபோது முஸ்லீம்கள் மேற்குறித்த அரசியல் நிலைபாட்டை எடுத்தே தங்களை ஓரளவு பாதுகாத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் முஸ்லீம்களை பூரணமாக திருப்திப்படுத்தவேண்டிய நிலையில் தமிழ் அரசியல் தரப்பினர் உள்ளனர். ஆனால் அதனை தற்போதைய கிழக்கு அரசியல் தமிழ் தலைமைகள் செய்யத் தயாராக இல்லை. இன்னும் முஸ்லீம்களிடமிருந்து புலிகளினால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீளளிக்கப்படவில்லை. துரத்தப்பட்ட முஸ்லீம்கள் திரும்ப (சில இடங்களில்) சொந்த நிலங்களில் குடியேறியபோது அந்தந்தப்பகுதிகளில் இருக்கும் தமிழ் அரசியல் சக்திகளின் மிரட்டல்களுக்கும் மற்றும் அச்சுருத்தல்களுக்கும் இப்போதும் உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் முஸ்லீம்கள் தாங்கள் பிரிந்து செயற்படுவது பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதை சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு ப்லஸ் பொயின்டாக பாவித்து தமிழர்களை ஒரு எல்லைக்குள் வாழவைக்கப்பார்க்கின்றனர்.

ஆகவே முதலில் தமிழ் பேசும் சமூகங்களுக்குள் பரஸ்பரம் ஒற்றுமையும் சரியான நம்பிக்கையும் கட்டியெழுப்பப்படவேண்டும். இதற்கு பாரிய தடையாக இருப்பது சிங்கள அரசியல் சக்திகளோ அல்லது தமிழ் பேசும் பொது மக்களோ அல்ல. தமிழ் ஆயுதம் தாங்கிய அரசியல் வாதிகள் இவர்களின் எடுபிடிகள்தான். இவர்கள்தான் இரண்டு சமூகங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் தங்களின் கைவரிசைகளை காட்டி விடுகின்றனர். இதனால் அவ்வப்போது இரண்டு சமூகங்களுக்கிடையிலும் மீண்டும் பதட்ட நிலைகள் தொடர்கின்றன. நம்பிக்கையீனங்கள் தொடர்கதையாக உள்ளன.

எனவே இவைகளை கலைந்து ஒன்றுமையான இலங்கையை உருவாக்க வேண்டுமாயின் முதலில் தமிழர்களை நடுநிலைக்கு கொண்டு வந்து பின்னர் அவர்களை தேசிய அரசியலில் இனைத்து அடுத்து அவர்களை இலங்கை சட்ட திட்டங்களுக்குள் மட்டும் வாழவைக்கவேண்டும். இதற்கு பல சிங்கள் குடியேற்றங்களும், தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களின் செல்வாக்கையும் அதிகரிக்க வேணடும் அப்போதுதான் எந்த சமூகமும் தாங்கள் பெரியவர்கள் என்ற வாதத்தை இலங்கையிலிருந்து ஒழிக்க முடியும் என்று இராஜதந்திரிகள் கருதுகின்றனர். எனவே இந்த விடயத்தில் ஆளும் அரசு பெரு வெற்றி பெற்றிருக்கிறது.

ஆகவே தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது எதிர் கட்சிகள் அல்ல, நிச்சயமாக ஆளும் தரப்பும் சர்வதேசமும்தான். தற்போதைய தமிழ் கட்சிகள் ஒட்டு மொத்த உண்மையான பலமும் அவர்களுக்கு தற்போது ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் அளவுதான். அந்த வாக்கு வங்கியிலும் எதிர்காலத்தில் ஓட்டைகள் விழும். ஐ.தே. கட்சியின் வாக்கு வங்கியில் விழுந்த ஓட்டையைப் போல.

ஆக, தற்போது வடகிழக்கில் வெற்றி பெற்றிருப்பது ஆளும் தரப்புத்தான் தமிழ் ஆளும், எதிர் கட்சிகள் வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் இனி பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இந்த உண்மைகள் அவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தாது ஆனால் இன்னும் சில ஆண்டுகளின் பின் வரும் தேர்தல்களில் பெரும்பாலான தமிழர்கள் வாக்களிப்பர் அது யாருக்கு என்பதில்தான் பல கேள்விகள் இருக்கும்.

ஆகவே தமிழர்களின் இலங்கையின் வாழ்வியல் உரிமைப்பிரச்சினையினை மாற்றியமைக்க மிகத்தந்திரமாக ஒரு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதில் பகடைக்காய்களாக தமிழ் நரைத்த மண்டைகள் பாவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் புதிய அரசியல் நீரோட்டத்தில் இவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டிய இடம் தற்போது சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. இனி நம்பிக்கையான மாற்றத்தை இவர்கள் கோரமுடியாது. காரணம் இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக தமிழர்கள் கருதவில்லை. நமது யூகம் சரியாக இருந்தால் புதிய பாதைகளில் வளமான எதிர்காலம் தமிழர்களுக்கு கிடைக்கும் ஆனால் அதற்கு தமிழ்பேசும் தரப்புக்கள் இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுப்புடன் ஒற்றுமைப்பட வேண்டும்.

“ஒற்றுமை என்பதே எங்களுக்கு தெரியாத சொல்லாயிற்றே” என்பதே தமிழ் கட்சிகளின் பிரதான கொள்கை என்பது மக்களுக்குத் தெரியும்.


ஆக்கம் கிழக்கான் ஆதம்

30.01.2010
காத்தான்குடி

No comments:

Post a Comment