Friday, January 22, 2010

இந்திய விமானங்களைக் கடத்த பயங்கரவாதிகள் திட்டம்.

தென்கிழக்காசிய நாடுகளின் விமானநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமானங்களை கடத்த பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா , அல் குவைதா மற்றும் ஜமாயத் உத் தாவா போன்ற இயக்கங்கள் சதி செய்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நேபாள், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளில் இருக்கும் விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து புறப்படும் இந்திய விமானங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து யங்கூன் , தாகா, கொழும்பு செல்லும் விமானங்களின் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விமான கடத்தல் சதி குறித்து பேட்டியளித்த உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலர் யு.கே.பன்சால் : பயங்கரவாத சதி தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். ஏர் இந்தியாவை ‌தவிற மற்ற விமான நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என கூறினார். கடந்த வாரமே மத்திய உள்துறை அமைச்சகம் உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களையும் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

ஏற்கனவே குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சகட்ட உஷார் நிலை அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது வந்துள்ள உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு பல அடுக்காக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment