Wednesday, January 6, 2010

கிழட்டுச் சிங்கமும் அறளைபெயர்ந்த அந்தணனும்! - சதா.ஜீ.

ஒரு காட்டில் கிழட்டு சிங்கம் இருந்துச்சாம். அதற்கு மிருகங்களை விரட்டிச்சென்று வேட்டையாட முடியவில்லை. ஆனால் சிங்கத்திடம் ஒரு தங்கக் காப்பு இருந்துச்சு. ஒரு குளத்தின் நடுவில் கிழட்டுச்சிங்கம் தங்கக் காப்புடன் காத்திருந்தது. அந்த வழியாக ஒரு அந்தணன் சென்றான். அவன் அந்த தங்கக் காப்பை கண்டான். சிங்கம் உடனே 'உனக்கு இந்த தங்க காப்பு வேணுமா?' என்று கேட்டது. உடனே அந்தணனும் 'ஆம்' என்றான். கிழட்டுச் சிங்கமும் 'இந்த குளத்துக்குள் இறங்கிவந்து பெற்றுக்கொள்' என்றது. அந்தணனும் வாணீர் வடிய ஓடிச்சென்றான், குளத்தின் சகதிக்குள் அகப்பட்டுக்கொள்ள சிங்கம் எந்தவித சிரமமுமின்றி வேட்டையாடி புசித்தது. இது கதை.

இந்த கதையை நீங்கள் நிதர்சனமாக காண குறைந்தது ஒரு வருடத்துக்காவது பொறுத்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்குப் புரிந்திருக்கும் கிழட்டு சிங்கம் யார்? அறளைபெயர்ந்த அந்தணன் யார்? என்று. ஆனால் இதில் அந்தணன் இறக்க நேரிடாது. அந்தணனுக்கு பின்னால் நின்ற மந்தைக் கூட்டமும் பின்னால் நிக்காத மக்கள் கூட்டமும்தான் மடியப்போகிறது. எது எப்படியோ புலிகளின் கொட்டம் மிகவிரைவில் அடக்கப்படப்போகிறது என்று மாவிலாறில் தொடங்கியபோதே மாற்று இணையங்களில் பலரும் ஆணித்தரமாக அடித்துக்கூறினார்கள்.

அதுபோலத்தான் இப்போதும் நடக்கப்போகிறது. வேள்விக்கு வளர்த்த கடாவாக தமிழ் மக்கள் நிறுத்தப்படப்போகிறார்கள். 'உள்ளத்தில் இருப்பதுதான் உதட்டில் வரும்' என்பதற்கிணங்க முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு வழங்கிவரும் பேட்டிகளில் தன்னையறியாமலே சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான கருத்துருக்களை கூறிவருவதை யாவரும் அறிவர். இந்த அறளை பெயர்ந்தவர்களுமா அறியமாட்டார்கள்?

அதிரடியாக தான் அப்படியொன்றும் சொல்லவில்லை, ஊடகங்கள்தான் அப்படி திரித்து வெளியிட்டுவருகின்றன என்று முழு பூசனிக்காயை ஒருபிடி சோற்றுக்குள் மறைக்க முனைகிறார். இதற்கு முதல் 'சரணடைய முனைந்த புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே இராணுவம் சுட்டுக்கொன்றது' என்று காட்டிக்கொடுத்தார். பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புக்களினால் 'தகட்டை' மாற்றி தான் அப்படிச்சொல்லவில்லை ஊடகங்கள் தனது கருத்தை திரித்துவிட்டன என்று கதைவிட்டார். அதுபோலத்தான் சம்பந்தன் கோஷ்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் உறுதிமொழிகளும் காலாவதியாக எவ்வளவுகாலம் எடுக்கும்?

'தான் ஆட்சிக்கு வந்தால் தகுந்த ஆதாரமில்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து நபர்களையும் ஒரு மாதாகலத்துக்குள் விடுவிக்கப்போவதாகவும் தமிழர் பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்களை குறைத்து குறிப்பிட்ட முக்கியமான பகுதிகளில் மட்டும் முகாம்களை வைத்திருக்கப்போவதாகவும் பொன்சேகா கயித்தைவிட சம்பந்தன் கோஷ்டி விழுங்க முண்டியடிக்கிறது. 'தகுந்த ஆதாரம்' என்பது நீர்த்துப்போகக்கூடிய ஒரு சொல். அதுகூடவாக விளங்காது இந்த அப்புக்காத்துகளுக்கு? எப்படியாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் சரத்பொன்சேகா கூறும் வெற்று வாக்கியங்கள் இன்னும் நிறைய காது குளிரக்கேக்கலாம்.

மேலும் இராணுவ முகாம்களை அகற்றுவது என்பது தண்ணீரில் எழுதும் எழுத்துப்போன்றதுதான். நடைமுறைச்சாத்தியமானவற்றை நம்பவேண்டும். வாக்குறுதிகளை யாரும் அள்ளித்தரலாம். நாளை 'தமிழீழத்தை' பிரித்துத் தருகிறேன் என்றால் சம்பந்தன் கோஷ்டி நம்பத்தானா போகிறது?

சரத்பொன்சேகா வடக்கின் தளபதியாக இருந்தகாலகட்டத்தில்தான் இராணுவ முகாம்களை சுற்றியிருக்கும் பகுதிகள் 'உயர்பாதுகாப்பு வலயம்' என்றபெயரில் அபகரிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் யுவதிகள் காணமல் போனார்கள். இது தற்போது பேசுபொருளில்லை. ஆனால் ஒருவர் கடந்த காலங்களில் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார் என்ற கணிப்பு ஓரளவுக்கு சரியானதாகவே இருக்கும்.

சரத்பொன்சேகாவைப்பற்றிய கணிப்பே இல்லாமல் சம்பந்தன் கோஷ்டி சரத்பொன்சேகா உடுத்தியிருக்கும் வேட்டிக்குள் மறைந்துகொள்ளப் பார்க்கிறார்கள் என்பதுதான் வெக்கக்கேடானது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com