Friday, January 22, 2010

மகிந்த ராஜபக்ஸ பதித்த வரலாற்று அடிச்சுவடுகள்.

ஆளும் அரசு ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வியுறப் போகிறோம் என்பதை அறிந்து சிங்கள மக்களிடம் இனவாதத்தைத் தூண்டி வெற்றிபெறலாம் என முயற்சிக்கிறது. இதனாலேயே பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது என அரசு பிரசாரம் செய்து சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டுகிறது. தேர்தலில் தோல்வியுறப் போகின்றோம் என்பதினாலேயே இனத்துவேசத்தைப் பரப்பும் மகிந்தா ராஜபக்ஸ்சவை வெளியேற்றும் பொறுப்பு சிங்கள மக்களிடம் மாத்திரம் இல்லை தமிழ் மக்களுக்கு அதைவிடப்பெரிய பொறுப்பு உண்டு.

மகிந்தா ராஜபக்ஸ நுனிநாக்கில் அமுதமும் அடிநாக்கில் நஞ்சும் கலந்த அரசியற் கிளட்டு நரி. எப்பொழுதும் தான் இனவாதத்தை நேரடியாகப் பேசாமல் தனது விடுதேங்காய்களான வீரவன்ச, ஹெலஉரிமையவைக் கொண்டே செய்துள்ளார் என்பதைத் தமிழர்கள் மிகக் கஷ்டப்பட்டுக் கற்கவேண்டும்.

உலகபொருளாதார நெருக்கடிகளும் அரசியல் நெருக்கடிகளும் உக்கிரமாக நடந்துகொண்டு சமுதாய மாற்றங்கள் மிகவிரைவாக நடைபெற்று முழு இலங்கைச்சமூகமும் நொதிதித்துக் கொண்டிருக்கையில் சமுதாய மேற்பரப்பில் அதாவது நுனிப்புல்லில் தெரிவதுபோல சமுதாயத்தின் மைய உள்ளடக்கமும் இருந்துவிட்டால் சமூக விஞ்ஞானம் மிக இலகுவாகிவிடும். மேலே தெரியும் இனவாத ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் நிதர்சனப் பருப்பை பார்க்க வேண்டும்.

தமிழ் சமுதாயம் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு கையிழந்து காலிழந்து குடும்பங்கள்கூடச் சிதறி ஒரு சமுதாயமாகத் தலைநிமிரவே முடியாத நிலையில் இருக்கும் பொழுது அற்ப தேர்தலை வெல்வதற்காக கேடுகெட்ட இனவாதத்தை இராஜபக்ஸ மடைதிறந்து விட்டுள்ளார்.

சிங்கக் குட்டிக்கு விளையாட்டு. சுண்டெலிக்குச் சீவன் போவது போல ஊழல்நிறைந்த மகிந்த குறுங்குழுக் கும்பலுக்குத் தேர்தற் களியாட்டம். தமிழ் சமூகத்திற்கு அழிவின் விழிம்பிலிருந்து கமலகுண்டலமாக வீழ்ந்து அழியாமல் மீண்டும் தப்பிப் பிழைக்க வேண்டிய வாழ்க்கை வரலாறு.

ராஜபக்ஸ எப்பொழுதும் தான் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்கால் வெல்வேன் என்ற திமிரோடு திரிந்தவர். தமிழ் தேசியவாதம் மீண்டும் வரலாற்றால் எழுச்சிகொள்ள முடியாத மட்டத்திற்கு அதனுள் காலாகாலமாகத் திரண்டிருந்த முரண்பாடுகள் அத்தனையும் வேளியேற்றப்பட்டுக் கோதாகி வெற்றுக் கோம்பையாகி அது சிங்கள இனவாதிகளுக்குச் சவால்விடாத சூழல் தோன்றவே சிங்கிளதேசம் தனது தீர்க்கப்படாத முரண்பாடுகளால் மகிந்த அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழவே அந்த எதிர்ப்பு அலையின் பிரதிநிதியாக சரத் பொன்சேகாவை வரலாறு தோற்றுவித்தது.

அந்த வெறுப்பு அக்கினிப் பிரளயத்தில் மகிந்தா குறுங்குழு அரசகும்பல், அவர்கள் கொள்ளையடித்த அரச சொத்துக்களோடு கூடவே நீறாகிப் பஸ்பமாகும் நிலை தோன்றவே அதிலிருந்து தப்பும் வியூகமாகவே சம்பந்தன் இரகசிய ஒப்பந்தம் ஒன்று எழுதப்பட்டு வடகீழ்மாகாணம் இணைந்து தமிழர்களுக்குப் பிரதேச சுயாட்சி கிடைக்கப் போகிறது என்றெல்லாம் பொய்ப் பிரசாரங்களை மடைதிறந்து விட்டது.

அப்படி ஒரு ஒப்பந்தம் இல்லையென்று சம்பந்தனும் பொன்சேகாவும் பலமுறை கூறிய பின்பும், அரசபிரசாரபலத்தால் அப்படியொன்று இருக்கிறது என்ற இனவாத நஞ்சை மகிந்தா அரசு மடைதிறந்து விட்டுள்ளது. அப்படி ஒரு ஒப்பந்தம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் அரிதாகும்.

உண்மையில் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஏதோ ஒரு வழியில் தமிழ் மக்கள் அனுபவித்த எக்காலமும் மன்னிக்கவும் மறக்கவும் முடியாத காயங்களை ஆற்றி சமரசப்பட்டு சிங்கள தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு வாழ இந்த நாட்டில் மீண்டும் ஒரு புதிய சூழலையே ஏற்படுத்த, அவர்களுக்குத் தெரிந்த வழியில் முயற்சித்தனர். அந்த முயற்சிகூட தமிழ்விரோதத்தை மடைதிறந்துவிடவே இன்று மீண்டும் இலங்கை இனவாத இலங்கை ஆகிவிட்டது. ஆதலால் தமிழ் மக்கள் இது சம்பந்தமாக மிகக் கரிசனையாகச் சிந்தித்து எதிர்காலப் பின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

மகிந்தா ராஜபக்ஸ வென்றால் சிங்கள மக்கள் புதியமாற்றத்திற்குத் தயாரில்லை என்பதையும் மீண்டும் இனவாதம் தலை தூக்கப் போகிறது என்பதையே கட்டியம் கூறும். சரத்பொன்சேகா வென்றால் சிங்கள மக்கள் புதியமாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் என்பதையே அறிவிக்கும்.

ராஜபக்ஸ எவ்வாறு பிரதமமந்திரியானார்?

மகிந்தா ராஜபக்ஸ்ச ஏப்பிரல்6, 2004 இல் இலங்கையின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தத் தேதிக்கு முன்சில நாட்கள் இலங்கை வரலாற்றில் அழித்தெழுத முடியாத சுவடுகளை விட்டுச் சென்றது. இந்த நாட்களில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரத்துங்கா திருகோணமலை குரங்குபாய்ஞ்சானில் புலிமுகாம் இருப்பதைக் காரணம் காட்டி பாதுகாப்பு மந்திரி, தகவல் மற்றும் உள்விவகார மந்திரியை வேலை நீங்கம் செய்தததோடு சிலநாட்களில் றணில் விக்கிரமசிங்காவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தையும் கலைத்துவிட்டு ஜே.வி.பியின் துணையோடு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முற்பட்டார்.

அந்த எஸ்.எல்.எப்.பி ஜே.வி.பீ கூட்டில் ஜே.வி.பி யினர் லக்ஸ்மன் கதிர்காமரைப் பிரதம மந்திரியாக்கும்படி பிரேரித்தனர். தமிழர் ஒருவர் பிரதமராக இருந்தால் இனங்களிடையே சமரசத்தைக் கொண்டு வரலாம் என்று பிரேரித்தனர். அதை சந்திரிகா குமாரத்துங்காவும் மந்திரிகளாக வரவிருந்தவர்களும் ஆதரித்தனர்.

இதைச்சகிக்காத ராஜபக்ஸ்ச இரவோடு இரவாக மல்வத்தை பீட மகானாயக்க தேரேர்களினதும் அஸ்கிரிய பீட மகானாயக்க தேரேர்களினதும் காலில் விழுந்து இலங்கையில் தமிழர் ஒருவர் பிரதமராக வர இருக்கிறார். அதுவும் கிறீஸ்தவர் ஒருவர் பிரதமராக வர இருக்கிறார். இது அடுக்குமோ என அழுகையும் ஆத்திரமும் ததும்பக் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட மகாநாயக்க தேரோக்கள் உடனே இரவோடு இரவாக கொழும்புக்கு வந்து சந்திரிக்கா குமாரத்துங்காவையும் மற்றய மந்திரிகளாக வரப்போகிறவர்களையும் சந்தித்து மகிந்த ராஜபக்ஸ்சவைப் பிரதமமந்திரி ஆக்காவிட்டால் நாட்டிலே தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களைச் செய்யப் போவதாகவும் எச்சரித்தனர். மறுநாள் 2004 ஏப்பிரல் 6 இல் ராஜபக்ஸ்ச இலங்கையின் 17 வது பிரதமரானார். இதுவே ராஜபக்ஸ்சவின் தமிழர் மேலான பிரேமபாசமாகும்.

பஸ்களில் ஏற்றி அனுப்பிய ராஜபக்ஸ :

2007 ஆனி 7 தேதி கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த அப்பாவித் தமிழர்கள் 500 பேரை ராஜபக்ஸ்சவின் கண்ணுக்கு முன்னால் பஸ்களில் ஏற்றி அவர்கள் கத்திக் கதற பலாத்காரமாக வவுனியாவுக்குப் பொலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைத்தார்கள். மேலும் 300 பேர் பஸ்களில் இடம் இல்லாததால் புறக்கோட்டை பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப் பட்டார்கள். அதிகாமானவர்கள் கொழும்பில் வைத்திய சிகிச்சைகளுக்காக வந்தவர்கள். மற்றயவர்கள் படிக்கவும் குடும்ப அங்கத்தவர்களைச் சந்திக்கவும் வெளிநாடு போவதற்கும் என்று வந்தவர்கள். இந்த 500 பேரும் எட்டு பஸ்களில் கிளங்கடுக்கியதுபோல அடுக்கி அனுப்பப் பட்டார்கள். இதில் 3 பஸ் வவுனியாவுக்கும் 5 பஸ் மட்டக்களப்புக்கும் அனுப்பப் பட்டன. விடுதி நடாத்துவோருக்கு தமிழர்களை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது என்று கடும் கட்டளை பிறப்பிக்கப் பட்டது.

அன்றயதினமே திரு மனோ கணேசன் பாராளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். உலகத்தலைவர்கள் எல்லோரும் இதை ஆட்சேபித்தனர். ஜே.வி.பியினர் இதற்கு எதிராகப் பகீரதப் பிரச்சாரங்களைச் செய்ததின் பேரில் இத்தமிழர்கள் மீண்டும் விடுதிகளுக்குக் கொணரப் பட்டனர். ராஜபக்ஸவின் நிறைவேற்று அதிகார ஆட்சியின் லட்சணம் இதுவாகும்.

1970 தில் அப்பொழுதுதான் முதன்முதலாகப் பாரளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்ஸ மொழிமூலத் தரப் படுத்தலை ஆதரித்து வாக்களித்தார்.

1972 இல் புதிய அரசியல் சட்டம் வந்தபொழுது தமிழ்மக்களை இரணடாந்தரப் பிரையையாக்கி இலங்கையில் மதசமத்துவ முறையை நீக்கி புத்தசமயத்தை அரசமதமாக்கிய சட்டத்தை ராஜபக்ஸ உற்சாகத்தோடு ஆதரித்தார்.

1976 நடுப்பகுதியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக் குண்டர்களும் காடையர்களும் தோட்டப் பிரதேசங்களில் உள்ள தமிழர்களைப் பலாத்காரமாக இந்தியாவுக்கு அனுப்பும் திட்டமாக பத்தனை டெல்லரா சங்குவாரி புஸ்சல்லாவை மற்றும் அதைச் சூழவுள்ள தோட்டங்களைக் குண்டுவைத்தும் தீவைத்தும் தகர்த்தனர். பத்தனைத்தோட்டத்தில் சிவனு லட்சுமணன் என்ற தோட்டத்தொழிலாளி கொல்லப்பட்டார். அன்று பாராளுமன்றத்தில் பேசிய பீற்றக் கெனமன் தோட்டப் பிரதேசங்கள் முன்னொருகாலத்தில் இத்தாலிய நகரமான பொம்பய் எரிமலைக் குமறலால் நாசமாகியது போலக் காட்சியளிக்கிறது என்று பேசினார்.

இத்தனைக்கும் ராஜபக்ஸவும் மற்றய சிறீலங்கா சுதந்திரக் கட்சிக் காரர்களும் தாம் சிறிமா லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துகிறோம் என்றனர். தமிழர்கள் நிர்க்கதியாக சிங்கள இனவாதத்தின் கீழ் நசுக்கப்பட்ட ஒரு தருணத்திலாவது மகிந்தா ராஜபக்ஸ்ச வாய்திறந்ததற்கான எந்தப் பதிவுகளும் கிடையாது.

வடகீழ்மாகாணத்தை உச்சநீதி மன்றத் தீர்பால் பிரித்தபொழுது அந்தப் பழி ஜேவிபியிலேயே சுமத்தப்பட்டது. அதன் சூத்திரதாரி தான் என்பதை இறுமாப்போடு இன்று கூறுகின்றார்.

உச்சியில் இருந்த இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கனடியன் போஸட் பத்திரிகைக்கு இலங்கை சிங்களவர்களின் நாடென்றும் தமிழர்கள் கேட்கக் கூடாத கோரிக்கையைக் கோரக்கூடாது என்றும் கூறியபொழுது நாட்டின் ஜனாதிபதியான ராஜபக்ஸ ஒரு சின்ன எதிர்ப்பைத் தன்னும் தெரிவித்தது கிடையாது. இன்றுவரை ராஜபக்ஸவின் வாயால் அது தவறென்று கூறப்படவில்லை.

இலங்கை சிங்களவரின் நாடென்று பொன்சேகா ம்ட்டும்கூறவில்லை. நூற்றுக் கணக்கான சரித்திரப் புத்தகங்கள் அப்படித்தான் இலங்கையில் எழுதப் பட்டுள்ளன. அப்படிச் சொல்லித்தான் இலங்கையில் இனவாதம் இந்தமட்டத்திற்கு வளர்க்கப்பட்டு இவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கடைகெட்ட ஹெல உரிமையவையும் வீரவன்ச கும்பலையும் எதிர்க்கும் தமிழர்கள் ராஜபக்ஸ கடைகெட்டதும் ஒருநாளும் திருத்தவே முடியாத இனவாதி என்பதை வெகு சீக்கிரத்தில் கண்டு கொள்வர். ஓருகாலத்தில் பிரபாகரனை முருகனுக்கு நிகரானவர் என்று புழுகிய தமிழ்க் கும்பல்கள் இன்று ராஜபக்ஸவைப் புழுகு புழுகென்று புழுகுவதைக் கேட்டால் தலை வெடிக்கிறது. அவரது வீரப்பிதாபங்களை புழுகும் புதிய புறநாநூற்றில் ராஜபக்ஸ்ச சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை என்பதே முதன்மையானது.

இவர்கள் ஒரேயொரு கேள்விக்கு விடையளிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஏதோ புலியை மேற்கு நாடுகளெல்லாம் கண் மூடித்தனமாக ஆதரிப்பதாகக் கூறிய இவர்களால் ஏன் இந்த ஏகாதிபத்திய நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை என்ற கேள்வியைக் கேட்கவில்லை.

குறேசியாவை கொசோவாவை பொஸ்னியனை கிழக்குத்திமோரை எல்லாம் தனித்த தேசங்களாக அங்கீகரித்த இந்த மேற்கு நாடுகள் ஏன் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை?

மேற்கு நாடுகளும் சேர்ந்தே புலிகளை ஒடுக்கினார்கள் என்பதை விளங்காத அசடுகள் ஏதோ ராஜபக்ஸ வெளிநாடுகளின் நெருக்குவாரங்களுக்கு அடிபணியவில்லை என்று புதிய புழுகுகளைப் அள்ளி வீசுகிறார்கள். ஏன் யூகோஸ்லாவியாவின் பழைய ஜனாதிபதி மிலோசவிச்சை யூகோஸ்லாவியாவிலிருந்து கடத்தி வந்தது போலவா கேபியையும் சட்டவிரோதமாக இலங்கை அரசு கடத்தி வந்தது? கேபி இப்பொழுதுதான் பிடிபட்டாரா அல்லது தாய்லாந்தில் அடைக்கப் பட்டு விடுபட்ட நாளிலிருந்து இந்த மேற்கு நாடுகளோடும் சேர்ந்து புலியை அழிப்பதற்கு ஒத்தாசை வழங்கினாரா என்ற ஆயிரம் கேள்விகளுக்கு இப்பொழுது விடைகள் கிடைத்துக் கொண்டிருக்கும் காலங்களில் ராஜபக்ஸவும் இந்த மேற்கு நாடுகளும் சேர்ந்து ஆடும் நாடகங்கள் தெளிவற்றபோதும் இலங்கை மக்களுக்கு நன்றாகவே விளங்குகின்றன.

இலங்கை இனவாத அரசின் கேடுகெட்ட தன்மையைப் பின்வரும் செயற்பாட்டால் அறியலாம். கடந்த போரில் அரசபடையைச் சேர்ந்தோர் கொல்லப் பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு பூணர பென்சனை அரசாங்கம் வளங்குகிறது. இந்தப் பென்சன் நிதி செத்தவருக்கு 55 வயதுவரைக்கும் இருக்கிறது.

பரிதாபம் என்னவெனில் இலங்கை அரசோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ்ப் போராளிகள் புலியை அழிப்பதிலே பங்கெடுத்து இறந்தார்கள். வலது குறைந்தவர்கள் ஆனார்கள். அவர்களது குடும்பங்கள் பிச்சை எடுக்கின்றன. சில கணவனைப் பறிகொடுத்த தமிழ்ப் பெண்கள் தங்களது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இலங்கைத்தேசம் மனிதாபிமானத் தேசமாக விளங்குகிறது. தமிழ்ப்போராளிகளை பாவித்துவிட்டு கறிவேப்பிலைபோல் எறிந்துகொண்டிருக்கும் இந்த இனவாதிகளையெல்லாம் புழுகிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் கும்பலே நாளைய தமிழர்களின் அவலவாழ்வுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும்பொழுது அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் புலி தோற்கடிக்கப் பட்டபின் இந்த இனவாத அரசாங்கத்தைத் தோற்கடித்து இனவாதமும் நிறைவேற்று அதிகாரசர்வாதிகாரமும் கெட்டியாகவிடாமற் பண்ணும் அரசியலைச் செய்யாமல் ராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்டால் தங்களுக்குள்ள அரசாங்க செல்வாக்கு அற்றுப் போகும் என்ற காரணத்திற்காக ராஜபக்ஸவை மீண்டும் ஆதரித்து வரலாறு உள்ளவும் சர்வாதிகாரத்தையும் இராணுவ ஆட்சியையும் நீடிக்கவைக்க முனைகிறார்கள்.

உலகத்தில் எங்கும் இல்லாதவாறு இலங்கையிற்தான் ஓர் இராணுவ சிப்பாய் ஒரு பொறியியலாளரைவிடவோ அல்லது வைத்திய கலாநிதியைவிடவோ கூடிய சம்பளத்தைப் பெறும் மட்டத்திற்கு இலங்கை அரசாங்கமானது இராணுவத்தில் தங்கியுள்ளது.

தமிழ் மக்கள் இலங்கையில் உள்ள அரச ஆட்சிமுறையைக் கெட்டியாகவிடாமற் சிதறடித்துக் குலுக்கித்தள்ள வேண்டுமானால் கட்டாயம் ஆட்சிமாற்றம் வேண்டும். இந்த ஒரு அரிய சந்தர்ப்பத்தை இன்றய தேர்தல் தந்திருக்கிறது என்பதை உணர்ந்து ஆட்சிமாற்றமானது ஜனனாயகத்தை அடைவதற்கான முதற்படியாகும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com