இலங்கை தமிழரை வெளியேற்றும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
விசா காலம் முடிந்ததால், இலங்கை தமிழர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயந்தன் பிரதாபன் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு
சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். ஈரோடு அகதிகள் முகாமில் தன் பெயரை பதிவு செய்து கொண்டு, ‘முகாமில் இல்லாத அகதி’ என்று சான்றிதழ் பெற்றார். பின்னர் அவர் ஈரோட்டில் வசித்தார்.
இவரது விசா காலம் கடந்த டிசம்பருடன் முடிந்தது. இதனால், இந்தாண்டு டிசம்பர் வரை தனது விசா காலத்தை நீட்டித்து தருமாறு ஜெயந்தன் பிரதாபன் மத்திய உள்துறை அமைச்சத்துக்கு மனு செய்தார். இந்த மனுவை நிராகரித்து, இந்தியாவை விட்டு வெளியேற ஜெயந்தனுக்கு அமைச்சகம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ‘என் மீது எந்த கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். எனவே, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து, “மனுதாரர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். 2 வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment