Friday, January 8, 2010

தமிழர்கள் கொலை உண்மை: ஐ.நா.

ராணுவ வீரர்கள், தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும், கைகளையும் கட்டி வைத்து பின்னால் இருந்தபடி கொடூரமாக சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே, நம்பகமானதே என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் தமிழர்கள் சிலரை, இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற வீடியோ டேப் இங்கிலாந்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் ஒளிபரப்பப்பட்டது.

இது உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோ டேப்பின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஐ.நா., குழு, அந்த வீடியோ டேப் உண்மையானதே என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா., அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன், வீடியோ டேப் உண்மை என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போரின் போது இருதரப்பிலும் நடைபெற்ற இதுபோன்ற காட்டுமிராண்டி தனமாக செயல்கள் குறித்து விசாரிக்க, சுதந்திரமான அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டு உலகை அதிர வைத்தது. ஹிட்லர் காலத்தை விட மிக மோசமான கொடூரமான இந்த இனப்படுகொலை அனைவரின் உள்ளங்களையும் பதறடித்தது.

பிலிப் ஆல்ஸ்டன்

இந்த நிலையில் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை, அதன் உண்மைத்தன்மை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த பிலிப் ஆல்ஸ்டன் விசாரணை நடத்தி வந்தார். பிலிப் ஆல்ஸ்டன், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், தண்டனைகள் குறித்த விசாரணையாளராக உள்ளார். தற்போது தனது விசாரணையை முடித்துள்ள ஆல்ஸ்ட்ன் அறிக்கையை ஐ.நா.விடம் ஒப்படைத்துள்ளார். அதை ஐ.நா. இன்று வெளியிடுகிறது.

விசாரணை அறிக்கை குறித்து ஆல்ஸ்டன் கூறுகையில், தமிழர்களை இலங்கை வீரர்கள் சுட்டுக் கொன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே, நம்பகமானதே. உடனடியாக இதுகுறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இனியும் இதில் காலதாமதம் இருக்கக் கூடாது.

யார் இந்த விசாரணையை நடத்துவது என்பது குறித்து நான் கூற முடியாது. ஆனால் நிச்சயம் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

தனது விசாரணை குறித்து ஆல்ஸ்டன் மேலும் கூறுகையில், 3 தடயவியல் நிபுணர்களின் உழைப்பின் மூலம் கொடூரக் கொலைகள் அடங்கிய வீடியோ உண்மையானதே என்பதை கண்டறிந்துள்ளோம்.

இந்த வீடியோ பொய்யானது, திரிக்கப்பட்டது, புனையப்பட்டது என்று இலங்கைத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொன்ன அனைத்துமே உண்மை இல்லை என்பதை எங்களது விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

இந்த வீடியோ கடந்த 2009, ஜனவரி மாதம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் கேமரா மூலம் இது படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வரும் காட்சிகளும், அதில் இடம் பெறும் துப்பாக்கிகளும் உண்மையானவையே. இதை அமெரிக்காவைச் சேர்ந்த 3 தடயவியல் நிபுணர்களும் உறுதிப்படுத்துள்ளனர். இந்த வீடியோவில் மிக நெருக்கத்தில் வைத்து இருவர் சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் உண்மையானதே. அதில் எந்த திரிபும் இல்லை.

இருப்பினும் வீடியோவில் உள்ள சில காட்சிகள் குறித்து புரியவில்லை. ஆனால் இதை வைத்து இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள காட்சிகள் அனைத்தும் உண்மையானவையே என்றார்.

மார்ட்டின் நெசிர்கி

ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி இதுகுறித்துக் கூறுகையில், நிச்சயம் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன்.

சுயேச்சையான, சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மைகளை நாம் கண்டறிய முடியும். மனித உரிமை மீறல்கள், சர்வதே சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நிச்சயம் தண்டிக்க வேண்டும். தற்போது இந்த வீடியோ உண்மை என்று தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்து விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டியது அவசியம் என்றார்.

தற்போது சேனல் 4 டிவி வெளியிட்ட வீடியோ உண்மையானதே என்று தெரிய வந்துள்ளதால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஐ.நா. சபையும் போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. (டிஎன்எஸ்

No comments:

Post a Comment