Friday, January 15, 2010

யா(ஆ)னைக்கும் அடி சறுக்கும் -கிழக்கான் ஆதம்-

இலங்கையில் இதுவரை காலமும் புரையோடிப்போயிருந்த யுத்தம் என்ற அரக்கண் கொன்றொழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது (பெயரளவிலான) ஜனநாயகத் தேர்தல் இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலாகும். வருகின்ற ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள இத்தேர்தல் எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் உரிமை, பாதுகாப்பு என்பதில் முக்கிய இடத்தினை வகிக்கப்போகும் சிறுபான்மையினருக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் மிக முக்கிய மயில்கல்லாக அமையப்போகின்றது.

இந்த மிகச் சூடான தேர்தல் களத்தில் பிரதான இடத்தில் இரண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் வாக்குகளாக இலங்கைச் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. ஆனால் அவர்களில் யார் சிறுபான்மை தமிழ், முஸ்லீம், மலையக மக்களினால் ஆதரிக்கப்பட்டாலும் ஏன் ஆதரிக்கின்றோம் என்று தெரியாமல் நாம் ஆதரிப்பதுதான் மனதுக்கு வேதனையைத் தருகின்றது.

தமிழில் தற்போது இலங்கையில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் ஊடகங்கள் அனைத்தும் தங்களின் விருப்பதற்திற்கேற்ப ஒரு வேட்பாளரை அல்லது கட்சியை ஆதரித்துத்தான் விளம்பரங்கள் மற்றும் செய்திகள் வெளியிடுகின்றன பெரிய ஊடகங்களிலிருந்து தொடங்கி சிறிய இணையத்தளங்கள் வரை இந்த பாரபட்சம் தொடர்வது தமிழரின் துரதிஸ்டம் என்றே சொல்லவேண்டும்.

ஊடகங்கள் என்பது மக்களின் ஊணர்வுகளை மாற்றியமைப்பதில் இன்றியமையாத பங்களிப்பைச் செய்கின்றது ஆனால் இத்தகைய ஊடகங்கள் உண்மையில் இலங்கையைப் பொறுத்தவரை நடுநிலையாக செயற்பட்டு உண்மையை பக்கம்சாராது எடுத்து மக்களிடம் சேர்கின்றனவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்! நடுநிலையான ஊடகங்களுக்கு இலங்யைல் பஞ்சமே காலா காலமாக இருந்து வருகின்றது இந்த நிலையினால் தமிழர்கள் சரியான முடிவுகளை எடுப்பதில் அல்லது அவர்கள் சரியாகச் சிந்திப்பதில் சறுக்கல் நிலை காணப்படுகின்றது.

ஊடகங்கள் இப்படி என்றால் அரசியல்வாதிகளைச் சொல்லவா வேண்டும்? வீதியில் நின்று கூடிக்கதைத்துக் கொண்டிருக்கும் மக்களின் பேச்சைக் கேட்டு கட்சி மாறிக் கொண்டிருக்கிறார்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் இவர்கள் அடிபட்டுத் திரிவதை பார்க்கும் போது தமிழர்களின் தலைவிதியை நொந்துகொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும்?

இவர்களின் அரசியல் நாகரீகம் எப்படி இருக்கின்றது என்பதற்கு அண்மையில் நான் அவதானித்த ஒரு விடயம் நல்லதொரு உதாரணம். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையின் வட கிழக்கில் கடும் மழை பெய்தது தற்போது ஒய்ந்துள்ளது.

அதனால் கிழக்கில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் அதிகமானவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்திருந்தது எல்லோரும் சாப்பாட்டிக்கு கஸ்டப்பட்டனர். எந்த நிவாரணமும் சில பகுதிகளில் சில குடும்பங்களுக்கு சமைத்த உணவு பார்சல்கள் வழங்கப்பட்டதை தவிர வழங்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அவ்வளவு மக்களுக்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது போன்று பிரச்சாரப்படுத்தப்பட்டது.

நிவாரணம் என்ற ஒன்றே கடந்த இரண்டு வாரங்களாகத்தான் இரண்டு தொடக்கம் மூன்றுபேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 375 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்களில் தொடங்கி (ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு மேலுள்ளதே 375 து எதற்குப் போதும் என்று நீங்கள் கேட்க்கக் கூடாது) மேலதிகமாக உள்ள ஒரு குடும்ப உறுப்பினருக்கு 100 ரூபாய் வீதம் அதரிகத்து ஆகக் கூடிய உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு 575 ரூபாய் பெறுமதியாக பொருட்கள் (பெயருக்கு) வழங்கப்பட்டன என்பதே உண்மை. அரசிடம் மக்களுக்கு நிவாரணம் வழங்க போதியளவு பணமில்லை.

ஆனால் இந்த மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் தவிக்கின்ற காலப்பகுதியில் அதாவது கடந்த மாதம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததினால் வட கிழக்கில் விசேடமாக கிழக்கில் அடிக்கடி அரசியல் பிரமுகவர்கள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் இந்நாள் அமைச்சர்கள் மற்றும் மகாணசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் அனைவரும் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பவனி வந்தனர் வருகின்றனர்

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு பிள்ளை பசி தாங்க முடியாமல் வீதிக் கதவோரம் தனது தகப்பன் ஏதாவது சாப்பாட்டிக்கு வாங்கி வருவான் என்று கொட்டும் மழையில் அரைவாசி நனைந்தவண்ணம் தனது ஓட்டைக்குடையில் காத்திருக்கிறது. ஒரு விதவைத்தாய் உதவுவார் யாருமில்லாத நிலையில் தனது பிள்ளைகளின் பசியைப் போக்கிட பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் தெரிந்தவர்களிடமும் ஒரு சுண்டு அரிசியை கடன்வாங்கும் போராட்டத்தில் முழுமையாக நனைந்து வீதியில் ஒடித்திரிகிறாள்.

ஒரு ஓட்டு வீட்டுத் தாய் வீடு முழுவதும் வெள்ளத்தால் நிரம்பியதால் கட்டிலிக்குமேலும் பெட்டிகளிலும் மற்றும் டயர்களைப் போட்டும் தனது பிள்ளைகளை ஒருவர் மாறி ஒருவராக உறங்கவைத்து விழித்திருக்கின்றார்.

இந்த போராட்டத்திற்கு மத்தியில் வீதியெங்கும் வெடியோசை,,, காதைக் கிழிக்கிறது என்ன? ஊரில் மீண்டும் வெடிச்சத்தம் ஒரு நிமிடம் அப்படியே உரைந்துவிட்டனர் மக்கள் மழையையும் தண்ணீரையும் பொறுற்படுத்தாமல் வெளியில் ஓடிவந்து பார்த்தால்,

மகாணசபை உறுப்பினர் முஸ்லீம் காங்கிரஸின் போராளி! ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த மகன் வெள்ளம் பார்க்க வருகிறார்! கிழக்கின் முதலமைச்சர் பிள்ளை உள்ளம் கொண்டவர் வருகின்றார்! கிழக்கு மக்களுக்கு விடிவை ஏட்படுத்திய கருணா மூர்த்தி வருகின்றார் கிழக்கின் போராளிகளைப் பாதுகாத்த அவர்களை புலிகளின் பிடியிலிருந்து தப்பிக்க வைத்த தயாளர் வருகிறார்! 10 அமைச்சுக்களை தன்னிடம் வைத்துள்ள கிழக்கு மகாணசபை அமைச்சர் வருகின்றார்! காத்தான்குடியை சுவர்கபதியாக்குகின்ற சேவைகளின் செம்மல் வருகின்றார்! தேசிய காங்கிரஸின் அமைச்சர் வருகின்றார்! அமைப்பாளர் வருகின்றார்! தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் வருகின்றார்!

“யார் கேட்டது உங்களை வரச்சொல்லி! மக்கள் படும் கஸ்டத்துக்குள் பகலிலேயே பிள்ளைகள் கொஞ்சம் மழை ஓய்ந்துள்ள சமயம் தூங்கும்போது பட்டாசு வெடிக்கச் சொல்லி யார் சொன்னது! மக்களுக்கு உண்ண உணவில்லை உங்களுக்கு வீதியங்கும் பட்டாசு வெடி கேட்கிறதா? எங்கே கற்றீர்கள் இந்த நாகரீகத்தை! இது என்ன செயல்! மக்கள் சாப்பாட்டிக்கு கஸ்டப்படும்போது மக்களின் பணத்தில் சோகுசு வாகனத்தில் வளம் வரும் உங்களுக்கு அதிகம் கொழுப்புத்தான். சீ.. தூ நாயே!” என்று தன்னால் ஆன எதிர்ப்பை வீதியோரத்தில் தெரிவித்தார் ஒரு பெரியவர். இவர்கள் எல்லாம் பட்டாசு வாங்கிய பணத்தில் மக்களுக்கு பான் வாங்கிக் கொடுத்திருந்தால்கூட நாளை இவர்களின் கூட்டு காப்பாற்றப்படும்.

இத்தகைய செயல்களும் அங்காங்கே இந்த அரசியல் வாதிகளின் எடுபிடிகளால் பிரயோகிக்கப்படும் அடாவடித்தனங்களும் சட்டம் இவர்களுக்கு ஒன்றும் செய்யமுடியாமல் மௌனியாயிருப்பதும் இலங்கையில் எதிர்வரும் தேர்தலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்பலாம்.

காரணம் அநியாயம் செய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படாமல்போகும் போதெல்லாம் அந்த பிரதேசமக்கள் அந்த அநியாயத்திற்கு எதிராக ஒன்றுதிரள்கின்றனர் இந்த அடாவடித்தனக்காரர்கள் கட்டுப்படுத்தப்படாதவரை அவர்கள் சார்ந்த பிரதான வேட்பாளர் தனக்கிருக்கும் ஆதரவினை இவர்களால் உண்மையில் எதிர்வரும் தேர்தலில் இழப்பார் என்பது திண்ணம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை மக்களுக்கு பிரதான வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகா மீதான விருப்பு, வெறுப்பு என்பதை விட இவர்களின் ஏஜென்டுகளாக அந்தந்தப் பிரதேசங்களின் செயற்படும் பிரமுகவர்கள் தான் இவர்களில் யார் வெற்றியடைவார் என்பதை தீர்மானிக்கப்போகின்றார்கள்.

இதில் சிலர் அடாவடித்தனங்கள் மறைமுக அச்சுறுத்தல்களை மக்களுக்கு விடுக்கின்றபோது அல்லது ஒரு குழுவினருக்கு அநியாயமாக தாக்குகின்றபோது இதனை பார்த்து பரிதாபப்படுகின்ற மக்கள் தங்கள் ஆதரவினை மாற்றிக் கொள்கின்றனர்.

இலங்கையில் நிலவும் தற்போதைய நிலைமைகளை நோக்கும்போது இங்கே அதிகப்படியான பலப்பிரயோகங்கள் அந்தந்த பிரதேசத்தை ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக பிரதிநிதித்படுத்துபவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. இது சிறிய தாக்குதல்களில் தொடங்கி பெரிய கொலை வரை சென்று கொண்டிருக்கின்றது நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட கொழும்பில் ஒரு தாக்குதல் நடை பெற்றிருக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகளை தற்போது சகல மக்களும் வெறுக்கின்றனர் இத்தகைய செயல்களை அதிகமாகச் செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அல்லது அந்த பிரதேச தாதாக்கள் அடக்கியொடுக்கப்படவேண்டும் என நினைப்பதைக் காணமுடிகின்றது எனவே இவர்களின் இத்தகைய செயல்களால் பிரதான வேட்பாளர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவுத் தளங்களில் இழப்பை ஏற்படுத்தப் போகின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தற்போதைய இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் கருத்தினை மட்டுமே சிறுபான்மையினர் குறித்து வெளியிட்டுள்ளனர் எவரும் சரியான உறுதியான தீர்வுத்திட்டம் அல்லது அதிகாரப்பகிர்வு பற்றி உறுதியளிக்கவில்லை.

இந்நிலையில் சாதாரண இலங்கை சிறுபான்மை மக்களின் அபிப்பிராயம் “யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று நொந்து கொள்வதாகவே இருக்கின்றது. அப்படியானால் அவர்களின் பெரும்பான்மை வாக்குகள் யாருக்கு கிடைக்கும்? இந்த கேள்விக்கு விடையாக அமையப்போவது அந்தந்த பிரதேசத்தை அந்த வேட்பாளருக்காக பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்களின் செயற்பாடுகளாகவே இருக்கின்றது.

வட கிழக்கில் தற்போது ஆட்சியில் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல் வாதிகளை மக்கள் வெறுக்கின்றனர் போலவே தெரிகின்றது. காரணம் இவர்கள் செய்த பாரிய பிழைகளையும் தவறுகளையும் குத்துக்கரணங்களையும் மக்கள் சுட்டிக் காட்டுவதுடன் இவர்களின் அதிகாரங்கள் கொட்டங்கள் அடக்கப்படவேண்டும் என பேசப்படுவதை பரவலாகக் காணமுடிகின்றது. குறிப்பாக சிலரை எந்தக் காரணமும் கூறாமலே மக்கள் வெறுக்கின்றனர் இந்த வெறுப்பே பிரதான வெட்பாளர்மீதான வெறுப்பாக மாறிவருகின்றது இதற்குக் காரணம் அவர்கள் சிலவேளைகளில் மக்கள் மீது தங்கள் அதிகாரப்பலங்களை பிரயோகிக்கும்போது அதை சட்டம் கண்டு கொள்ளாமல் இருந்ததாக இருக்கலாம். கிழக்கில் பல மகாண மத்திய அமைச்சர்களின் கடந்தகால செயற்பாடுகளை நேரடியாக விமர்சிக்கும் மக்கள் அவர்களை எதிர்பதற்காகவே பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனர்.

விசேடமாக வடக்கைப் பற்றி கூறுவதானால் வடக்கில் வசிக்கும் முஸ்லீங்கள் அல்லது வடக்கைச் சேர்ந்த முஸ்லீம்கள் முஸ்லீம் அமைச்சரின் கீழ் ஒன்றிணைந்து வாக்களிக்க தாயாராவதாக தெரிகின்றது. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் அரசின் வடக்கில் அதிகாரமுடைய தமிழ் அமைச்சரை பெரும்பான்மையானவர்கள் வெறுப்பதாகத் தெரிகின்றது. காரணம் அவரின் ஆயுதக் குழு ஒன்று மக்களை தற்போதும் அச்சுருத்துவதாக அங்கு சென்றபோது அறிய முடிந்தது. இதனால் வடக்கு மக்களின் பெரும்பான்மையான ஆதரவு அரசுக்கு எதிராக கிடைக்கும் வாய்ப்புக்களே உள்ளன. கிழக்கிலும் தற்போதுவரை அவ்வாறான நிலைமைதான் உள்ளது. பரவலாக நல்ல ஆதரவு எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு உள்ளது இது பெருகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதற்குக் காரணம் அரச தரப்பை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் மேற்கொள்ளும் அதிகார துஸ்பிரயோகம் என்று பரவலாக மக்கள் கருதுகின்றனர். அப்படியானால் ஜனாதிபதி தோல்வியைத் தழுவுவாரா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! பொது வேட்பாளர் மீதான அக்கரையும் பிரச்சாரமும் இன்னமும் பெரும்பான்மை சிங்கள மக்களின் பட்டி தொட்டிகளை எல்லாம் சென்றடையவில்லை! இன்னும் ஆளும் கட்சியின் ஜனாதிபதியே அவர்களின் ஹிரோ! குறிப்பாக கிராம மக்கள் இவர்களே அதிகமாக வாக்களிப்பவர்களாவும் அதிகமான வாக்காளர்களாகவும் உள்ளனர். இவர்களிடம் பொது வேட்பாளர் சென்றடைய சில தடைகளும் சில காலமும் தேவையாக உள்ளது.

இதனால் சிறுபான்மையினரிடன் குறைகின்ற வாக்குகளை ஜனாதிபதிக்கு நிரப்பும் அளவுக்கு பொது வேட்பாளரைவிட ஜனாதிபதிக்கு பெரும்பான்மை மக்களிடம் ஆரவு கூடுதலாக உள்ளது என்பதே உண்மை. அதே நேரம் கணிசமான சிறுபான்மையினரின் ஆதரவும் ஜனாதிபதிக்கு உள்ளது. இதனால் சிறுபான்மையினரில் ஜனாதிபதிக்கு இருக்கும் கணிசமான ஆதரவும் பெரும்பான்மை மக்களின் சிறப்பான ஆதரவையும் சேர்த்து நோக்கினால் இன்றுவரை ஜனாதிபதியே முன்னிலையில் இருக்கிறார் எனலாம்.

ஆனால் அரசின் சார்பாக செயற்படும் சிலர் பிரயோகிக்கும் அடாவடித்தனங்களால் அந்தந்தப் பிரதேசங்களில் மக்களின் உடைமைகளும் சிலவேளை உயிர்களும் பறிக்கப்படுகின்றன. இவ்வாறு நிலவும் தேர்தல் வன்முறைகளினால் அந்த மக்களின் உள்ளங்களில் மாற்றங்கள் ஏற்பட சாத்தியமும் நிறையவே உள்ளது.

இதனையெல்லாம் தொகுத்து நோக்குகின்றபோது யார் தேர்தலில் வென்றாலும் அவர்கள் பெரும்பான்மை ஆதரவுடன் வெல்வது கடினமாகவே இருக்கப்போகின்றது. இதனால் வெல்லும் ஜனாதிபதி சிறுபான்மையினர் தொடர்பான சரியான தீர்வை முன்வைக்க சுதந்திரமான ஸ்திரமான பலத்தையுடையவராக இருக்கப்போவதில்லை.

இதனால் தமிழர் பிரதேசங்களில் பிள்ளைபிடிகாரர்களின் அட்டகாசமும் அதிகாரமும் தொடர்கதையாகவே அமையலாம் காரணம் சிறுபான்மை தரப்பாகிய நாம் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புக்களிலும் சுய நலத்திற்காகவும் தேர்தலை நாம் பாவிப்போமானால் நம் தலைவிதியை யாரும் மாற்ற முடியாது.

தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அரசியில் வாதிகள் என்ற குள்ளநரிகளுக்கு பின்னால் செல்லாமல் சுயமாக சிந்திப்போமானால் கணிசமான சிறுபான்மையினரின் வாக்குகள் ஒரு தரப்பை பிரிந்துவிடாமல் பலப்படுத்துமானால் நிச்சயம் சிறுபான்மையினருக்கு விடிவு உண்டு. அந்த ஆதரவைக் காட்டி அவர்களிடன் உரிமைகளை கேட்டுப்பெறும் பலத்தினை நாம்பெறுவோம்.

வெறுமனே வாய்வீச்சில் வல்லவர்களான அரசியல்வாதிகளின் பின்னால் சென்றோமானால் அவர்கள் மக்கள் தொடர்ந்தும் எங்களை ஆதரிக்கின்றார்கள் என்று அவர்களின் பித்தலாட்டங்கள் தொடரவே செய்யும்.

இந்த தேர்தலில் பல முக்கிய விடயங்கள் சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும், சர்வதேசத்திற்கும் ஏனையவர்களுக்கும் உணர்த்தப்படப்போகின்றன.

இன்னும் சில முக்கிய அனுமானங்கள் நியாயங்களும் சிறுபான்மை தரப்பின் கண்ணீர்கலந்த உண்மைகளும் உண்டு அவை அனைத்தையும் எழுதி சிறுபான்மை சமூகத்தை விழிப்படையச் செய்யவே நினைக்கின்றேன் ஆனால் அந்த அளவுக்கு இலங்கையில் ஊடகதுறையினருக்கும் எழுத்தாளர்களுக்கும் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை.

யா(ஆ)னைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com