Friday, January 22, 2010

த.தே.கூட்டமைப்பு மீது சீறிப்பாய்கின்றார் காங்கிரஸ் கட்சியின் ஆர். அன்பரசு

இலங்கை அரசியலுக்குள் இந்தியாவை கூட்டமைப்பு தான் இழுத்துவிடுகிறதாம்
சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் இந்தியாவை இழுத்து விடும் வெளித் தெரியாத பரப்புரை ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது இந்திய அரசியல்வாதிகளில் ஒருவரான அன்பரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.அன்பரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடக்க இருக்கும் அரச தலைவர் தேர்தலில் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்தியா ஆதரவு வழங்குவதாகப் பொய்யான உறுதிமொழிகளைக் கூறுவதன் மூலம் சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் இந்தியாவை இழுத்து விடும் வெளித் தெரியாத பரப்புரை ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய நால்வரும் கடந்த வாரம் புதுடில்லி வந்திருந்தனர்.

அரசியல் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காகத் தங்களை இந்தியாவே அழைத்திருந்தது என்று அவர்கள் நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

தங்களது பயணத்தின் முடிவில், கூட்டமைப்பின் முதன்மையான உறுப்பினர்களில் ஒருவரான மாவை சேனாதிராசா ‘உதயன்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், எதிர்வரும் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவை இந்தியா ஆதரித்தது எனக் கூறி இருந்தார்.

இந்தச் செய்தி சிறிலங்காவில் பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்திய அரச தலைவர்களுடன் அவசர பேச்சுக்களை நடத்துவதற்காகத் தாங்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா புறப்படுவதற்கு முன்னதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

என்னுடைய தேடல்களின்படி, அப்படி எந்தவொரு உத்தியோகபூர்வ அழைப்பும் இந்தியாவிடம் இருந்து கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

அத்தகைய அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்பதை வெளிவிவகார அமைச்சரின் அலுவலகமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் உறுதிப்படுத்தி உள்ளன.

சிறிலங்காவிலுள்ள தமிழ் ஊடகங்களின் அறிக்கைப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் புதுடில்லியில் வெள்விவகாரத் துறைச் செயலாளர் நிருபமா ராவையும் வேறு சில பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளையும் மட்டுமே சந்திக்க முடிந்துள்ளதாகத் தெரிகிறது.

இது தெரிவிக்கும் தகவல் என்னவென்றால், வழக்கமாக சிறிலங்காவில் இருந்து வரும் தலைவர்களைக் கையாளும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவோ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனோ கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசவில்லை என்பதாகும்.

இந்தியாவினால் அவர்கள் அழைக்கப்படவில்லை என்பதை நிரூபிப்பதற்கு இது போதுமானது.

இந்தியாவின் ஆதரவு பொன்சேகாவுக்கே அதிகளவில் வேண்டி உள்ளதால் கூட்டமைப்பினர் சிலவேளை அவராலேயே புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடும்.

இந்தியாவுக்கான அவர்களின் பயணம் தமிழ் வாக்களர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தலாம் என்ற நோக்கம் அதற்குள் பொதிந்திருந்திருக்கலாம்.

சரத் பொன்சேகாவுக்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்து விட்டது என்று தமிழர்களை, குறிப்பாக இந்திய வம்சாவழித் தோட்டத் தமிழர்களை நம்ப வைக்கும் நோக்கத்துடன், பொன்சேகாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை இந்தியா ஆதரித்துள்ளது என ‘உதயன்’ பத்திரிகைக்கு மாவை சேனாதிராசா தவறான கருத்தை வழங்கி உள்ளார்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவின் நல்லெண்ணத்தை இழந்துவிட்டதனால், அவருக்குப் பதிலீடாகப் பொன்சேகா இருப்பார் என்பதை இந்தியா ஏற்றுகொண்டுள்ளது என அந்தப் நேர்காணலில் மாவை சேனாதிராசா குறிப்பாகக் கூறி உள்ளார்.

இறைமை உள்ள ஒரு நாட்டின் அரச தலைவர் தேர்தலில் தலையிட்டு வேட்பாளர்கள் இருவரில் ஒருவரை இந்தியா ஆதரிப்பதாகச் சொல்வதன் மூலம் சிறிலங்காவை இந்தியாவுடன் முரண்பட வைக்கும் நோக்கத்துடன் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தீய அரசியல் நகர்வு இது.

இந்தியா சிறிலங்காவுடன் சிறந்த அயலுறவைக் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்காவுடனான எமது உறவுகளை பாதிப்படையச் செய்ய விரும்புகிறார்கள் போன்று தோன்றுகின்றது.

சிறிலங்காவில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு ஒன்றைக் காண முயன்ற முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் பணியாற்றிய, தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி என்ற வகையில் கூட்டமைப்பினரினது இந்தத் தீய நோக்கத்தை மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டியது எனது கடமை.

மாவை சேனாதிராசாவின் இந்தத் தீய கருத்துக்களை, இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் வெளிவிவகாரத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

உத்தியோகபூர்வமான மறுப்பு ஒன்றை உடனடியாக விடுக்கும்படி அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். அத்துடன், சிறிலங்காவின் தற்போதைய அரசின் தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுந்துள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும்படியும் கோரி இருக்கிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலேயே கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள்தான் சிறிலங்கா வாழ் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்றும் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுப்பதற்குப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர்கள் உள்ளார்கள் என்று நம்பப்படுகின்றது.

பிரபாகரனையும் அவரது ஏனைய தலைவர்களையும் அழித்ததற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைப் பழிவாங்குவதற்காக சரத் பொன்சேகாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புலிகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கும் தோற்கடிக்கப்படுவதற்கும் இந்தியாவே காரணம் என்று புலிகளின் இன்றைய தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியொரு முறை இந்தியாவுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு ஆர்.அன்பரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment