Wednesday, January 27, 2010

ஜெனரல் கைது செய்யப்படுவாரா? பாதுகாப்பை உறுதிபடுத்த கோருகின்றது எதிர்க்கட்சிகள்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும் பல எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணி பிரமுகர்கள் தங்கியிருந்த சினமன் லேக் சைட் ஹோட்டல் நேற்றிரவு முதல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இச்சுற்றி வளைப்பானது எதிர்கட்சி பிரமுகர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மேலதிகபாதுகாப்பு நடவடிக்கையாகும் என அரச தரப்பினரால் கூறப்பட்டிருந்தது.

இச்சுற்றிவளைப்பு ஜெனரல் பொன்சேகாவை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்நடவடிக்கை என ஊடகங்களும் எதிர்கட்சிகளின் பிரமுகர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிந்த இராணுவத்தினர் பத்துபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜெனரல் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஜெனரலுடனிருந்த இராணுவத்திலிருந்து தப்பியோடிய 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் இராணுவப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் தங்கியுள்ள ஜெனரல் மற்றும் அவரது தேர்தல் பிரச்சாரப் பணிகள் தொடர்பான பேச்சாளராக செயல்பட்டுவந்த ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் சர்வதேச ஊடகவியாளர்களுடன் இன்று பேசிய போது தம்மை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் , அதன் அடிப்படையில் தாம் வெளியேறாதவாறு ஹோட்டல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், தமது உயிருக்கும் ஆபத்து நேரும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர் . ஆனால் மேற்படி குற்றச்சாட்டுக்களை அரச தரப்பினர் முற்றாக மறுத்துள்ளதுடன். ஜெனரலை கைது செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் அனைத்தும் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா தங்கியுள்ள ஹோட்டல் வளாகத்தில் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசினர். அங்கு பேசிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம், ஜெனரல் பொன்சேகாவுடன் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் உள்ளதாக அரசினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புக்காக தேர்தல் ஆணையாளரின் சிபார்சின் பேரில் அரசினால் வழங்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகளில் ஒரு தொகுதியினர் எனவும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment