Thursday, January 28, 2010

பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறுகின்றார்.

நடைபெற்று முடிந்துள்ள இலங்கையின் 6 வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகா நாட்டைவிட்டு வெளியேறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற்று முடிந்தவுடன் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்செயல்கள் வெடிக்காதவாறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்திருந்தமை இலங்கை தேர்தல்கள் வரலாற்றின் நடைமுறையாகும். ஆனால் இம்முறை நிலைமைகள் எவரும் எதிர்பராதவையாகவே அமைந்திருந்தது.

தேர்தல்கள் முடிவடைந்து சில மணிநேரங்களில் எதிர்கட்சிகளின் பிரமுகர்கள் அனைவரும் நாட்டின் மிகவும் அதியுயர் பாதுகாப்பு வலயம் ஒன்றில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். தாம் அவ்வாறு தங்கியிருந்தபோது இராணுவத்தின் விசேட படையணி ஒன்றினால் சுற்றி வழைக்கப்பட்டதுடன் தமது சுதந்திமான நடமாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டும் எதிரணியினர், தமக்கு ஆபத்து நேர்வதாக கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்தே தாம் இவ்வாறான பாதுகாப்பான இடமொன்றில் தங்கியிருந்தாகவும் தெரிவித்துள்ளளர்.

எதிரணிகளின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் அரச தரப்பினர், ஹோட்டலில் தங்கிருந்த ஜெனரல் பொன்சேகா தன்னுடன் 400 க்கும் மேற்பட்ட இராணுவத்திலிருந்து தப்பியோடியோரை தன்னுடன் வைத்திருந்து, அரசிற்கு எதிரான சதி ஒன்றினை செய்ய முற்பட்டதாக கூறுகின்றது. அத்துடன் அவருடன் இருந்த சில இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைளிலிருந்து நாட்டின் ஜனாதிபதியையும் வேறு சில முக்கியஸ்தர்களையும் கொன்று அரசின் முக்கியமான சில ஸ்தாபனங்களை கைப்பற்ற முயற்சி செய்திருந்மை தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் ஜெனரல் பொன்சேகா நாட்டின் ஜனாதிபதியை கொல்வதற்கு திட்டமிட்டிருந்தமை நிரூபிக்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும் , அவர் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகா மீதான மேற்படி குற்றச்சாட்டுக்கள் அவர் அரசியலில் குதிக்கின்றார் என்ற செய்தி வெளியாகிய அதே நிமிடத்திலேயே ஆரம்பமானது எனலாம். ஏன் தேர்தல் பிரச்சாரங்களில் கூட அவர் இராணுவ ஆட்சி ஒன்றுக்காக தயாராக இருக்கின்றார் என்ற செய்தி கிடைத்ததை அடுத்தே ஜனாதிபதி அவரை இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலக்கியதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன: அரசின் இக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்த ஜெனரல் பொன்சேகா தான் அவ்வாறு இராணுவ ஆட்சி ஒன்றினை மேற்கொள்வதாக இருந்திருந்தால் வன்னியிலிருந்து ஒரு படையணியை கொழும்புக்கு வரவழைத்து ஆட்கள் நித்திரையால் எழுவதற்கு முன்னர் காரியத்தை முடித்திருப்பேன் எனவும் அவ்வாறானதோர் தேவை தனக்கு இருந்திருக்கவில்லை எனவும் கூறியிருந்தமை நினைவுக்கு வருகின்றது.

சற்று நேரத்திற்கு முன்னர் ஊடகவியளார் மாநாட்டில் பேசிய ஜெனரல் பொன்சேகா, இராணுவ புரட்சி ஒன்றினை ஏற்படுத்துதற்கு திட்டமிட்டமிடுவதாக அரசினால் தன்மீது குற்றஞ்சுமத்தப்படுவதாக தெரிவித்த அவர், அவ்வாறு செய்வதானால் கொழும்பில் பிரதானமாக ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து செய்யமளவு கோமாளி என அரசு தன்னை கருதுகின்றதா என்ற கேள்வியை எழுப்பியதுடன், அவ்வாறு செய்வதானால் அதற்கு வியூகங்கள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் அரசு தனது விடயங்களில் முழு வெற்றியை தழுவியுள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் எதிர்கட்சிகளிடையே பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இன்று மக்களிடையே பேசப்படுகின்ற விடயமாக ஜெனரலின் கைதும் அவர் நாட்டை விட்டு வெளியேறுவாரா அன்றில் தொடர்ந்தும் இலங்கையில் இருப்பாரா என்றவிடயம் பேசுபொருளாக திசைதிருப்பப்பட்டுள்ளது

No comments:

Post a Comment