சிவாஜிலிங்கத்தின் சுயரூபம் வெளிருகின்றது. பிரபாகரனின் குடும்பம் துணை. -நகுலன்-
இலங்கைத் தமிழர் வரலாற்றில் எட்டப்பர் என்ற ஒரு பதம் உண்டு. பாரபட்சத்திற்கு எதிரான உரிமைப் போராட்டம் ஆயுதபோராட்டமாக உருவெடுத்தவேளை விடுதலைப் போராட்டதை ஆயுதக் குழுக்கள், மக்களை தாம் ஆழுவதற்கு வழங்கப்பட்ட ஆணையாக மாற்றியமைத்துக் கொண்டபோது, அதன் விளைவுகளை கண்டுகொண்ட தமிழர்களில் சிலர் இவ் அராஜககும்பல்களை முற்றாக எதிர்த்திருந்தனர். அவ்வாறு மக்கள் சார்பாக தமது எதிர்பை வெளிக்காட்டியவர்களையும் தமது காடேறித்தனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களையும் மற்றும் தனிப்பட்ட பகைவர்களையும் எத்தனையோ நொண்டிச்சாட்டுக்களை கூறிக் கொன்று குவித்துவிட்டு அவர்களுக்கு துரோகிகள் , எட்டப்பர் எனவும் பெயர் சூட்டிய வரலாறு யாவரும் அறிந்ததே.
ஆனால், எட்டப்பர் என்ற இந்தப்பெயர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் ஒருசிலரை தவிர முழுவருக்கும் பொருந்தும் எனலாம். காலாகலமாக ஆழும் அரசாங்கத்தின் வஞ்சக எண்ணங்களுக்கு எமது தமிழ் அரசியல்வாதிகளே செயல்வடிவம் கொடுத்து வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் இன்று இலங்கை அரசாங்கத்தின் முன் போர்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்ற நிலையில் , இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்கு வெளியே வாழ்வது ஆபத்து என கருதிய அரசாங்கம், இலங்கைக்கு வெளியே வாழ்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்குவரலாம், உங்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து தரப்படும் எனக் கூறியபோது முண்டியடித்துக்கொண்டு இலங்கைவந்து மஹிந்த முன் முட்டுக்காலில் நின்று சரணம் ஐயா சரணம் எனச் சொல்லிவிட்டு, மீண்டும் தமது சுயலாப அரசியலை தொடர ஆரம்பமாயினர்.
இடைத்தங்கல் முகாம்கள் என்றால், ஓம் அது நல்லவிடயம் நன்றாகவே நடக்கிறது அரசின் நடவடிக்கைளில் எங்களுக்கு பூரண நம்பிக்கை மாத்திரமல்ல பூரண திருப்தியும் கூட என்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அடுத்து 12000 புலிகள் அடைக்கப்பட்டுள்ளார்களே, ஓம் அதற்கு என்ன? அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கா விட்டால் அரசு அதற்கான விடயங்களை செய்யும் என்ற பூரண நம்பிக்கை உண்டு, இது சட்டத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்று கூறி வெளிநாடுகளில் அஞ்சாவாசம் புரிந்தவர்களுக்கு இலங்கையில் அரசியல் பிச்சை வழங்கிய மஹிந்தவின் ஆட்சிக்கு எவ்வித பங்கமும் விளைவிக்காதவர்களாக தம்மை காட்டிக்கொண்டனர்.
விழலுக்கு இறைத்த நீர் வாய்கால் வழியோடி புல்லுக்குமங்கு பொசியுமாம் என்பது போல், சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் பூனைகள் போல் மஹிந்தவின் அடுப்படியில் பதுங்கிக்கிடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஊடகவியலாளர் மாநாடொன்றில் நிமிர்ந்திருந்து பேச வைத்துள்ளது.
மறுபுறம் திருவேங்கடம் வேலும்பிள்ளை மரணமானார், எமது சமுதாயத்தில் மரணத்தில் நல்ல மரணம் கெட்ட மரணம் என பேசுகின்ற வழமைகளும் உண்டு. அந்தவகையில் இந்த தேசத்திற்கு எத்தனையோ தொண்டுகளை செய்த மனிதர்களின் மரணங்கள் எவ்வாறு அமைந்திருந்தது என்பதற்கு எதையும் நான் ஒப்பிட்டுக்காட்ட விருப்பவில்லை, ஆனால் வேலுப்பிள்ளை இந்தியாவில் இருந்து மகனது அரசாட்சியில் இராஜமரியதையுடன் தனது இறுதிக் கிரிகைள் நடைபெறவேண்டும் என வன்னிவந்திருந்தார். அந்த ராஜயோகம் மகனிடம் இருந்து கிடைக்காது போயிருந்தாலும் மஹிந்தவினால் கிடைக்கப்பெற்றிருந்தது, சிவாஜிலிங்கத்திற்கு முதலில்லா லாபம்.
வேலுப்பிள்ளையின் மரணத்துடன் பார்வதியின் விடயம் வெளியே வந்தது. ஊடகங்கள் பேசின, இந்தியாவிற்கு அனுப்புங்கள் , வெளிநாடுகளுக்கு அனுப்புங்கள் என பல தரப்பாலும் கோரப்பட்டது, இது தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்டபோது இந்தியா விரும்பினால் அவர் இந்தியாவுக்குச் செல்லாம் அல்லது எங்கும் செல்லலாம் என்பது அவரது பதிலாக இருந்தது.
ஆனால் அவ்விடயத்தினை தற்போது கையாள்வதற்கு மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ளவர்தான் சிவாஜிலிங்கம். பார்வதி அம்மாவை இந்தியாவிற்கு அனுப்பதேவையில்லை எனவும் தமது பணத்தில் அவர்களது பிள்ளைகளிடம் அனுப்பி வைப்போம் அதற்கு இலங்கை அரசின் அனுமதி தேவையில்லை எனக் கூறி இலங்கை அரசாங்கத்தினை பவ்வியமாக காப்பாற்றியுள்ளார் சிவாஜிலிங்கம்.
அத்துடன் இந்தியா போன்ற ஓர் நாட்டுக்குச் சென்றால் பார்வதி ஊடகவியாளர்களின் களுகு கண்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை நன்கறிந்துள்ள சிவாஜிலிங்கம் பார்வதி எதாவது உளறிவிட்டால் அது இலங்கை அரசினை சங்கடத்தில் மாட்டிவிடும் என்ற விடயத்தில் தனது எஜமானர்களுக்கு மிகவும் விசுவாசமாகவுள்ளதாக தெரியவருகின்றது. அதனடிப்படையில் பார்வதியின் குடும்பத்தாரின் ஒத்தாசையுடன் பார்வதியை ஊடகவியலாளர்கள் நெருங்காதவாறு சிவாஜிலிங்கம் வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்த பிரபாகரனது தாயர், தான் தனது மகனுடன் இருந்த கடைசிகாலங்களில் கண்டுகொண்ட சில உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும் என சகலரும் எதிர்பார்கின்றபோது, பிரபாகரனது குடும்பத்தினர் சிவாஜிலிங்கத்துடன் இணைந்து நின்று இத்துரோகத்திற்கு துணைபோகின்றனர். இலங்கை அரசின் ஏற்பாட்டில் சிவாஜிலிங்கத்தின் மேற்பார்வையில் பார்வதி எங்கோ ஓர் இடத்தில் மிகவும் சொகுசாக வைத்திருக்கப்படுவார். அல்லது எவ்வித தகவல்களும் வெளியே விடப்படமாட்டாது என இலங்கை அரசிற்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குடும்பத்தினருடன் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது இலங்கைத் தமிழர் வேலுப்பிள்ளையின் குடும்பத்திற்கு தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையை உணர்ந்து கொள்ள முடியும் என நம்புகின்றேன்.
0 comments :
Post a Comment