Tuesday, January 19, 2010

சிங்களத் தேசியவாதி தமிழரின் நண்பனா?

தமிழரின் எதிரிக்கு எதிரியாகினால் சிங்களத் தேசியவாதி தமிழரின் நண்பனா? - கேள்வி எழுப்புகிறார் பிரெஞ்சு ஊடகவியலாளர்

ஒரு பொருத்தமற்ற வேட்பாளராகவே எல்லோருக்கும் அவர் தோன்றினார். ஆனால் - சிறிலங்காவின் அதிகார மையத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறார் முன்னாள் படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படைகளை வெற்றி பெற வைத்தவர்களில் மிக முக்கியமான நபர் அவர் ஒரு காலத்தில், தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்தவர். இவ்வாறு எழுதியுள்ளார் - இனப் பிணக்குகள் தொடர்பு விவகாரங்களில் தேர்ச்சி பெற்ற பிரெஞ்சு ஊடகவியலாளரான மிலானி கூபி [Melanie Gouby].

தனது ஆய்வில் அவர் தொடர்ந்து எழுதுகிறார்:

திடீரென, அதிசயிக்கத்தக்க வகையில் அரச அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய அவர், தனது பழைய நண்பருக்கு எதிராகத் தேர்தல் களத்தில் குதிக்கப் போகிறார் என அறிவித்தார்.

26 வருடங்கள் தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த வசந்த காலத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தற்கு நன்றிக் கடனாகத் தன்னை மீண்டும் ஒரு தடவை சிங்களத் தேசியவாதிகள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற எண்ணத்தில் முன்கூட்டியே அரச தலைவர் தேர்தலை நடத்துகிறார் மகிந்த ராஜபக்ச.


புலிகள் மீதான வெற்றியை முதலீடாக்கி தனது பதவிக் காலத்தை அதிகரித்துக் கொள்வதே அவரது நோக்கம்.


அரச தலைவருக்கான தேர்தல் ஜனவரி 26ஆம் நாள் நடக்கும் என அறிவிக்கப்படும் வரையில் மகிந்த ராஜபக்ச வென்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தனக்குப் போட்டியாக பொன்சேகா களத்தில் குதிப்பார் என்பதை அவர் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க மாட்டார்.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீர்க்கமான முடிவுகளை எடுத்த ஒரு படை ஆள் என்கின்ற போதும், பொன்சேகா எதிர்க் கட்சிகளால் விருப்பத்துடன் தேர்தெடுக்கப்பட்ட ஒருவர் கிடையாது.


சிறுபான்மைத் தமிழர்களுக்கு நிச்சயமாக அவர் விருப்புக்குரியவர் அல்லர். எது எப்படி இருந்தாலும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அனைத்து சிறிலங்கா மக்களையும் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு” கோரப் போவதாகக் கடந்த புதன் கிழமை அறிவித்தது.


தேர்தல் பரப்புரைகள் இனப் பிரச்சினையைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் அது தொடர்பில் இரு முக்கிய வேட்பாளர்களிடமும் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.


தற்போது அரச தலைவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியைத் தான் ஆட்சிக்கு வந்தால் ஒழித்து விடுவதில் பொன்சேகா உறுதியாக இருக்கிறார்.


தமிழர் விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் ஊழலை ஒழிக்கப் போராடப் போவதாகவும் பொன்சேகா மேலும் சொல்கிறார்.


முன்னாள் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தமிழ் மக்களின் நிலங்களில் இருந்து படையினர் அகற்றப்படுவார்கள் என்றும் கூட அவர் உறுதி அளித்திருக்கிறார்.


ஆனால், பொன்சேகா ஒரு தெளிவான சிங்களத் தேசியவாதி. அத்துடன் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதாகவோ, தமிழர்களுக்கு என்ன அரசியல் தீர்வை வழங்கப் போகிறார் என்பது தொடர்பாகவோ அவர் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.


தமிழர்கள் தொடர்பில் அவர் திடீரெனக் காட்டி வரும் காதல் தேர்தல் கால நகர்வு என்றே இயல்பாகக் கணிக்கப்படுகிறது.


“என்னைப் பொறுத்த வரையில் நான் அவரை நம்பவில்லை. சிறுபான்மையினருக்கு இங்கே இடம் இல்லை என்று அவர் தரைப் படைத் தளபதியாக இருந்த போது எழுத்து மூலமாக அறிக்கை விடுத்துள்ளார்” எனச் சுட்டிக் காட்டுகிறார் ஷீலா ரிச்சர்ட்ஸ். கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வருகிறார்.


“ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் பேச்சு அல்லது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல்களின் பின்னணியில் படையினரும்கூட இருக்கின்றனர்” என்கிறார் அவர்.


தகவல்களை வெளியிடுவது தொடர்பான சுதந்திரத்தைப் பேணும் வகையிலான சட்டங்களைத் தான் கொண்டு வருவார் என உறுதி அளித்துள்ள பொன்சேகா, அண்மைக் காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரச தலைவரின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சவே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை யார் பொறுப்பேற்பது மற்றும் சண்டையின் போது பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டது தொடர்பில் யார் கண்டனங்களுக்கு உள்ளாவது என்பனவே பொன்சேகாவிற்கும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் இடையிலான மோதலின் அடிநாதமாக இருக்கின்றன.


26 வருடங்கள் தொடர்ந்த உள்நாட்டுப் போரின் பின்னர் கடைசியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போரில் கட்டளைகள் அனைத்தையும் பொன்சேகாவே சிறிலங்காப் படையினருக்கு விடுத்தார். எனினும் அந்த வெற்றிக்குத் தானும் தனது தம்பியுமே காரணம் என்று மகிந்த உரிமை கொண்டாடினார்.


இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்களைத் தரும்படி கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிகாரிகள் சரத் பொன்சேகாவிடம் கோரியதைத் தொடர்ந்தே உயர் அதிகாரத்தில் இருந்த இந்த இரு தரப்பாருக்கும் இடையில் பிணக்குகள் தெளிவாக வெளிக்கிளம்பத் தொடங்கின.


தான் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் அத்தகைய விசாரணைகள் இடம்பெறுவதை வரவேற்பார் எனச் சில வாரங்களின் பின்னர் பொன்சேகா கூறினார். அத்துடன் குறிப்பிடப்படும் போர்க் குற்றங்கள் அனைத்திற்கும் கோத்தபாயவே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டினார்.


அதன் பின்னர் ஊடகங்களில் இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறிச் சேறுபூசிக் கொண்டிருந்த சமயத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிகூறிக் கொள்ளும் இந்த விளையாட்டு சிறிலங்கா வாழ் மக்களை முட்டாள்களாக்கி விடாது.


பலரைப் பொறுத்த வரையில் இரண்டு பிரச்சினைகளில் குறைந்த பிரச்சினையாகத் தெரிபவர் பொன்சேகா. அத்துடன் தற்போதைய அரசைக் கொண்டு நடத்துபவர்களுக்கு எதிராக நிற்கும் வல்லமை உள்ள ஒரு வேட்பாளர் அவர் என்றும் மக்கள் கருதுகிறார்கள்.


“ஒன்றில், மோசமான ஊழல் நிறைந்த அரசியலமைப்பின் படி மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஆட்சியை குடும்பத் தொழிலாக நடத்துபவர்களை, அல்லது கடந்த காலங்களில் தான் கொண்டிருந்த கொடூரமான போர் கள அனுபவங்களுக்காக எதிர்க் கட்சிகளால் வாடகைக்குப் பிடிக்கப்பட்டுள்ள முன்னாள் தளபதியைத் தெரிவு செய்ய வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்” என முறையிடுகின்றார் 22 வயதான மாணவர் சமத் கம்மம்பிலா.


“போரைத் தலைமையேற்று நடத்திய, மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு மறுத்த பொன்சேகாவிடம் இருந்து எதை எதிர்பார்ப்பது? அவர் தான் தரைப் படையினருக்குத் தலைமை தாங்கினார். அதே சமயம், ராஜபக்ச மீண்டும் தெரிவானால் அரச தலைமை என்பது கர்ண கொடூரமானதாக இருக்கும்” என்கிறார் ஷீலா ரிச்சர்ட்ஸ்.


ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் பொன்சேகா உண்மையிலேயே நாட்டம் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும்கூட, சிறிலங்கா அரச நிர்வாகத்தின் யதார்த்தத்தை அவர் விரைவில் உணர்ந்து கொள்வார்.


“ஊழல் அதிகாரத்திற்கு மிகவும் நெருக்கமான பின்னணயில் இருந்தே பொன்சேகாவும் வந்திருக்கிறார். தரைப் படையின் தளபதியாக அவர் இருந்திருக்கிறார். இன்றைய போக்கில், ஊழலை ஒழித்து எல்லாவற்றையும் புரட்டிப் போடுவது என்பது மிகக் கடினமானது. எனவே அவரது உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்று தோன்றவில்லை” என்று தெரிவிக்கிறார் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை.


இவற்றை எல்லாம் பார்க்கும் போது, தாங்கள் எதிர்பார்க்கின்ற வசதி வாய்ப்புக்களையும் பொருளாதார மாற்றத்தையும் பொன்சேகா கொண்டு வருவார் என்பதில் சிறிலங்கா மக்களுக்கு உண்மையில் சந்தேகம் இருக்கிறது.


“தங்கள் வயிறு நிரம்ப வேண்டும், ஒரு வீடு, ஒரு வேலை இவை தான் பெரும்பாலான மக்களுக்குத் தேவை. தங்களது உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவை குறித்து மக்கள் மறந்து போய் நீண்ட காலமாகி விட்டது. சர்வாதிகார ஆட்சி என்பது இயல்பானது என்று சிந்திக்கின்ற அளவிற்கு போர் அவர்களை மூளைச் சலவை செய்துள்ளது” என்கிறார் அந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்.


பொன்சேகா தனது தேர்தல் பரப்புரைகளின் போது பொருளாதார விடயங்களைத் தொடுவதில்லை. வாழ்கைச் செலவைக் குறைப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பன தவிர்த்து பொருளாதாரம் குறித்து வேறு எதுவும் அவரது கொள்கை வெளியீட்டிலும் இடம்பெற்றிருக்கவில்லை.


உண்மை என்னவென்றால் சிறிலங்காவின் பொருளாதார விவகாரங்கள் வெளிநாட்டுச் சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பது தான். தமக்குரிய பங்குகளைப் பெறுவதற்காக சிறிலங்கா மீது தமது செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போடுகின்றன.


சிறிலங்காவின் அரசியலில் தலையீடு செய்த நீண்ட வரலாறு புதுடில்லிக்கு இருக்கின்றது. அத்துடன் - சரத் பொன்சேகாவைத் தரைப் படைத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலக்கும் விடயத்தில் துப்புக் கொடுத்ததற்காக சிறிலங்கா இந்தியாவிற்கு நன்றிக் கடனும் பட்டுள்ளது.


இந்தியாவின் இந்த நடவடிக்கை பொன்சேகாவை சீனாவை நோக்கித் தள்ளியள்ளது போல் தோன்றுகிறது. புலிகளுக்கு எதிரான போரின் போது மிகப் பெரியளவில் சிறிலங்காவிற்கு உதவிய நாடு சீனா.


சிறிலங்கா மீண்டெழுந்து வருவதில், தெற்காசியாவில் அதன் பெரிய அயல் நாடான இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டி இருக்கிறது.


எப்படி இருப்பினும் போர் நடந்து கொண்டிருந்த போதும் சரி அது முடிந்த பின்னரும் சரி அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீது கொஞ்சம் தாக்கம் செலுத்தியே வந்திருக்கிறது.


இந்தத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கப் போகிறவர்கள் என்று அவதானிகள் கூறுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு, தாங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட கொடூரமான அண்மைய நிகழ்வுகளை மறப்பது கடினமானதாகத்தான் இருக்கும்.


எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்வரும் 26ஆம் நாள் பொன்சேகாவுக்கு வாக்களிப்பார்களா?
(நன்றி புதினப்பலகை)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com