Wednesday, January 20, 2010

ஹைதராபாத்தில் கொந்தளிப்பு: உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹைதராபாத்: தனி தெலுங்கானா கோரி உயிர் நீத்த மாணவர் வேணுகோபாலின் இறுதி ஊர்வலத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து போலீஸார் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா கோரி மாணவர்கள் பந்த் நடத்துவதால் தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் அடுத்தடுத்து நடந்த தீக்குளிப்பு சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை ஒரு மாதத்துக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் தெலுங்கானா போராட்டங்கள் கடந்த சில தினங்களாக சற்று அமைதியான முறையில் நடந்து கொண்டிருப்பதாக தெரிந்தது.

எனினும் உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் தலைமையில் பல்வேறு கல்லூரி மாணவர்களும், தெலுங்கானா போராட்டக் குழுவினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திவந்தனர்.

கடந்த வாரம் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டி.ஆர்.எஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அரசுக்கு 29ம் தேதி வரை கெடுவிதித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று உப்பல் கல்லூரியை சேர்ந்த வேணுகோபால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில், மாணவர் வேணுகோபாலின் உடலை இன்று காலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் திரண்டனர்.

உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று சட்டசபை கட்டடத்திற்கு அருகில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்குக் கொண்டு செல்ல மாணவர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி ஊர்வலமாக அவர்கள் கிளம்பினர். ஆனால் அதற்குப் போலீஸார் அனுமதிக்கவில்லை. மாணவியர் விடுதி அருகே வந்த ஊர்வலத்தை போலீஸார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கலைந்து போகுமாறு கூறினர்.

ஆனால் மாணவர்கள் கேட்கவில்லை. மாறாக போலீஸாருடன் மோதலில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். மேலும், தடியடியிலும் இறங்கினர். இதனால் மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அந்த இடமே போர்க்களம் போல மாறியது.

போலீஸாரின் சரமாரியான தாக்குதலால் பல மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்த போலீஸார், பின்னர் வேணுகோபாலின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்னதாகவே, நேற்றிரவு 18 வயது கல்லூரி மாணவி தனி தெலுங்கானாவை வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்டார்.

சுவர்ணா என்ற இந்த பி.எஸ்சி முதலாமாண்டு மாணவி, மெஹபூப்நகர் மாவட்டத்தில் கொத்தகோட்டா என்ற ஊரில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவந்தார்.

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தனி அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டு, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சுவர்ணா தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தெலுங்கானா தனி மாநிலம் கிடைக்காதா என்ற ஏக்கத்தால் விரக்தியடைந்து இந்த முடிவுக்கு வந்ததாக அவர் தற்கொலை செய்யும் முன் எழுதிவைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தெலுங்கானா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றும் நாளையும் முழு அடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த இரு தற்கொலை சம்பவங்களும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் கூட்டமைப்பினரின் பந்த் காரணாமாக இன்று தெலுங்கானா பகுதியில் உள்ள வாரங்கல், ரெங்காரி ரெட்டி, கரிம்நகர், கம்மம், நல்கொண்டா, ஆகுலாபாத், மெகபூப்நகர், நிஜாமாபாத் உள்பட 10மாவட்டங்கள் முடங்கின.

அங்கு பஸ்கள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டன. பள்ளி-கல்லூரிகள் இயங்கவில்லை. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. வங்கி ஏ.டி.எம். பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழு அடைப்பின் போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க ஐதராபாத் நகரில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. அதிரடிப்படை போலீசார் நகரம் முழுவதிலும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

காங். எம்எல்ஏக்கள் டெல்லி புறப்பட திட்டம்:

இதற்கிடையே, தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.சி.க்கள் ராஜினாமா குறித்து இன்று நடத்த இருந்த கூட்டத்தை நாளை மாலை ஒத்திவைப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும், கூடிய விரைவில் தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லிக்கு சென்று மேலிடத்தில் தெளிவான ஒரு உத்தரவாதத்தை தருமாறு வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment