மெல்போர்னில் இனப்பாகுபாடு உள்ளது: ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரி ஒப்புதல்
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இனப்பாகுபாடு காரணமும் உண்டு என்று விக்டோரியா பகுதிக்கான காவல்துறை துணை ஆணையர் கென் ஜோன்ஸ் கூறியுள்ளார். இந்தியர்கள் மீதான தாக்குதலில் இனப்பாகுபாடு இல்லை என்று ஆஸ்திரேலிய அரசுத் தரப்பில் மறுக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக உயர் போஸீஸ் அதிகாரி ஒருவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், மற்ற வளர்ந்த நாடுகளை விட எங்கள் நாட்டில் குறைந்தளவு கொலைகளும் கற்பழிப்புகளும் நடைபெறுகின்றன. அதுபோல், இனப்பாகுபாடு தாக்குதல்களும் குறைந்தளவில் தான் உள்ளன என்றும் கென் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
''ஆளில்லா இடங்களில் நடமாடுவதற்கு இந்தியர்களை குறை கூறுவது தவறு. நள்ளிரவு நேரங்களில் பூங்கா போன்ற பகுதிகளுக்குச் செல்வோர் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இது எங்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது'' என்றும் அவர் தெரிவித்தார்.
''தாக்கப்படும் இந்தியர்களிடம் பணம் அல்லது பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. இச்சம்பவங்கள் இனப்பாகுபாடு காரணமாக நடைபெறும் திட்டமிட்ட தாக்குதல் தான்'' என்று சமீபத்தில் தன்னை சந்தித்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா எடுத்துக் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரி அதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment