Monday, January 18, 2010

பாதுகாப்பை பலப்படுத்த கோருகின்றார் ஜனாதிபதி.

எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலின் நிமிர்த்தம் இடம்பெற்ற வன்செயல்களினால் இருவர் உயிரிழந்த பின்னர் நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாட்டின் ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

அரச ஆதரவாளர் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றது. ஆனால் குறிப்பிட்ட நபர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் ஒருவரின் தலைமையில் இயங்கிய காடையர் குழுவைச் சேர்ந்தவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரது வீடு மீது தாக்குதல் மேற்கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தமது தரப்பினராலேயே அவர் கொல்லப்பட்டதாக எதிர்த்தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதே நேரம் மாத்தறை பிரதேசத்தில் 58 வயதுடைய ஜெனரல் பொன்கேகாவிற்கு ஆதரவான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலநறுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள தேர்தல் வன்முறைகளின் போது பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் , வாகனங்கள் பலவும் நாசமாக்கப்பட்டும் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலைமைகளையிட்டு ஜனாதிபதி மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பேச்சாளர் சந்திரபால லியனகே பாதுகாப்பினைப் பலப்படுத்தி இந்நிகழ்வுகள் மேலும் இடமபெறாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் மக்கள் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிப்பதற்கான சூழ்நிலை ஒன்றை பேணுமாறும் ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment