வன்முறைகளுடன் சூடுபிடித்துள்ள ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் - புன்னியாமீன்
ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26ஆந் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களப் பரீட்சையில் இறங்கியுள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமிருக்கும் இந்நிலையில் (ஜனவரி 18 வரை) தேர்தல் தொடர்பில் 694 முறைப்பாடுகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக குற்றவியல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்திருந்தார். இதில் சந்தேகநபர்கள் தெரியாத முறைப்பாடுகள் 387 உம் சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகள் 307ம் அடங்கும். சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகளில் 123 முறைப்பாடுகள் விசாரித்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.
ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு இதுவரை 4 பாரதூரமான சம்பவங்களாக {ஹக்கம, புத்தளம், வாரியபொல குருநாகல், வெலகெர ஆகிய பகுதிகளில் 4 பேர் தேர்தல் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர். முதலாவது அரசியல் படுகொலை ஜனவரி 12ஆந் திகதி இலங்கையின் தென்மாகாணத்தில் தங்காலை பகுதியில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் குசுமாவதி என்பவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 8 பேர் காயமடைந்தனர். குசுமாவதியின் மரணம் குறித்து கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ குசுமாவதி தனது கட்சி ஆதரவாளர் என்றும், இக்கொலைச் சம்பவமானது மிலேச்சத்தனமான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த முதலாவது கொலையைப் புரிந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் என குற்றஞ் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 17ஆந் திகதி இரண்டாவது அரசியல் தேர்தல் வன்முறை கொலையும் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றுக்கு சென்றுகொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆனந்த சமன்குமார என்ற 19 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டார். இந்த இளைஞன் ஆனமடுவ, தெனிங்கலவைச் சேர்ந்தவராவார். இந்த இளைஞனுக்கு அஞ்சலிச் செலுத்த ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் வாரியபொலவில் ஜனவரி 18ஆம் திகதி அதிகாலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். தேர்தல் வன்முறையில் இது 3வது கொலையாகும். இச்சம்பவத்தில் எச். எம். தம்மிக்க ஹேரத் (33) என்பவரே கொல்லப்பட்டார். வாரியபொல பிரதேசத்தில் சம்பவ தினம் பத்து பேர் சேர்ந்து தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழுவினர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது தடிகளால் தாக்கியுள்ளனர் எனவும் இதன்போதே தம்மிக்க ஹேரத் என்பவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பலிக்குப் பலி வாங்கும் இத்தேர்தல் வன்முறைக் கலாசாரத்தில் 18ஆம் திகதி இரவு நேரத்தில் பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின் குருநாகல், வெலகதர பிரதேசத்திலுள்ள வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறாக நாளுக்குநாள் வன்முறைக் கலாசாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதுவரை நடந்த 4 கொலைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் இருவரும், பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும், இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான வாய்ப் பேச்சி மோதலாக மாத்திரம் அன்றி ஆயுதப் பிரயோகங்களாகவும் அதிகரித்து வருகின்றன. கிரெனைட் வீச்சுக்கள், கைத்துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றனவும், கடந்த ஒரு வாரத்துக்குள் அதிகரித்து வருகின்றன. கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்படுதல், காரியாலயங்கள் தாக்கப்படுதல், என்பன சாதாரண நிகழ்வுகளாக இடம்பெறத் தொடங்கியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். வாகனங்கள், வீடுகள் போன்ற உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மக்களின் ஜனநாயக உரிமைகளில் வன்முறையும் ஒன்றா என்று ஐயப்படும் வகையில் இவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தேர்தல் காலங்களில் வன்முறை கலாசாரங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு பொதுவானவை.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் தொடர்பான வன்முறை முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் பொலிஸார் கூறுகின்றனர். சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் 289 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் அதிகமானோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 164 பேர் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர்.
இதேநேரம், கடந்த 13 ஆம் திகதி பொலநறுவையில் ஆளும் தரப்பு, எதிர்த் தரப்பு கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட வேண்டிய 21 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்கம பகுதியில் பிரசாரக் கூட்டமொன்றிற்கு சென்று கொண்டிருந்த பஸ்லொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. வாரியபொல பிரசார சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த ஒருவர் மீது 6 மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்கி அந்நபரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான 6 சந்தேகநபர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.
தேர்தல் காலத்தில் வன்முறைகள் உருவாகுவதை எக்காரணத்தையிட்டும் எச்சமூகத்தாலும் அனுமதிக்க முடியாது. வன்முறைகள் தலைதூக்காத விதத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ள போதிலும் கூட அந்த அறிவுறுத்தல்கள் உறுதியானவையாக உள்ளனவா என்பது கேள்விக்குறியே.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு எவரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். தேர்தல் செயலகத்தில் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் உத்தரவுகள் உதாசீனப்படுத்தப்படுவதாகவும், இந்த நிலைமையின் கீழ் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊடகங்களை கண்காணிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியின் பணிப்புரைகளை குறித்த ஊடகங்கள் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகங்கள் தொடர்ந்தும் உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால் குறித்த அதிகாரியை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அரச உத்தியோகத்தர்கள் 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என்ற போதிலும் எவரும் அதனைப் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் வன்முறையில் ஈடுபடுவோர் எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையாளர் விசேட அதிகாரங்களைக் கொண்டவராக விளங்குகிறார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு சுமுகமாக நடை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பணிப்புரைகளை வழங்கும் அதிகாரம் அவருக்குண்டு.
தேர்தல் தொடர்பான சிறு சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்தும் விதத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்குவதாக தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயத்தில பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதே அத்தகைய அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கும் அறிவுரை ஆகும். சிறு வன்முறைச் சம்பவங்களைப் பெரிதுபடுத்துவது ஊடகங்களுக்கும் அழகல்ல.
தேர்தல் கடமையைப் பொறுத்த வரை எமது தேர்தல் ஆணையாளர் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றவராக விளங்குகிறார். கூடுதலான தேர்தல்களை கச்சிதமாக நடத்தி முடித்த நிர்வாகத்திறன் மிகுந்தவர் அவர். எதுவித பக்கச்சார்புமற்ற விதத்தில் தேர்தல்களை நடத்துவதென்பது மிகுந்த பொறுப்பு மிக்கதாகும். இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே அமைந்திருக்கும் என எதிர்பார்க்க முடியும்.
ஜனநாயக நாடொன்றில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக உரிமை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது சுயசெயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவித்தல் என்பது ஜனநாயக உரிமை மீறலாகும். தெற்காசியாவிலே கல்வியறிவில் முன்னணியில் உள்ள எமது இலங்கை இவ்விடயத்தையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும். வன்முறைகள் வாயிலாக எதனையும் சாதித்துவிட முடியாதென்பது யதார்த்தமும் உண்மையாகும்.
மறுபுறமாக தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மீறிச் செயற்படுவதோ அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ ஆரோக்கியமான நடவடிக்கைகளல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் மத்தியில் வெறுப்பும் அதிருப்தியுமே உருவாகும். வன்முறையில் சம்பந்தப்படுவோர் இதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தினுள் எதுவிதமான மனமாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. அதற்கு மாறாக மக்களிடமிருந்து வெறுப்பையே சம்பாதித்துக் கொள்ள முடியும். தற்போது இலங்கையிலும் இதுவே ஏற்பட்டு வருகின்றது.
0 comments :
Post a Comment