Wednesday, January 20, 2010

நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை புகுந்தது

கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் பறிமுதல்
நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குனர்கள் ரவிக்குமார், முருகதாஸ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், ஏராளமான சொத்துக்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலில், சினிமா துறையினர் பெயர் அதிகமாக இடம்பெறும். மார்க்கெட் உள்ள பிரபலங்கள், படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை கோடி கோடியாக உயர்த்துவதால், அவர்களது பெரும்பாலான பணப் புழக்கங்கள், கறுப்பு இவ்வளவு - வெள்ளை இவ்வளவு என்ற வகையிலேயே இருக்கும். நடிகர் விஜயகாந்த் உட்பட பலர், வருமான வரித்துறையினரின் ரெய்டுகளுக்கு இலக்காகி உள்ளனர்.

முன்னணியில் இருக்கும் திரைத்துறையினர் பலர், தொடர்ந்து வருமான வரி கட்டாமல் ஏய்த்து வருவதாக, அத்துறையினருக்கு புகார்கள் குவிந்தன. இதன் எதிரொலியாக, நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குனர்கள் ரவிக்குமார், முருகதாஸ் மற்றும் ஆதித்யா ராம் என்ற தெலுங்கு திரைப்பட பைனான்சியர் என ஐந்து பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

நடிகர் சூர்யாவின் வீடு, சென்னை தியாகராய நகரிலும், அடையாறிலும் உள்ளது. நடிகர் வடிவேலு, முருகதாசின் வீடு சாலிகிராமத்திலும், இயக்குனர் ரவிக்குமார் வீடு ஆழ்வார்பேட்டையிலும் உள்ளன. இவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர், பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடி ரெய்டை நடத்தினர்.

இது தொடர்பாக, வருமான வரித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:சில திரையுலக பிரமுகர்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக எங்களுக்கு, நம்பகமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சூர்யா, வடிவேலு, ரவிக்குமார், முருகதாஸ் மற்றும் ஒரு பைனான்சியர் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம். இந்த பைனான்சியர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர். புதிதாக சினிமாவுக்கு பைனான்ஸ் செய்யத் துவங்கி உள்ளார். வருமான வரித்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் தலைமையிலான குழுவினர், இந்த சோதனையை நடத்தினர். "ஆதவன்' திரைப்படத்துக்கும், இந்த சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்தத் தனி மனிதரையும் குறிவைத்து ரெய்டு நடத்தப்படவில்லை. எங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டது. சோதனைக்கு உள்ளான அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.

ரெய்டு நடந்த இடங்களில் இருந்து சில லட்சம் ரூபாய்களைக் கைப்பற்றியிருக்கிறோம். ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இந்த சோதனை, சில இடங்களில் இன்று காலை வரை நீடிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், ஆவணங்கள், நகைகள் மற்றும் ரொக்கம் பற்றிய விவரங்கள் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை நடந்த அனைத்து இடங்களிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீடு மற்றும் அலுவலகம் தொடர்பானவர்கள் யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால், அந்த இடங்கள் நேற்று மாலை வரை பரபரப்பாக காணப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகள், ரெய்டு நடந்த இடத்துக்கே உணவை வரவழைத்து சாப்பிட்டனர்.

நடிகர் வடிவேலு வீட்டில் நடந்த ரெய்டின் போது அவர் வீட்டில் இல்லை. வெளியூரில் இருந்த அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டார். அவரது வீட்டில் சோதனை நடப்பது, இது இரண்டாவது முறை. ஏற்கனவே, 2005ல் ஒரு முறை ரெய்டு நடத்தப்பட்டது. வடிவேலு வீட்டின், பூட்டிய கதவின் உள் பகுதிக்குள் போலீசார் நிறுத்தப்பட்டனர். முருகதாஸ் வீட்டின் முன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெளியில் போலீஸ் நடமாட்டம் இல்லை.

நடிகர் வடிவேலுவின் மதுரை பங்களாவிலும் ரெய்டு : மதுரை ஐராவதநல்லூரில் நடிகர் வடிவேலு பங்களா உள்ளது. இங்கு அவரது தாயார் பாப்பம்மாள், சகோதரர்கள் ஜெகதீசன், கணேசன் மற்றும் உறவினர்கள் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை, வடிவேலு தனது குடும்பத்தாருடன் கொண்டாடுவது வழக்கம். இதற்காக கடந்த 13ம் தேதி வடிவேலு மதுரை வந்தார். வருமானத்துக்கு அதிகமாக வடிவேலு சொத்து சேர்த்து வருவதாகவும், வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய வரியை, முறைப்படி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், சென்னை வருமான வரித் துறையினர் கவனத்துக்கு சென்றது.

இதையடுத்து, சென்னையில் உள்ளவடிவேலு பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். மதுரையில் வடிவேலு இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், நேற்று காலை 10 மணிக்கு இரண்டு கார்களில் சென்னை வருமான வரித்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் மூன்று பெண் அதிகாரிகள் உட்பட எட்டு பேர் மதுரைவந்தனர். பங்களாவில் வடிவேலு இருந்தார். சொத்து குவிப்பு மற்றும் வரிஏய்ப்பு தொடர்பாக வடிவேலு, அவரது தாயார் பாப்பம்மாள், சகோதரர்கள் ஜெகதீசன், கணேசன் மற்றும் குடும்பத்தினரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் மாலை 3மணியளில் புறப்பட்டு சென்றனர். சோதனையின் போதுபல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைபற்றியதாக தெரிகிறது.

வடிவேலு பற்றி தம்பி பெருமிதம் : சென்னை வருமான அதிகாரிகள் சோதனை செய்தது குறித்து வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் கூறியதாவது: நான்கைந்து அதிகாரிகள் இன்று (நேற்று) காலை எங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது அண்ணன் வடிவேலும் இருந்தார். இச்சோதனைக்கு வடிவேலு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிகாரிகள் எங்களிடம் வேறெதுவும் கேட்கவில்லை. சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களை வெளியில் செல்லவும், வெளியில் இருந்து ஆட்கள் உள்ளேவரவும் அனுமதிக்கவில்லை. இச்சோதனை சில மணி நேரம் நடந்தது. அதிகாரிகள் சென்றதும், அண்ணனும் காரில் சென்னை புறப்பட்டு சென்றார், என்றார்.

ஜவுளிக் கடைகளில் அதிரடி சோதனை : சென்னை, வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.,சாலை ஜவுளிக் கடைகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில், வீராஸ் குழுமத்தின் ஜவுளிக் கடைகள் உள்ளன. இங்கு நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அடுத்தடுத்து மூன்று கடைகளில் சோதனை நடந்தது. தொடர்ந்து கடையின் உரிமையாளர், பங்குதாரர்கள் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நேற்றிரவிலும் சோதனை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்






No comments:

Post a Comment