Friday, January 29, 2010

கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'!

கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர்.

யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் சகோதரன். சகோதரியை இன்னும் நேசிக்கும் சகோதரன்' என்று குத்தலாக குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது கூகுள் என்பதை சகோதரனாகவும், அவனால் நேசிக்கப்படும் சகோதரியாக கூஜியையும் காட்டுகிறார்களாம். சமீபத்தில் கூகுள் நிறுவனம் சீனாவில் பெரும் சிக்கலை சந்தித்தது. கூகுள் தளத்தை உளவு பார்க்கத் தொடங்கியது சீன அரசு. மேலும், கூகுள் இணையதளத்திற்கு சென்சாரும் விதித்தது. கூகுள் இணையதளத்திற்குள் வைரஸ்களையும் அனுப்பியதால் கடுப்பாகிப் போன கூகுள், தனது அலுவலகங்களை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதாக எச்சரித்தது.

இதையடுத்து சீன அரசு சற்று இறங்கி வந்தது.

இந் நிலையில், தற்போது கூகுளை அப்படியே காப்பி அடித்து போலி சர்ச் என்ஜின் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் இணையதளத்தின் லோகோ மற்றும் பக்கங்கள் அப்படியே டிட்டோவாக கூஜி தளத்தில் உள்ளன.

இதேபோல யூடியூபில் உள்ளதைப் போலவே அப்படியே காப்பி அடித்து, YouTubecn.com இணையதளம் உள்ளது. ஒரிஜினல் யூடியூபில் உள்ள அத்தனையும் அப்படியே இதிலும் இடம் பெறுகிறது. அதேசமயம், சீனாவில் தடை செய்யப்பட்ட யூடியூப் வீடியோக்கள் இதில் கிடைக்கின்றனவாம்.

இந்த இரண்டு இணையதளங்களுமே ஒரே நாளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கலிபோர்னியா- பெர்க்லி பல்கலைக்கழகத்தின் பெர்க்லி சீனா இன்டர்நெட் திட்ட இயக்குநர் ஜியாவோ குயிங் கூறுகையில், இது கூகுள் நிறுவனத்தின் சொத்துரிமைப் பிரச்சனை மற்றும் சீன தணிக்கை பிரசசினை சம்பந்தப்பட்டதாகும்.

இந்த இரண்டு சவால்களையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கூஜி மற்றும் யூடியூப்சிஎன் ஆகியவை சந்தித்தாக வேண்டும். இதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என்று உறுதியாக கூற முடியாது. எனவே இந்த இரு தளங்களும் நீண்ட நாள் நீடிக்கும் என்பதையும் சொல்ல முடியாது என்றார்.

இந்த இரு இணையதளங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதுவரை இவற்றை தடை செய்யவோ, முடக்கவோ சீன அரசு நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இணையதளங்கள் மீது சீனாவின் தேசிய காப்புரிமை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அப்படியே அப்பட்டமாக கூகுள் மற்றும் யூடியூபின் இணையதளங்களை காப்பி அடித்து வெளியாகியுள்ள கூஜி மற்றும் யூடியூப் சிஎன் ஆகியவை குறித்து அது மெளனமாக இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் சுருக்கமான கருத்தைத் தெரிவித்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜெசிகா பவல் கூறுகையில், அந்த இணையதளங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம் என்பதுதான் அந்தக் கருத்து.

சீனாவைச் சேர்ந்த டார்வின் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஹாரிங்டன் கூறுகையில், அமெரிக்காவின் சட்டப்படி இதுபோன்ற செயல்களுக்கு வழக்குகள் பாயும். ஆனால் சீனாவில் அப்படி செய்ய வழியில்லை. நமது பிராண்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே வழக்குக்குப் போக முடியும் என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்த போலி இணையதளங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவின் நடவடிக்கை கவலை தருகிறது. இன்டர்நெட் சுதந்திரத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

கூகுள் மீதான சீனாவின் கட்டுப்பாடுகள், நெருக்குதல்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளேன். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. பிரச்சினை விரைவில் தீரும் என நம்புகிறேன் என்றார்.

போலி பொருட்களை படு அப்பட்டமாக வெளியிட்டு காசு பார்ப்பதில் சீனா பெரிய கில்லாடியாகும். ஏற்கனவே இந்தியாவின் 'பல்சர்' பைக்கை காப்பி அடித்து அப்படியே அதே மாடலில் வெளியிட்டு அதற்கு 'குல்சர்' என்று பெயரிட்டு விற்றவர்கள்தான் சீனாக்காரர்கள்.

ஆனால் உலக அளவில் முன்னோடியாக உள்ள கூகுளை அப்படியே காப்பி அடித்துள்ள அவர்களின் செயல் பலருக்கும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து அனேகமாக பேஸ்புக்கைக் காப்பி அடித்து ஒரு தளம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment