மகிந்தா சிந்தனை (வாசகர் ஆக்கம்.)
மகிந்தா சிந்தனை என்ற பெயரில் கடந்த தேர்தலை வெற்றிகொண்ட நாட்டின் ஜனாதிபதி தற்போது அதில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி மஹிந்த சிந்தனை 2என மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இரண்டாவது ஆட்சிக்கான மக்களின் ஆணையையும் கோரியுள்ளார். ஆரசியல் கட்சி ஒன்றினூடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அவரது பெயருடன் சிந்தனை என்ற விடயம், கட்சியின் உறுப்பினர்கள் எவரும் சிந்தனை இல்லாதவர்கள் என்ற தோற்றப்பாட்டை கொடுக்கின்றது.
ஆத்துடன் 14 மேற்பட்ட கட்சிகளினால் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மஹிந்த சிந்தனை 2 என பெயரிட்டுள்ளமை அல்லது அப்பெயரினை ஏற்றுக்கொண்டுள்ளமை அம்முன்னணியின் தனிமனித அதிகாரமே செயற்படுத்தப்படுகின்றது என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை நிருபிப்பதாகவுள்ளது.
சோக்கிறடீஸ் ஒரு நாளும் நான் உங்களுக்குச் சோக்கிறட்டீஸ் சிந்தனை தருகிறேன். பிளோட்டோ ஒரு நாளும் நான் பிளாட்டோ சிந்தனை தருகிறேன் என்று சொல்லவில்லை. கான்ற் ஒரு நாளும் நான் உங்களுக்கு கான்ற் சிந்தனை தருகிறேன் என்று சொல்லவில்லை. டார்வின் தனது கூர்ப்புத் தத்வத்தை சொன்னவுடன் அவரைக் குரங்காக உருவகப் படுத்திய செய்தியே நடைபெற்றது. மாக்ஸ் ஒரு நாளும் இந்தாபிடி மாக்ஸ்சிய சிந்தனையைத் தருகிறேன் என்று சொல்லவில்லை.
இப்படியே உலகிற்தோன்றிய மகான்களது சிந்தனைகள் மனித குலத்தை உயர்த்துவதாக இருந்ததால் மனிதசமுதாயம் அதை மறக்கவில்லை. பலவற்றை வாய்வழியாகக் காதாற்கேட்டு மனனஞ் செய்து காப்பாற்றினர். ஆனால் மகிந்தா ராஜபக்ஸ்ச என்ற ஒரேயொரு மாமனிதன்தான் நான் உங்களுக்கு மகிந்தா சிந்தனை தருகிறேன், அதைப்பெற்று உய்வடையுங்கள் என்று கூறுகிறார். ஓரு தேர்தல் வேலைத்திட்டத்திற்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வழிகாட்டும் சிந்தனைக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு கூட்டமே மகிந்த ராஜபக்ஸ்சவைச் சுற்றிப் புழுகுபாடி நாட்டை அழிவுக்குக் கொண்டு செல்ல உள்ளது.
இது பிரபாகரனது மாவீரர் உரையை அனர்ன் பாலசிங்கமே எழுதி வாசிக்கக் கொடுத்துவிட்டு பின்பு அதற்கு லண்டனில் தெளிவுரையும் பதவுரையும் வியாக்கினாமும் சொல்லும் பொழுது தலைவரின் ஒவ்வொரு வசனமும் இரத்தினம் போன்றது என்றது போல் தன்னைத்தான் புழுகாத கம்மாளன் மேலும் இல்லைக் கீழும் இல்லை என்பது போல் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் போகவேண்டிய அடுத்த அழிவுத் திட்டமாகும்.
மகிந்த சிந்தனை உலகத்திலுள்ள நூலகங்களிலுள்ள அத்தனை புத்தகத்திற்கும் நிகரானது என்ற தோறனையில் ஒரு புழுகுக் கூட்டம் புழகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவதற்குள் இலங்கையில் உள்ள நூலகங்களிலுள்ள நூல்களையெல்லாம் எடுத்தெறிந்துவிட்டு மகிந்த சிந்தனை என்ற ஒரே நூலையே வைக்கப் போகிறார்கள்.
இவ்வளவு காலமும் பைபிள் ஒன்றுதான் உலகிலுள்ள அனேக மொழிகளில் மொழிபெயர்த்த புத்தகமாகும். ஜனவரி 26 இன் பின் பைபிளை மகிந்த சிந்தனை தோற்கடிக்கப் போகிறது. இனிமேல் மக்கள் திருக்குறளைப் பற்றியோ குர்ரானைப் பற்றியோ பைபிளைப் பற்றியோ பேசத் தேவையில்லை. சர்வவியாபக பலபக்க அறிவைப் பெறக் குறுக்கு வழி இருக்கிறது. இருக்கவே இருக்கிறது மகிந்தா சிந்தனை. அது ஊழிக்காலம் மட்டும் வாழும். சிலவேளை ஜனவரி 27 இலங்கையின் ஊழித்தீர்ப்பு நாளோ குப்பையைக் கூட்டும் நாளோ தெரியவில்லை. இன்ச அல்லா! இருந்துபார்ப்போம்.
நவாஸ்
0 comments :
Post a Comment