ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் .., நகரம் தீப்பிடித்துள்ளது.
அதிபர் மாளிகையை கைப்பற்ற முயற்சி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். 4 மணிநேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்துள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் கூறியுள்ளார். காபூல் நகரங்களில் அதிபர் மாளிகை கட்டடம், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சகம் புகழ்பெற்ற செரீனா ஓட்டல் , சென்ட்ரல் பாங்க், உள்ளிட்ட பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் பல்வேறு கட்டடங்கள் தீப்பற்றி எரிகிறது. பல இடங்களில் பயங்கரவாதிகளுடன் , பாதுகாப்பு படையினர் பயங்கர துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் விவரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆப்கனில் அமெரிக்க மற்றும் ஐ.நா., படையினர் சுமார் 37 ஆயிரம் பேர் அங்குமுகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கனில் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க புலனாய்வு துறை அதிகாரிகள் 7 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். அமெரிக்க தூதரகம், ஐ.நா., அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவதே தலிபான்களின் இலக்காக இருந்து வந்திருக்கிறது. அங்கிருந்து அமெரிக்க படையினரை திரும்ப அழைக்கவும், ஒரளவு படையினரை குறைப்பதையும் அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டாலும் இது வரை இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காபூல் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். செரீனா ஓட்டல் அருகே முதலில் ஒரு கார் குண்டு வெடித்தது. தொடர்ந்து வணிக வளாகம் மற்றும் பாங்க் , அமைச்சரவை அலுவலகங்களில் பயங்கரவாதிகள் அதிரடி துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், , பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சப்தம் : அதிபர் கர்சாய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கவிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்ற பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆங்காங்கே குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் , பலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பல கட்டடங்கள் எரிவதாகவும் நேட்டோ படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பை போல தாக்குதல் : எத்தனை கட்டடங்கள் எரிகிறது , எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற முழு விவரம் இன்னும் வரவில்லை. பல கட்டடங்களில் பயங்கரவாதிகள் நுழைந்து கைப்பற்றியுள்ளதாகவும் ஏறக்குறைய மும்பையில் நடந்த தாக்குதல் போல இந்த அணுகுமுறையை பயங்கரவாதிகள் செயல்படுத்தியுள்ளதாக அங்கு முகாமிட்டுள்ள பிரபல இணையதள நிருபர் கூறியுள்ளார்.
அதிபர் கர்சாய் பேட்டி : அங்கு நடந்துள்ள சம்பவம் குறித்து அதிபர் கர்சாய் கூறியிருப்பதாவது: பயங்கரவாதிகள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இந்த சதி முறியடிக்கப்பட்டு விட்டது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு நுழைந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். முன்னதாக பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்து விட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.
நன்றி தினமலர்
0 comments :
Post a Comment