Monday, January 25, 2010

முருகன், விநாயகர், லட்சுமி, ஏழுமலையான் ஸ்டாம்புகள் -யு.எஸ்.

அமெரிக்க தபால் துறை சார்பில், இந்துக்களை கவருவதற்காக இந்துக் கடவுள்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்க நிறுவனம் ஒன்று. மொத்தம் ஏழு இந்துக் கடவுள்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை இது வெளியிட்டுள்ளது.

முருகன், விநாயகர், ஏழுமலையான், லட்சுமி, சிவன் பார்வதி, கிருஷ்ணர் மற்றும் ஷீரடி சாய்பாபா ஆகியோரின் உருவப் படங்களே இந்த தபால் தலைகளில் இடம் பெற்றுள்ளன. இது இந்துக் கடவுள்களுக்கு மரியாதை அளித்து வெளியிடப்பட்டுள்ளதா அல்லது ஸ்டண்ட்டா என்ற சர்ச்சை அங்கு வெடித்துள்ளது.

அட்லாண்டாவைச் சேர்ந்த யுஎஸ்ஏ போஸ்டேஜ்.காம் என்ற நிறுவனம்தான் இந்த தபால் தலைகளை தயாரித்து வெளியிட்டுள்ளது. அமெரிக்க தபால் துறைக்காக இவற்றை அது வெளியிட்டுள்ளதாம்.

இந்த தபால் தலைகள் குறித்து இந்த நிறுவனம் கூறுகையில், இவை செல்லத்தக்க தபால் தலைகளாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

மேலும் அது கூறுகையில், எங்களது இணையதளத்தில் இடம் பெற்றுள்ள இந்த தபால் தலைகளின் அச்சிட்ட வடிவத்தை எடுத்து அதை தபால் தலையாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

ஆனால் அமெரிக்க தபால் துறை தனது அதிகாரப்பூர்வ ஸ்டாம்ப் பட்டியலில் இவை இடம் பெறவில்லை என்பதால் இது ஸ்டண்ட்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இருப்பினும் இந்து அமைப்புகள் இந்த நடவடிக்கையை பாராட்டி வரவேற்றுள்ளன.

அமெரிக்காவில் இந்துக் கடவுள்களின் படம் தபால் தலைகளில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். ஒவ்வொரு தபால் தலையும் 44 சென்ட் மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. நீர் யார் என்று எமக்கு தெரியும், இன வாதிகளை ஆதரிக்காதேயும். உம்மை பற்றி நான் எழுதவோ?

    ReplyDelete