Friday, January 22, 2010

ஜே.வி.பி யும் ஐ.தே.க யும் இணைந்து அரசியலில் இராணுவவாதத்தைப் புகுத்தியுள்ளன.

அமைச்சர் டியூ குணசேகர இலங்கையில் முதன்முதலில் பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியது புலிகள் அன்றி ஜே.வி.பி. யே. இந்த நாட்டில் அரச பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி. யும் இணைந்து இராணுவ வாதத்தை அரசியலுக்குள் கொண்டுவந்துள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டி.யு.குணசேகர தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் ஜே.வி.பி. யினரின் வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஆதரிக்க முடியும் எனவும் அமைச்சர் இங்கு கேள்வி எழுப்பினார்.

குடிமக்கள் குரலுக்கான மேடை அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது –

'13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கைதூக்கிய ஒரே இடதுசாரி நான் மாத்திரமே. அந்த ஒரே காரணத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் 534 பேரை ஜே.வி.பி கொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த தீர்வு யோசனையையும் அந்தக் கட்சி முழுமையாக எதிர்த்தது. அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் ஜே.வி.பி. முன்னிறுத்தியுள்ள இராணுவத் தளபதியைப் படிப்பறிவுள்ள மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் எவ்வாறு ஆதரிக்க முடியும். தென் ஆசியாவில் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் அனைத்தும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டு ஜனநாயகத் தலைவர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அதுபோல இந்திய ஜனநாயக நாடாக இருந்தபோதும் அந்த நாட்டுப் பிரதமர் பாதுகாப்பு அதிகாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அரசியலை இராணுவமயப்படுத்தி இராணுவத்தை அரசியல் மயப் படுத்தும் கைங்கரியத்தில் ஜே.வி.பி யும் ஐ.தே.கட்சியும் இணைந்துள்ளன' என்றார்.

தமிழரை ஒடுக்கத் தயாராகவிருந்த பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிக்கமாட்டார்கள்
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இரண்டரை இலட்சம் படையினரை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறிய சரத் பொன்சோகாவை தமிழ் மக்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என அமைச்சர் டி.யு.குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்காக சரத் பொன்சேகா சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை தமிழ் மக்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் படைக்குப் புதிதாக இரண்டு இலட்சம் படையினரைச் சேர்த்து படைப் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தான் அரசிடம் கோரியதாகவும் பொன்சேகா தனது கடிதத்தில் கூறியிருந்தார். புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் இரண்டரை இலட்சம் படையினரை அங்கு நிலைநிறுத்த வேண்டும் என்றும் முப்படையைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் தனக்கு வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். தமிழரை ஒடுக்கத் தயாராக இருந்த பொன்சேகாவை தமிழ் மக்கள் எப்படி ஆதரிக்க முடியும்.

இங்கு உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் செயலாளர் ஸ்ரீதரன் கூறியதாவது – வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படிப்படியாக சுமுகநிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில் இராணுவ அதிகாரத்தின் கீழ் பழக்கப்பட்ட ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்து இன்றுள்ள சமுகநிலையைக் குழப்புவது அரசியல் சாணக்கியமாகாது என்றார்.

No comments:

Post a Comment